Monday, May 27

சூரன், காத்தார்.

0

1880.08.01 ஆம் நாள் கரவெட்டி மேற்கு என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழையும் சைவத்தையும் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறந்து இரண்டாண்டுகளின் பின்னர் பிறந்தவரான சூரனவர்கள் இரட்டை முட்கிரீடங்களை சுமந்துகொண்டு மாபெரும் சாதனை நிகழ்த்திய அவதார புருஷனாகத் திகழ்கின்றார். அதாவது உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காகவும் மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்களுக் கெதிரான நடவடிக்கைகளாக சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித் தமையும் அதற்காக தேவரையாளி சைவ வித்தியாலயத்தை நிறுவிய மையும் சூரனது அளப்பெரும் சாதனைகளாகத் திகழ்ந்து நிற்கின்றன. வதிரி பூவற்கரை அண்ணமார் ஆலயத்தில் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த மிருக பலியை அன்றைய சூழலில் நிறுத்தத் துணிந்த மையும் அதனை வெற்றிகரமாக நிறுத்தியமையும் இவரது சைவப் பற்றின் வலிமையை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவரது வாழ்க்கை வரலாறு யாழ்ப்பாணத் துச்சமூக வரலாற்றின் முக்கிய தொடுபுள்ளி களில் ஒன்றாக அமைந்து யாழ்ப்பாணத்து தாழ்த்தப்பட்ட மக்களினது மதப்பண்பாடு சைவமே என்பதனை நிறுவன ரீதியாக முதன்மைப் படுத்தியவராவார். யாழ்ப்பாணப் பிரதேசத்து தமிழ் மக்களின் ஆங்கில காலனித்துவகால வரலாற்றுப் பரீட்சயம் உடையவர்களுக்கு சூரனது செயற்பாடுகள் ஆறுமுகநாவலரால் தொடக்கி வைத்த சைவக்கல்வி விஸ்தரிப்பானது அவர் காலத்தின் பின்னர் எவ்வாறு அவர் இறுக்கமாக வரையறை செய்த சமூக வரம்புகள் உடைத்துச் செல்கின்றமையை இங்கு நோக்கத்தக்கது.சூரன் கிறிஸ்தவ மிஷனரிமாரது மதம்சார் நடவடிக்கைகளை எத்துணை ஆழமாக வெறுத்து நின்றார். அதனால் குறித்த காலத்தில் கிறிஸ்தவத்திற்கெதிரான பரப்புகை காரணமாக தமக்கோ, தமது குடும்பத்திற்கோ ஏற்படக்கூடிய  விளைவுகளைக் கண்டும் கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களும் , சைவப் பண்பாட்டுச் சூழலை கிறிஸ்தவ வாழ்க்கை முறை எவ்வாறு “மாசுபடுத்துகின்றது” எனக் கொண்ட பலரும் மிஷனரிக் கல்வியை எதிர்த்து தமது குழந்தைகள் கல்வி பயிலும் சூழலில் சைவப்பண்பாடு காணப்பட வேண்டும் என்று விரும்பிப்போராடிய ஒரு சூழலில் அத்தகைய சைவப்பண்பாட்டின் முக்கிய நிறுவனமாகக் கொள்ளப்பட்ட கோயிலிற் குள்ளே செல்ல அனுமதிக்கப்படாத சாதியொன்றினைச் சார்ந்தவர் சைவக்கல்வியின் பேணுகைக்காக, அதனிலும் பிரதானமாக தமது பிள்ளைகள் சைவச் சூழலிலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்று நின்றமை அவரது ஆளுமையின் வலிமையையும் அசாதாரணத் தன்மையையும் உலகிற்குக்காட்டி மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஆசிரியர் தெனியான் அவர்கள் எமது நாவலர் ஆசாரியார் சூரன்,சைவச்சூரனின் சமயப் பணிகள், கல்கி பாராட்டிய வதிரிப்பெரியார், தேவரையாளிச் சூரனின் படவிமர்சனம், சிறுபான்மை மக்களின் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் திரு. கா.சூரன், சூரனும் கல்விப்பணியும் ஆகிய பத்திரிகைக் கட்டுரைகளை எழுதி சூரனை மீளுருவாக்கம் செய்தவர். சூரனது பணிகளுக்கான வழிகாட்டிகளாகப் பல பெரியார்கள் அமைந்துள்ளனர். அவர்களில் சத்தமணியம் என அழைக்கப்படும் வீ.மூ.சிற்றம்பலமுதலியார், இவரது மைத்துனர் தா.சிதம்பரப்பிள்ளை, இந்துசாதனம் ம.க.திருஞானசம்பந் தர், வித்தியாதரிசி சதாசிவஐயர், இந்துபோர்ட் இராசரத்தினம், ஹண்டி பேரின்பநாயகம் போன்றோரைக் குறிப்பிடலாம். சமூகவியலாளனாக – பண்பாட்டின் பேணுகையாளனாக – மானுடவியலாளனாக தன்வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த சூரனவர்கள் இன்றைய தலைமுறையினரது தலைநிமிர் வாழ்வின் முன்னுதாரண மாய் அமைந்திருக்கின்றாரென் றால் அது மிகையாகாது. தன் வாழ்வில் பெரும் போராட்டங்களைச் சந்தித்து அதனை அடுத்த தலைமுறை யினருக்கான வாழ்வின் எழுச்சியாகக் கொண்டு வாழ்ந்த இவர் 1956-04-06 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!