Wednesday, February 5

சிவசரவணபவன்,சிவசுப்பிரமணியக்குருக்கள்(சிற்பி ஐயா)

0

இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத் திலுள்ள சைவ ஆலயங்களில் சிவப்பணி செய்யத் தமிழ்நாட்டிலிருந்து அந்தணர்களை வருவித்து வாழ வைப்பது எமது மன்னர்களின் வழமையாகவிருந்தது. இவ்வழமையின் படி தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து, யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் ஒருவரினால் அழைத்து வரப்பட்டவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதபட்டர். அவர் அளவெட்டியிலுள்ள பெருமாக்கடவை எனும் பதியிற் குடியேறிச் சிவப்பணியில் ஈடுபட்டார். காலக்கிரமத்தில் அவரின் வழித்தோன்றல்கள் அருகிலுள்ள கந்தரோடையைத் தமது வாழ்விடமாகக் கொண்டனர். குஞ்சிதபாதபட்டர் பரம்பரையில் வந்தவரே சிவசுப்பிரமணியக்குருக்கள். குஞ்சிதபாதபட்டரின் வழி வந்த சிவசுப்பிரமணியக்குருக்களும், மங்களேஸ்வரக்குருக்கள் வழிவந்த சௌந்தராம்பாளும் இல்லறபந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களின் மணவினைப் பேறாகப் பத்துப்பிள்ளைச் செல்வங்களைப் பெற்றெடுத்தனர். இத்தம்பதியரின் ஆறாவது மகவாக 1933-02-28 ஆம் நாள்; இப்பூவுலகிற் பிரவேசித்தவரே ‘சிற்பி’ எனப் பலராலும் அறியப்பட்டவரான சிவசரவணபவன் எனும் இயற்பெயரைக்கொண்ட  “சிற்பிஐயா” ஆவார்.

கல்வி

தனது ஆரம்பக்கல்வியைக் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் பெற்றுக்கொண்டார் ‘சிற்பி’ அக்காலத்தில் மூன்று ஆண்டுகள் தமிழ்மொழி மூலம் இப்பாடசாலையில் கல்வி கற்ற பின்னர், ஆங்கிலமொழி மூலம் கல்வியைத் தொடர ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். எனினும் இவர் தனது தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க எட்டாம் வகுப்பு வரை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையிலேயே தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடர்ந்தார். இதன்பின்னர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்று, சிரேஸ்டதராதரப் பத்திரத் தேர்வில் சித்தியடைந்தார். எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தியடைந்ததும் கொழும்பிலுள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். (191-1952) பணி புரிந்து கொண்டே இலண்டன் பல்கலைக்கழக இன்டர்ஆர்ட்ஸ் பரீட்சையில் சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து எழுதுவினைஞர் வேலையை விட்டு ஆசிரியப்பணியில் இணைந்து கொண்டார். ஒரு பட்டதாரியாக இருந்தாற்றான் நல்ல ஆசிரியராக இருக்க முடியும் என்பதை உணர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சென்னை கிறிஸ்துவக்கல்லூரியில் 1953ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் நோக்கில் இணைந்து கொண்டார். பட்டதாரி மாணவனாக இருந்த போது மிகச் சிறந்த மாணவனாக மிளிர்ந்து, தமிழ்ப்பாடத்திற்கான இராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தையும், ஆங்கிலப் பாடத்திற்காக ஸ்கின்னர் தங்கப்பதக்கத்தையும் சரித்திரபாடத்திற்காக மற்றொரு தங்கப்பதக்கத்தையும் பெற்று ஈழத்துக்குப் பெருமை சேர்த்தவர். சென்னைப் பல்கலைக்கழகக் கலை இளமாணி பட்டத்தைப் பெற்று வெளியேறி 1955 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியரானார். இதன் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில், பட்டப்படிப்பின் பின்னரான கல்வியியல் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கல்வியியற் கலை முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

