Sunday, February 9

யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை (முகத்தார் ஜேசுரட்ணம்)

0

அறிமுகம்                                                                                                                          ‘முகத்தார் வீடு’ என்னும் வானொலி நாடகத்தினூடாக ஈழத்தின் பட்டி தொட்டி யெல்லாம் பேசப்பட்ட இவர் முகத்தார் யேசுரட்ணம் என்னும் அடையாளப் பெயருடன் அழைக்கப்பட்டவர்.. சிறுவயதிலிருந்தே கலையில் நாட்டமுடைய இவர் அரச எழுதுவினைஞராக , அரச நிர்வாக சேவை அதிகாரியாக விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றி அதன் ஒரு பணியாக இலங்கை வானொலியில் வானொலிக் கலைஞன், நாடகக் கலைஞன் எழுத்தாளன், கவிஞன், திரைப்பட நடிகன், நெறியாளன் என பல்துறை பரிமாணம் பெற்ற கலைஞனாக வாழ்ந்தவர். 

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்குப் பிரதேசமாகிய கடல்வளமும் நிலவளமும் ஒருங்கேயிணைந்து ஆன்மீகத்திலும் கல்வியிலும் உயர்நிலை பெற்ற இளவாலை என்னும் கிராமம் பல உயர்நிலையாளர்களை யாழ் மண்ணிற்கு தந்து பெருமை கொள்கின்றது. குறிப்பாக சைவப்புலவர் சு.செல்லத்துரை, கலாநிதி நீ.மரியசேவியரடிகள்,…….. என பல கல்விமான்களும் பெரியோர்களும் வாழ்ந்த மண்ணின் தோன்றலாய் விவசாயியும் காவத்தை என்னும் சிங்களப் பிரதேசத்தில் முதன்முதலில் காலூன்றிய பிரபல சுருட்டு வர்த்தகருமான  சந்தியாப்பிள்ளை மரியம்மா தம்பதியருக்கு; புதல்வராக 1931-12-26ஆம்  நாள் யேசுரத்தினம் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியினையும் உயர்தரக்கற்கையினையும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலேயே பெற்றார். இக்கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களின் மனங் கவர்ந்த மாணவனாக, அனைத்துத் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கல்லூரிச் செயற்பாடுகளில் பங்கெடுத்து இளவாலை ஹென்றியரசர் கல்லூரியின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக விளங்கினார்.; ஆங்கிலப் புலமைமிக்க இவர்  கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த பின்னர் இக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இரண்டு வருடங்கள் பணியாற்றி அரச எழுதுவினைஞராக பணிமாற்றம் பெற்றார்.

 அரச எழுதுவினைஞராக இலங்கை சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே பணியாற்றி இலங்கை நிர்வாக சேவை அதிகரியாக உயர்வடைந்து முப்பத்து மூன்ற வருடங்கள் பணியாற்றினார். இக்காலத்தில் அரச ஊழியர்களுகு;கு கட்டாயச்சிங்களச் சட்டத்தினால் தனது பணியிலிருந்து  1984 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த காலங்களில் ஏற்பட்ட பல இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அகதி வாழ்வினை பல தடவைகள் வாழ்ந்தவர். இத்தகைய அனுபவங்களினூடாக மனித வாழ்வின் உன்னதத்தினை புரிந்து தனது அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இந்தியாவில் ஈழத்தமிழ் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்’ (ஒபர் சிறிலங்கா) என்னும் அமைப்பில் 1985-1993 வரை பணியாற்றினார். மேலும் 1985ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டிலும் திருச்சியிலுமாக எட்டு வருடங்கள் வாழ்ந்தார். 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பிரான்ஸ நாட்டுக்கு குடிபெயர்ந்து தான் இறக்கும் வரை தனது துணைவியார், ஐந்து பிள்ளைகளுடன் பிரான்சிலேயே வசித்து வந்தார்.

 அயறீன் என்னும் மங்கையை கரம் பற்றி இனிதான இல்லற வாழ்வில் கலாராணி, பிரேம்ராஜ், மகாராஜ், ஜீவராணி, செல்வராஜ் என்னும் நற்பெயருடைய ஐந்து பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களையும் கல்வியில் உயர வைத்தது மட்டுமல்லாது வாழ்வில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தினை கோட்பாடாகக் கொண்டு வாழும் மாந்தர்களாக – பிறருக்குதவுவோராக – மானிடநேயப் பண்புடையோராய் வாழவும் வழிப்படுத்தியுள்ளார்.

