யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 1947.02.02 ஆம் நாள் பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து பின்னர் மெய்யியல் துறையின் தலைவரானார். தனது இளங்கலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலாநிதிப்பட்டத்தினை ரஸ்யாவின் மாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதோடு, அழகியல் (1996, மறுபதிப்பு 2008), விமர்சன மெய்யியல், (1989), விமர்சன முறையியல், (1992), 20 ஆம் நூற்றாண்டு ஓவியக்கொள்கை, (1994), சைவசித்தாந்த அறிவாராய்ச் சியியல், (1995), சைவசித்தாந்தம் மறுபார்வை, (1998), பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999), இந்துக் கலைக்கொள்கை ,(2004), சங்ககாலச் சமூகமும் சமய மெய்யியல் சிந்தனைகளும் (2007) போன்ற முக்கிய நூல்களையும் செவ்விதாக்கி வெளியிட்டு மெய்யியல் சிந்தனையாளனாக தன்னை வெளிப்படுத்தினார். அவரால் எழுதப்பட்டு வெளிவராத நூல்களாக மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு, ஐரோப்பிய மெய்யியல் வரலாறு, மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம் ஆகிய மூன்றினையும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் வெளியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரிய ரான இவர் கலைப்பீடாதிபதியாகப் பதவியுயர்வுபெற்று பல சாதனைகளை ஏற்படுத் தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் நுண்கலைத்துறையில் மெய்யியல், நாடகம் ஆகிய இரண்டு பாடங்களையும் கற்பிப்பதற்கான பிரேரணையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு பக்கபலமாக நின்று குறித்த பாடங்களைக் கற்பிப்பதற் கேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது வெள்ளிடைமலை. 2009.05.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.