கல்விப்பணி

முழுமையாக நானகு தசாப்தங்கள் (1953-1993) கல்விப்பணிபுரிந்தவர் ‘சிற்பி’ ஐயா, முதல் இருபத்தெட்டுவருடங்கள் (1953-1981) ஆசிரியராகவும், பின்னர் பன்னிரெண்டு வருடங்கள் (1981-1993) அதிபராகவும் அரும்பணியாற்றினார். மானிப்பாய் இந்துக் கல்லூரி, செங்குந்தா இந்துக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம், பண்டாரவளை புனித சூசையப்பர் கல்லூரி, உசன் இராமநாதன் மகாவித்தியாலயம் என்பவற்றில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகாவித்தியாலயம், யாழ் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றில் அதிபராகவும் இவரது கல்விப்பணி அமைந்திருந்தது. தனது மாணாக்கர்களை ‘நானிலம் பயனுற வாழவல்லமை’ செய்வதில் விற்பன்னராகவே இவர் எப்பொழுதும் இருந்தார். செங்குந்தா இந்துக்கல்லூரியில் பணியாற்றியபோது மேடைப் பேச்சுகள், கட்டுரைகள், நாடகங்கள், பிற இலக்கிய முயற்சிகள் என்பவற்றில் மாணவர்கள் திறமை பெறுவதற்காகப் பல்வேறு களங்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை இவரையே சாரும். யாழ்ப்பாணத்தின் பல பிரபல கல்லூரிகள் தமது வருடாந்த சஞ்சிகைகளை வெளியிடச் சிரமப்பட்ட காலகட்டத்தில், செங்குந்தா இந்துக்கல்லூரியிலிருந்து ‘சுடரொளி’ என்னும் பாடசாலைச் சஞ்சிகையை வெளியிடத் தொடங்கி ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக அச்சஞ்சிகை வெளிவரக் காரணமாகவும் அமைந்தார். பின்னர் தென்மராட்சியிலுள்ள உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்திற் பணி புரிந்த போது தனது குடும்பத்தாருடன் அக்கிராமத்திலேயே வாழ்ந்து அங்குள்ள மக்களில்  ஒருவராகவே மாறிப் பணி செய்தார். கற்றல்-கற்பித்தற் செயற்பாடுகள், இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் என எல்லாச் செயற்பாடுகளிலும் பாடசாலை உச்ச நிலையை அடையப் பாடுபட்டார். இக்காலத்தில், ‘இளந்தளிர்’ என்ற இதழை வெளியிட்டார். தென்மராட்சியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றிலிருந்து முதன் முதலில் அச்சில் வெளியான மாணவர் சஞ்சிகை ‘இளந்தளிர்” தான். வைத்தீஸ்வராக் கல்லூரி பவள விழாக் கண்ட போது அதன் அதிபராகவிருந்தவர் இவர். பவளவிழா நிகழ்வுகள் மூன்று நாள்கள் நடைபெற்றன. அந்த நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தினையும், நேர்த்தியையும் விதந்துரைக்காதோர் இலர். வைத்தீஸ்வராக் கல்லூரியின் புகழ் பூத்த அதிபர் அமரர் அம்பிகைபாகனுக்குப் பிறகு ‘சிற்பி ஐயா’ வின் காலமே கல்லூரியின் பொற்காலம் என்கிறார் சிற்பியின் பின்னவரான வைத்தீஸ்வராக் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் திரு.நா.வன்னியசிங்கம் அவர்கள். எப்பொழுதும் போலவே வைத்தீஸ்வராக்கல்லூரியிலும் மாணவர்களின் முழுமையான ஆளுமைவிருத்திக்கான பயில்களங்கள் பலவற்றை உருவாக்கிக் கொடுத்தார் ‘சிற்பிஐயா”. இவருடைய கற்பித்தற் திறனை வியக்காத, நயக்காத மாணவர்கள் இலர் என்றே கூறலாம். தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய மூன்று பாடங்களையும் எளிமையாகவும், இலகுவாகவும், மாணவர் மனதில் பதியும்படி கற்பிப்பது இவரது தனிச்சிறப்பு எனக் கொண்டாடுகின்றார்கள் இவரிடம் கல்விகல்வி கற்ற மாணவர்கள். எவ்விதமான பாடக்குறிப்புகளும் இன்றி, மடைதிறந்த வெள்ளம் போல ஆற்றொழுக்காகப் பேசி, மிகமுக்கியமான எண்ணக்கருக்களை மட்டும் கரும்பலகையில் எழுதி, மிகத் தேவையான குறிப்புகளை மட்டும் எழுதச் சொல்லும் இவரின் கற்பித்தற்பாங்கினை இன்றளவும் நினைவில் இருத்தியுள்ளனர் அவர் தம் மாணாக்கர்கள். மாணவர்களில் உள்ளுறையும் ஆற்றல்களை அடையாளம் கண்டு, தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவது இவரது பிறவியியல்பு. ‘கல்லூரியின் மாணவத்தலைவனாகவும், சைவசமயமன்றத்தின் தலைவனாகவும் என்னை உருவாக்கியதுடன், 1966ஆம் ஆண்டு கல்லூரியின் ஆண்டு மலரான ‘சுடர்ஒளியை” நீர் தான் பொறுப்பாக நின்று உருவாக்க வேண்டும் என்று பணித்தமையும், பல்கலைக் கழக புகுமுக வகுப்பில் ‘இலங்கை வரலாற்றைத் தெளிவுறக் கற்றுத்தந் தமையும், 1970களின் முற்பகுதியில் ‘தமிழ் மாணவர் பேரவையை” உருவாக்கித் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவனாக நான் அமையக் காரணங் களாயின” என்கிறார் செங்குந்தா இந்துக் கல்லூரியில் இவரிடம் கற்றுப் பின் ‘தமிழ் மாணவர் பேரவை” யை உருவாக்கிய பே.சத்தியசீலன் அவர்கள். இலக்கிய உலகில் தமிழிலும், வட மொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவரது தந்தையாரின் நூலகத்திலிருந்த பழந்தமிழ் இலக்கியப் புத்தகங்கள், அவர் கிரமமாக வாங்கி வரும் ‘ஈழகேசரி’, ‘இந்து சாதனம்’, ‘கலைமகள்’ என்பவை இளம் சிவசரவணபவனின் வாசிப்பார்வத்திற்கும், இலக்கிய ஈடுபாட்டிற்கும் முதற்காரணங்களாக அமைந்திருந்தன. பின்நாளில் ‘மெய்யியற்கலாநிதி’ எனப் பட்டமளித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட, நடமாடும் சைவத்தமிழ்க் கலைக்களஞ்சியமெனப் போற்றப்பட்ட இவரது தாய்மாமன் வைத்தீஸ்வரக்குருக்கள், கந்தரோடையிலுள்ள இவரது வீட்டிலிருந்தே கல்விகற்றார். வித்துவசிரோன்மணி கணேசையரிடம் கல்வி கற்ற அவர், அக்காலத்தில் எழுதிய கட்டுரைகள், வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