 கலைஞனாக ஆரம்பித்த காலம்

கல்லூரிக் காலத்திலிருந்தே இவருடைய கலையார்வம் இயல்பாக வெளிப்பட்டது. 1945ஆம் ஆண்டில் தனது பதின்நான்காவது வயதில் கல்லூரியில் கற்கும் காலத்திலேயே நாடகம் மற்றும் கல்லூரியின் கலைச்செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி தனது ஆற்றலையும் கலை ஆளுமையையும் சிறுகச் சிறுக வளர்த்து உயர்நிலை அடைந்தவர்.  நாடகங்களில் நடித்துத் தன்னை நடிகனாக அடையாளம் காட்டினார். ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆங்கில நாடகங்களில் பங்கேற்ற இவர் பின்னர் தமிழில் தனது திறனை வெளிப்படுத்தினார். இந்த அனுபவமும் வளர்ச்சியும் அவரை பல்துறைக் கலைஞனாக பல்துறை ஆளுமையாளனாக முகிழ்த்தெழச் செய்தமை கண்கூடு.

இலங்கை வானொலியும் முகத்தாரும்.

1966ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை இலங்கை வானொலியில் வானொலி நாடகக் கலைஞனாக அதன் எழுத்தாளனாக பணியாற்றிய காலம் எவராலும் மறக்கமுடியாதது. 1966 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி இலங்கை வானொலியில் வானொலிக் கலைஞராக (பகுதிநேரம்) இணைந்தார். இலங்கை வானொலியில் இவர் பல நாடகங்களை எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ளார். இலங்கை வானொலியில் கிராமிய சேவையில் 1970களின் ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமைகளில் தொடராக ஒலிபரப்பான ‘முகத்தார் வீடு’ என்ற நாடகத்தை எழுதியதோடு, பிரதான பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். 268 வாரங்கள் ஒலிபரப்பான ‘முகத்தார் வீடு’ யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கான குடும்பப் பிரச்சினைகளை யதார்த்த பூர்வமாக சித்தரித்தது. 15 நிமிடத்துக்குள் ஒரு விவசாயக் குடும்பத்துள் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்களுடன் விவசாயத் தகவல்களை வழங்குமொரு நிகழ்ச்சியாக இதனைத் தயாரித்து வழங்கியிருந்தார். இந்த நாடகத்தில் உலாவந்த பாத்திரங்களான ஆறுமுகம், மனைவி தெய்வானை, மகன் வடிவேலன், சரவணை, மைனர் குடும்பத்தினர், சாத்திரி குடும்பத்தினர், சட்டம்பி குடும்பத்தினர், பரியாரி குடும்பத்தினர், தரகர் குடும்பத்தினர். இரண்டு தசாப்தங்கள் கடந்து இன்றும் மக்கள் மத்தியில் மறவாமல் இருக்கின்றது. ஜேசுரட்ணத்தின் பெயருடன் ‘முகத்தார்’ எனும் பெயரும் இணைந்து ‘முகத்தார் ஜேசுரட்ணம்’ என்று இன்றும் விழிக்கப்படுகிறது. இலங்கை வானொலியில் சனி இரவு ‘நாடகம்’ ஞாயிறு பகல் ‘கதம்பம் குதூகலம்’ போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் எழுத்துக்கள் மிளிர்ந்திருந்தன. கதம்பத்தில் 123 தனி நாடகங்களையும், பருவக்காற்று தொடர் நாடகத்தையும் (52 வாரங்கள்) எழுதி, நடித்து, நெறியாள்கை செய்த இவரின் வானொலிப் பணி நிலைத்துள்ளது.

சில்லையூர் செல்வராசனின் ‘தணியாத தாகம்’ கே.எம். வாசகரின் இயக்கத்தில் வானொலி நாடகமாக உருப்பெற்ற போது இந்த நாடகத்தில் ஒரு மலேசியன் ஓய்வூதியம் பெறுபவராக நடித்தவர்

 திரைப்படக் கலைஞனாக முகத்தார் யேசுரட்ணம்

வாடைக்காற்று திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த இவர் யாழ்ப்பாண வட்டார வழக்குச் சொற்களை நகைச்சுவைக்காக மட்டுமன்றி, காத்திரமான படைப்புகளிலும் கையாளமுடியும் என்பதை எடுத்துக்காட்டியவர். கோமாளிகள், ஏமாளிகள் ஆகிய படங்களில் பாத்திரமேற்று நடித்த இவர் பொன்மணி என்னும் திரைப்படத்திற்கான பின்னணிக் குரல் வழங்கும் கலைஞனாகப் பணியாற்றி இருந்ததுடன் சத்திய கீதை, முகத்தார் வீடு, இன்னுமொரு பெண், புயல், முகம், ராஜாவின் இராகங்கள், தாகம் ஆகிய சின்னத்திரைப்படங்களிலும் நடித்து திரைக்லைஞனாகவும் அடையாளப்படுத்தினார். லண்டனில் செயற்பட்டு வரும் ஈழவர் திரைக்கலை மன்றத்தில் பணியாற்றியுள்ளார்.

