பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மாகுக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் மருத்துவர் சேர் இரத்தினசோதி சரவணமுத்து என்பவரை 1915 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவரின் கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு வடக்குத் தொகுதியிலிருந்து இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் கொழும்பு மாநகரசபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு ஆண்டுகளுக்கு இவரது குடியியல் உரிமை இரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30 ஆந் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்து போட்டியிட்டார். இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சட்டசபையில் அப்போதைய உதவிச் சபாநாயகர் எஃப். ஏ. ஒபயசேகராவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எச். எம். பீரிஸ். நேசம் சரவணமுத்து 8681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமைக்கு உரியவரானார். நேசம் சரவணமுத்து சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.