தமிழ்ப்பண்பாட்டில் உறைவிடம் என்பதற்கு அப்பால் வாழ்வின் அர்த்தமாக வீடு பொருள் தருகின்றது. விடு-அடிச்சொல்; விடுபட்டு இருப்பது ; கடமையிலிருந்து விடுபடல்,ஓய்வு ;முதன் நிலை பிரிந்த தொழிற்பெயர் .வீடு பேறு:அறம்-பொருள்-இன்பம் – வீடு என்றவாறும் பொருள் விரியும். வீடு என்பது சடப்பொருள்களின் கலவையாய் முடிவதில்லை .அது வாழும் சமூகத்தின் இருப்பிடம் வாழ்வுக்கோலங்களின் வடிவமைப்பு பொருள்சார் சமூக உண்மை; மனித படிமலர்ச்சியின் –நாகரிகத்தின் குறிகாட்டி எனும் விரிந்த பொருண்மையை தன்னகத்தே கொண்டது.
யாழ்ப்பாணத்து ஆதிக் கிராமிய வாழ்வில் குடும்பத்தின் கூட்டு முயற்சியாய் வீடு அமைந்தது .நிலமானிய அமைப்பில் சமூக அடுக்கமைவின் வெளிப்பாடானது. குடிசைகளாய்த் தொடங்கி காலனித்துவம் வழியான சந்தைப் பொருளாதாரம் ,நகரமயமாக்கம் ,திரைகடலோடி திரவியம் தேடிய பயணங்கள் என்பவற்றின் விளைவாக கல்வீடுகள் தோற்றம் பெற்றன.
வீடமைப்பு , நகரஅபிவிருத்தி தொடர்பான அரசின் முதல் சட்ட ஏற்பாடும் இடையீடும் காலனித்துவ ஆட்சிக்காலமான 1915 இலேயே நடந்தமையை இங்கு மனங்கொள்ளலாம்.இன்று வீடுதொடர்பான அரசமைப்பு ரீதியிலான சட்டங்கள்,உலகளாவிய மனித உரிமைச்சாசனங்கள் என தனியனுக்கான வீட்டின் முக்கியத்துவம் சமூக கடமையாக முக்கியத்துவம் பெறும்
‘நாங்கள் நெல்வயல்களாலும் சிறுபழத்தோட்டங்களாலும் சூழப்பெற்றதும். அழகிய வேலியமைக்கப்பெற்றதுமான பண்ணை வீடுகளைக் கடந்து சென்றோம். மரக்குச்சுக்களாலும் வைக்கோலினாலும் குடிசைகள் அமைக்கப்பட்டு அவை சுத்தமாகவும், வசதியாகவும் விளங்கின. அங்கு வதிவோருக்கு தங்கள் சந்தோசத்தை அதிகரிக்க கூடிய வேறெதுவும் தேவைப்படவில்லை.’ எனும் கொடினரின் பதிவு (Cordiner, 1807) அந் நாளின் வீடுகள் பற்றிய பொதுவான ஒரு தரிசனத்தை எமக்குத் தரலாம். முன்னை வீடுகள் பெரிய மாற்றங்களின்றியே தொடர்ந்தன எனலாம். வட்டவடிவிலான குடிசை; கூம்பு வடிவிலான கூரை என்பன பொதுவான கட்டமைப்பாகும். நடுவிலுள்ள தூணிலே வெயப்பட்ட கூரைகள் தங்கியுள்ளன.
வீட்டினைச்சுற்றி சுவர்கள் அமைந்துள்ளன. அவை கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்டவை. வீட்டின் முன்புறத்திலே சுவர்களோடு இசைந்தவாறு திண்ணைகள் அமைக்கப்படுகின்றன. மேற்கண்ட குடிசைக்கு முன் சமூக இடைவினைக்களமான மால் அமைக்கப்படுகி ன்றது. இங்கேதான் குடும்பத்தினரும் ஏனைய விருந்தினரும் கூடி மகிழ்கின்றனர்.
விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் நெல், குரக்கன் முதலான தானியங்களைக் களஞ்சியப்படுத்துவதற்கான மரத்திலான பெட்டகங்கள் முக்கிய இடம் பெறும். வன்னிப் பிரதேசத்தில் இதற்கென வடிவமைக்கப்பட்ட கொம்பறை எனும் களஞ்சியம் சிறப்பிடம் பெறுகின்றது. சுதேச தொழினுட்ப அறிவுக்கு சாட்சியாக இன்றும் அவை பெருமை சேர்க்கின்றன.
யாழ்ப்பாண சமூக நிலையில் வசதியடைந்தவர்களே கல் வீடுகளைக் கட்டினார்கள் சமூக அடுக்கமைவு சார் வேறுபாடுகளை வீடுகள் பிரதிபலித்தன. யாழ்ப்பாணத்திற் கல்லால் வீடு கட்டும் முறைமை ஒல்லாந்தர் காலத்திலேயே தொடங்கியது என்பர் 40 கள் வரை ஒரு சிறு கிராமத்தில் 2-3 கல்வீடுகள் இருப்பது கூட அரிதானது.. அக்காலத்தில் ஒருவர் பணக்காரர் என்பதைக் குறிக்க ‘கல்வீட்டார்’ என்று கூறும் மரபு இருந்தது.
வீட்டின்,அதன் ஏனைய கூறுகளின் அமைவிடம் பற்றிய திட்டமிடலில் வீடமைப்பு தொடர்பான பண்பாட்டு விதிகளை உள்ளடக்கிய பஞ்சாங்கம், மனையடி சாஸ்திரம் என்பன பெரும்பங்கு வகிக்கின்றன. வாக்கிய பஞ்சாங்க மரபில் வீட்டுக்கு நிலைவைத்தல் முதல் குடிபுகல் வரையான வழிகாட்டல்களைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் பின்பற்றப்படும் மனையடிசாஸ்திரம் இந்தியாவில் பின்பற்றப்படும் வாஸ்து சாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
யாழ்ப்பாணத்து வீடுகளின் படிமலர்ச்சியில் நாற்சார் வீடுகள் கொண்ட இடம் குறிப்பிடத்தக்கது. எங்கள் பண்பாடி கூட்டுக் குடும்ப வாழவியலின் இருப்புக்கு அரணாக அவை விளங்கியமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணபாரம்பரிய வீடமைப்பு முறை தமிழ் நாடு, கேரளா போன்றே தனிக்குடிசைக் கட்டடங்களாக ஆரம்பித்து, தேவைகள் , வசதிகளின அடிப்படையில் வளர்ந்து, நாளடைவில் விஸ்தரிக்கப்பட்ட நாற்சார வீடுகளாக விரிவுபடுத்தப் பட்டன. தனிக் குடிசை வீடு`, இரட்டைக் குடிசை வீடு`, இரண்டறை இரட்டைக் குடிசை வீடு`, `மூன்றறை இரட்டைக் குடிசை வீடு`, `மூன்று குடிசை வீடு, `நாற்சார் வீடு,` இறுதியாக விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடு என வளர்ச்சியடைந்தது அன்றைய வீடுகளில் இருந்து அண்மைக்கால நாற்சார் வீடுகள் வரைஎல்லாவற்றிலுமே நடை, திண்ணை, முற்றம், வீடு, தலைவாசல், குசினி ஆகியவை முக்கிய இடம் பெற்றன. முற்றத்தின் மத்தியில துளசிமாடம் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. துளசிமாடம் வழிபாட்டுக்கு மட்டுமன்றி சுகாதாரக, மருத்துவ காரணங்களுக்குமாக முக்கியம் பெற்றது.
இவ்வீடுகளில் பலவிதமான கலை அம்சங்களை இணைத்தார்கள். சிற்ப, சிலை வடிவங்கள் அவர்களின் அந்தஸ்தை வெளிப்படுத்துமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வடிவங்களில் வழிபாட்டு தெய்வங்களின் வடிவங்கள் , குறியீடுகள், இயற்கையோடு ஒன்றிய பூக்கள், கொடிகள் பறவைகள் போன்றவை இணைக்கப்பட்டன. மற்றைய சமூகங்கள் போலவே அழகுபடுத்தப்பட்ட தூண்கள், முன் திண்ணை, உள் முற்றம், பின் திண்ணை போன்றவும் இந்த வீடமைப்பில் முக்கியமானவை.