இவருடைய முகத்தார் வீடு வானொலி நாடகமானது ஆர்.ரீ.எம்.பிரதேஸ்இன் தயாரிப்பில் நிர்மலா இரகுநாதனவர்களது இயக்கத்தில் சின்னத்திரைப் படமானதும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய வானொலிகளிலும் தொலைக் காட்சிகளிலும் இவரது கலைப்பணி தொடர்ந்தது. தமிழ் றேடியோ தொலைக்காட்சி (T.R.T) நிறுவனத்திலும் ஏசியன் புரோட்காஸ்ற் கோப்பரேசன் (A.B.C) நிறுவனத்திலும் வானொலி நிகழ்சிக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியிருக்கின்றார்.

 யேசுரட்ணம் எழுதிய, நடித்த நாடகங்கள்

அமரர் யேசுரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியின் பல்வெறு நிகழ்வகளுக்காகவும் சமூகதேவைகளுக்காகவும் பல நாடகங்களை எழுதியிருந்தார். அந்த வகையில்  சண்டியன் சின்னத்தம்பி, லண்டன் மாப்பிள்ளை, மாடிவீட்டு மருக்கொழுந்து, முழியல வழ னுரடியiஇ  மோசடி பத்தாயிரம், மண்ணோடு விளையாடும் விண்ணுலகம், சத்தியமே ஜெயம், பண்டாரவன்னியன், புரோக்கர் பொன்னம்பலம், அரோகரா, உயிரோடு காடாத்து என்பன இவர் எழுதி, நடித்து நெறியாள்கை செய்துள்ள நாடகங்களாகும்.

 அசட்டுமாப்பிள்ளை, ஆசைமச்சான், கறுப்பும் சிவப்பும், பாசச்சுமை, நம்பிக்கை ஆகிய நாடகங்கள் இவரால் நடிக்கப்பட்ட பிரபல்யமான நாடங்கள் ஆகும்.

கதம்பம் என்னும் 123 தனி நாடகங்களையும், பருவக்காற்று தொடர் நாடகத்தையும், முகத்தார் வீடு என்னும் விவசாயம் சார்ந்த நாடகத்தினயும்  இலங்கை வானொலிக்காக எழுதி சாதனை படைத்தவர். 

பிறரின் நெறியாள்கையில் முகத்தார் நடித்த நாடகங்களாக அலையின் குமுறல், எரிமலை வெடித்தபோது, கோபுரங்கள் சரிகின்றன ஆகியனவும் குறிப்பிடத்தக்கது.

 கே.எம்.வாசகரின் இயக்கத்தில் மனித வலை, தணியாத தாகம், சுமதி என்னும் தொலைக்காட் நாடகம் ஆகியவற்றுடன் துரடரைள ஊநயளயசஇ ஆநசஉhயவெ ழக ஏநniஉநஇ அகதி ஒருவன் ஊர்வலம் வருகிறான் என்னும் நாடகங்களில் நடித்து தன் ஆளுமையை வெளிக்கொணர்ந்தார்.

 முகத்தார் எழுதிய நூல்கள்

ஆவ்வப்போது இவரால் உருவாக்கப்பட்ட நாடகங்களில் பன்னிரண்டு நாடகங்களைத் தொகுத்து ‘முகத்தார் வீட்டுப் பொங்கல்’ என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தனது வாழ்க்கை வரலாற்றினை தொகுத்து எழுதி எண்பது பக்கங்கள் முற்றுப்பெற்ற நிலையில் மிகுதி விடயங்கள் தொகுக்கப்படாமல் அவர் இறைபதமடைந்தார். அவரத வாழ்வின் சரிதம் விரைவில் வெளிவரும் என நம்புகின்றோம். முகத்தார் பற்றி அவரது குடும்பத்தினரால் அவருடைய நினைவாக வெளியிடப்பட்ட ‘எங்கள் பப்பா’ என்ற நூலும், ‘நீயும் நானும்’ என்ற நூலும்  முகத்தார் யேசுரத்தினம் அவர்களது கலைத்திறன் மற்றும் அவரது பொது வாழ்வில் அவரது ஆளுமை என்பவற்றினை உலகம் அறிந்து கொள்வதற்கான குறிகாட்டியாய் தடம் பதித்திருக்கின்றது.

