1916 ஏப்ரல் 17 இல் காரைநகரில் பிறந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். தேர்தலில் வெற்றிபெற்ற சில நாட்களில் அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி அரசில் சேர்ந்து புதிய குடியரசு அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார். 1972 ஆம் ஆண்டில் இவரது கொழும்பு இல்லத்தில் வைத்து இவர் மீது இடம்பெற்ற கொலை முயற்சியில் உயிர் தப்பினார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் தா. திருநாவுக்கரசுவிடம் 18,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவர் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இக்காலத்தில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு 1981 மே 24 இல் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.