இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல் 1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார். ஜெபரத்தினம் ஜெ.ஹென்ஸ்மன், பொன்னம்மா ஆகியோருக்கு 1906.01.31 ஆம்நாள் பிறந்தவர். தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றியவர். கொழும்பில் மருத்துவராகப் பணியாற்றிய இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொன்னம்பலத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். 1947 ஆம் ஆண்டில் அக்கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் மேலவை உறுப்பினராகத் தெரிவானார். எனினும், அவர் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் முக்கிய உறுப்பினரானார். அக்கட்சியின் செயலாளராகவும் சிலகாலம் பணியாற்றினார். 1952, மற்றும் 1956 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மார்ச் 1960 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜூலை 1960, 1965 தேர்தல்களிலும் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1966ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்காக வீராவேசத்துடன் ஆங்கிலத்திலும், தமிழ்மொழியிலும் பேசும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அன்று நல்ல உடற்கட்டுடன், வலுவான தோற்றத்தைக் கொண்டிருந்த நாகநாதனை தமிழ் மக்கள் “இரும்பு மனிதன்” என்று அன்புடன் அழைத்தார்கள். 1970 தேர்தலில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட சி. அருளம்பலத்திடம் 508 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இவர் 1971-08-16 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.