என்பனவும் இளைய சிவசரவணபவனின் இலக்கியப் பசிக்குத்தீனியாயின. மகாகவி பாரதியாரின் கவிதைகளை இவருக்கு அறிமுகப்படுத்தியதோடு, பாடசாலையில் இரண்டு வாரங்களுக் கொருமுறை கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த’மாணவர் போதினி’ என்ற சஞ்சிகையிலும் இவரதுஆக்கங்களை இடம்பெறச் செய்த, தமிழ்க் கந்தையா வித்தியாசாலை ஆசிரியர் திரு.சி.பொன்னம்பலம்(ஆதவன்), ஸ்கந்தவ ரோதயக் கல்லூரியில் இவர் எழுதிய கட்டுரைகளை ஏனைய மாணவர்களுக்கு, முன்னுதாரணமான கட்டுரைகள் எனச் சிலாகித்து வாசித்துக் காட்டிய வித்துவான் சி.ஆறுமுகம் என்போர் இவரை எழுதத் தூண்டிய பெருமக்கள் ஆவர். வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் அளித்த உற்சாகத்தில், ‘ஈழகேசரி’பத்திரிகைக்கு இவரால் எழுதி அனுப்பப்பட்ட ஆசிரியப்பா பத்திரிகையின் பாலர் பகுதியில் பிரசுரமானதும், ‘பழம் பண்பைப் பகிர்வதிற் பயனில்லை’ என்ற கட்டுரை, ‘சுதந்திரன்’ இதழில் பிரசுரமானதும், ‘ஸ்கந்தா’ என்ற கல்லூரிச் சஞ்சிகையில் இவர் எழுதிய ‘இளைஞர்கடன்’ என்ற கட்டுரை இடம்பெற்றதும் இவரது எழுத்து முயற்சிகளுக்கு உற்சாகம் தருபவையாக அமைந்தன. கொழும்பில் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் ‘மலர்ந்த காதல்'(1952) என்ற இவரது முதற் சிறுகதை சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானதும், ‘மாணிக்கம்’ என்ற சிறுகதை இலங்கை வானொலியில் ஒலிபரப்புக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அதே கதை ‘ஏழையின் இதயம்’ என்ற தலைப்பில் வீரகேசரியில் பிரசுரமானதும், சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரியின் சேலையூர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற போது சேலையூர் தமிழ்மன்ற வருடாந்த சஞ்சிகையான’இளந்தமிழன்’ சஞ்சிகைக்கு இவர் இதழாசிரியரானதும் இவர் ஆக்க இலக்கியத் துறையிலும், இதழியல்துறையிலும் தடம் பதிக்கக் காரணங்களாயின. அவரது இலக்கியப் பயணத்தின் போது எழுபது சிறுகதைகளையும், மூன்று நாவல்களையும் (‘உனக்காகக் கண்ணே’, ‘அன்பின் குரல்’, ‘சிந்தனைக் கண்ணீர்’) ஏராளமான கட்டுரைகளையும், பல கவிதைகளையும் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ‘நிலவும் நினைவும்'(1964), ‘சத்தியதரிசனம்’ (2001), ‘நினைவுகள் மடிவதில்லை’ (2008) ஆகிய தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. ‘உனக்காக் கண்ணே’ என்ற நாவலும் நூலுருப்பெற்றுள்ளது. இலக்கியநோக்கு எழுத்துத்துறையில் நீண்ட பயணத்தை மேற்கொண்ட மூதறிஞர் சிற்பி அவர்களின் இலக்கியப் பணியைப் புரிந்து கொள்வதற்கு இலக்கியம் குறித்த அவரது நோக்கு நிலையை அவருடைய வார்த்தைகளிலேயே அறிவது மிகப் பொருத்தமானதாகவிருக்கும். ‘மனிதன் மனிதனாக வாழ்ந்து, மகாத்மாவாக உயர்ந்து, அமரனாக நிறைவு பெறுவதற்குத் தூண்டும் உயர்ந்த சிந்தனையின் சொல்லுருவாக்கமே ‘இலக்கியம்’ ‘இன்ன நோய்க்கு இன்ன மருந்து எனச் சொல்வது போல’, இதோ இந்த இலக்கியத்தால்இ சமூகத்திலுள்ள இந்தத் தீமையை ஒழித்துவிடுவேன் எனக் கூற முடியாது. ஒருவனுடைய வாழ்க்கையின் போக்கை அவனுள்ளத்தே எழும் உணர்ச்சிகளும், எண்ணங்களுமே பெருமளவில் தீர்மானிக்கின்றன. ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உளள்ளத்தனைய உயர்வு’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இலக்கியத்தின் மூலம் நல்ல எண்ணங்களையும், தூய உணர்ச்சிகளையும் வாசகருள்ளத்தே கிளர்ந்தெழச் செய்ய முடியும்.