T.R.T மற்றும் A.B.C தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பான முகத்தாருடைய ஐம்பதிற்குமேற்பட்ட நாடகங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆகாயக் கனவுகள்        ஆறாம் வாட்டில் ஆறுமுகத்தான் , அடியடா அம்புலன்சுக்கு ,காதலுக்கு அரோகரா  லண்டன் திருமணம, சவுதியிலிருந்து சென்னை வரை , கானம் (புராண நாடகம்)  உறவுகள் , விசித்திரக் கனவுகள் , காவடி செல்லையா பிரமலோகத்தில் ஜீவராசிகள்,  சவாரி செல்லப்பா ஆகிய பன்னிரண்டு நாடகங்களினை தொகுத்து ஆகாயக் கனவுகள் என்னும் இறுவட்டாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 முகத்தாருக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்

எந்தவொரு கலைஞனும் தனது புகழக்காகவும் பெயருக்காகவும் கலைப்பணியில் ஈடுபடுவதில்லை. தன் சமூகத்தினது வளர்ச்சியில் மனிதநேயத்துடன் பயணிக்கும் மனிதர்கள் தமது சமூகத்தின் குரலாய் ஒலிப்பதற்கு ஏதாவதொரு கருவியினை தேர்ந்தெடுக்கின்றனர். அதனடிப்படையில் முகத்தாரவர்;களும் நாடகத்தினை தனது கருவியாக தேர்ந்தெடுத்தார். அதில் வெற்றியும் கண்டார். இத்தகைய செயற்பாடுகளால் பயன்பெற்ற மக்கள் கூட்டத்தினர் கலைஞரை வாழும்போதே வாழ்த்துவோம் என்னும் உயரிய சிந்தனை வெளிப்பாட்டில் முகத்தாரவர்களுக்கும் தமது உயரிய கௌரவத்தினை வழங்கி அவரை பெருமைப்பிடுத்தியுள்ளனர். பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் அவருக்கு மக்களாலும் கலை மற்றும் நிறுவனங்களாலும் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வாடைக்காற்று திரைப்படத்திற்காக 1979ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியினுடைய ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்டார். 1980 இல் கலைமுரசு விருதும், 1981இல் இலங்கை வானொலி நாடகமான முகத்தார் வீடு நாடகத்திற்காக முகத்தார் என்று என்றும் அழைக்கும் வகையிலான அடைமொழி விருதும், 1982இல் விவசாய மன்னர் என்னும் கௌரவ விருதும் இலகை மண்ணில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இந்திய மண்ணில் தமிழ் நாட்டின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களால் கலைப்பணிச் செல்வர் என்னும் விருது 1983ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

 பிரான்ஸ் தேசத்தில் 1994இல் கலைச்செல்வன், 1995இல் கலைப்பூபதி எனவும், 2007இல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் ஈழத்தமிழ் விழி எனவும் விருதுகள் வழங்கப்பட்டதுடன் ஜேர்மனியில் 1997இல் கலைமாமணி விருதும், 2001இல் நகைச்சுவைவாரிதி விருதும் 2005இல் லண்டன் மாநகரில் கலைஞானி என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

முகவரியைத் தொலைத்து விட்டு தேடும் எம்மவர்கள் மத்தியில்; ‘முகத்தார்’ என்னும் நாமத்தால் இன்றும் என்றும் எம் அனைவரதும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் நாடகக் கலைஞன் யேசுரத்தினம் அவர்கள்  பிரான்ஸ் நாட்டில் தனது குடும்பத்தினருடன் மகிழ்வாக இருந்த சூழலில் திடீரென ஏற்பட்ட உபாதையால் 2010-11-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

முகத்தாருடைய வாழ்வு, கலை வராற்றுப் பாதையினை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடத்தினருடன் பெட்டகத்துடன் இணைந்து முகத்தாரின் புதல்விகளான திருமதி கலாராணி லோகநாதன், திருமதி ஜீவராணி மரியதாஸ் ஆகியோருக்கும் யாழ்ப்பாணப் பெட்டக செயற்குழு உறுப்பினர் திருமதி லேறாஜி ரூபன் அவர்களுக்கும் நன்றி.

 



Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!