Wednesday, November 11

ஞானசேகரன் தியாகராஜ ஐயர் – ஞானம் 

0
அறிமுகம்
ஆயுள்வேத மருத்துவராகப் பணியாற்றிய ஞானசேகரன் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தில்;  தியாகராஜ ஐயர், பாலாம்பிகை இணையரின் புதல்வனாக 1942ஆம் ஆண்டு பிறந்தவர். ஈழத்தின் மிக முக்கிய மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராகவும், ‘ஞானம்” இலக்கிய சஞ்சிகையின் ஸ்தாபராகவும் ஆசிரியராகவும் செயற்பட்டவர். 2000 ஆம் ஆண்டு முதல் ஞானம் இதழைத் தொடங்கி, பல புதிய படைப்பாளிகளை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. 1960-களில் இருந்து எழுதி வந்த இவர், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். புதிய சுவடுகள் (1977), குருதிமலை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் ஆகியவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் சிலவாகும். இலங்கையில் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்கில் ஞானம் என்ற மாத இதழை 2000 ஜூன் மாதம் முதல் வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தினார். இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ‘சாகித்தியரத்னா’ உள்ளிட்ட பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்று  தமிழ் இலக்கிய உலகிற்குப் பல சேவைகளைச் செய்தவர். 
வாழ்க்கைக் குறிப்பு
நீண்டகாலம் ஆயுள்வேத மருத்துவராகப் பணியாற்றிவந்த ஞானசேகரன் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வந்தார்;. யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுபுதினங்களாகவும், புதினங்களாகவும் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இலக்கியப் படைப்புகள்
1960களிலிருந்து இறக்கும்வரை எழுதி வந்த ஞானசேகரனது படைப்புகளில் 1977-இல் வெளிவந்த அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம் விதந்தோதத்தக்கது. அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
1972 இல் காலதரிசனம் என்ற சிறுகதைத் தொகுதி மூலம் சிறுகதை உலகிற்குள் கால்பதித்தார். இவரது சிறுகதைகள் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சாதியத்திற்கு எதிராக புதிய சுவடுகள் என்ற நாவலை வெளியிட்டார். மலையக மக்களை மையப்படுத்தி குருதிமலை என்ற நாவலை வெளியிட்டார். இந்த நூல் மதுரை அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக உள்ளது. கவ்வாத்து என்ற நாவலையும் இவர் வெளியிட்டுள்ளார். இவரது புதல்வர் ஞானம் பாலச்சந்திரன் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம் என யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தொன்மை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ளார் இதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று சான்றுப்படுத்திப் பதிவு செய்துள்ளார்.
இவரது நூல்கள்
வட இந்தியப் பயண அனுபவங்கள் – 2013
எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
குருதிமலை (புதினம்) – 1979
புதிய சுவடுகள் (புதினம்) – 1977
காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973
இலங்கை அரசின் சாகித்திய ரத்னா விருது பெற்ற இவர் மரபுவழிக் கல்வியை வீட்டுச்சூழலினால் பெற்றுக்கொண்டு நவீன இலக்கியப் பயிற்சியை வாசிப்பின் மூலம் தமதாக்கிக்கொண்டவர். சிறுகதை நாவல் என நவீன இலக்கியத் தளங்களில் தடம் பதித்து அனைவராலும் போற்றப்பட்ட ஞானசேகரம் அவர்கள் ஏப்ரல் 12, 2026 அன்று இறைவனடி சேர்ந்தார்;.
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!