‘சுதந்திரம், சுபீட்சம், சமத்துவம் ஆகியவை ஈட்டப்பட்டவுடன் அதுவும் வன்முறைப் புரட்சியினால் ஈட்டப்பட்டவுடன், மனிதமனம் நிறைவு பெற்றுவிடும் என்று சொல்ல முடியாது. ‘செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே’ என்பதை நினைவிலிருத்தி, மனிதனுடைய அகத்தைச் செம்மைப்படுத்துவதன் வாயிலாகஇ அவனுடைய புறத்தையும் மேம்படச் செய்வதே இலக்கியமாகும்’ மேற்போந்த அவருடைய கூற்றுக்கள் அவருடைய இலக்கியநோக்கு நிலையை அச்சொட்டாகப் பிரதிபலிப்பனவாகும். இலக்கியத்தினூடாக படைப்பாளி அடையவிரும்பும் மாற்றத்தைப் படைப்புகள் எவ்வாறு ஏற்படுத்து கின்றன? என்பதுகுறித்த அவரது பார்வையையும் அவருடைய வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.

பெற்ற விருதுகள், பரிசுகள்

சென்னை திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு 1954 – கட்டுரை தமிழில் முடியும்.

வத்தளை உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு 1955 சிறுகதை மறுமணம்.

கல்கி வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு 1961 சிறுகதை காதல் வலி.

சென்னை வாசகர் வட்டம் நடத்திய குறுநாவல் விமர்சனப் போட்டியில் முதலாம் பரிசு

யாழ்வாசி என்ற புனைபெயரில் பல ஆக்கங்களைப் படைத்த இவர் 2015-11-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

பல ஆக்கங்களைப் படைத்த இவர் 2015-11-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

நன்றி  sitpiiya.com

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!