அறிமுகம்
யாழ்ப்பாணத்தின் காரைநகர் பிரதேசத்தில் இலகடி வலந்தலை என்னும் இடத்தில் முருகேசு பொன்னாச்சி தம்பதியரின் இளையபுதல்வனாக 1940-06-05ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை இலகடி இந்து கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்றார். பாடசாலையில் நடைபெறுகின்ற சங்கீத போட்டிகளில் முதலாமிடத்தினைப் பெற்று பெருமை சேர்த்தவர். நடனக் கலையினை தனது பெரிய தந்தையாராகிய சின்னத்தம்பி கணபதிப்பிள்ளையிடம் பயின்று அவரது ஆசியுடன் தாளக்காவடி ஆட்டக்கலைஞனாகத் திகழ்ந்தார். 1963ஆம் ஆண்டிலிருந்து கூத்துக் கலைஞனாகவும் காவடி, நடனத்துறையில் தன்னை ஈடுபடுத்தினார். காவடி, செம்பு நடனம், மயில் நடனம், பாம்பு நடனம், கும்மி, கோலாட்டம், கரகம்ஆகிய கலைகளில் மிகுந்த ஈடுபாடும் ஆற்றலும் கொண்டிருந்த இக்கலைஞர் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைமன்ற உறுப்பினர்களுக்கு இக்கலைகளை பயிற்றுவித்ததுடன் தானும் ஒரு ஆடற்கலைஞனாக பங்குபற்றியவர்.
இக்கலைஞர் மார்க்கண்டேயர், பக்த நந்தனார், பிரகலாதன், பக்த மூர்த்தி நாயனார், பக்த கௌரியின் திருவிளையாடல் என்னும் பல கூத்து, இசை நாடகங்களில் ஸ்திரிபார்ட் எனப்படும் பெண்பாத்திரங்களையும, ஆண்பாத்திரங்களையும் ஏற்று நகைச்சுவை நடிகராக புகழுடன் திகழ்ந்தார். அத்துடன் கோயில் திருவாழாக்காலங்களில் நேர்த்திக்காக சிறுவர்களுக்கு ஆட்டக்காவடியினைப் பழக்கி பிரசித்தி பெற்றார்.
1972ஆம் ஆண்டிலிருந்து காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்ப லயில் வாரிவளவு கலைமன்றத்தில் கலைப் போட்டிகளுக்காக காவடி, கோலாட்டம், கும்மி என்பவற்றினை பாலர்களுக்கு அண்ணாவியம் செய்து 1981ஆம் ஆண்டு வரை போட்டிகளில் முதலாமிடத்தினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தினார். இதே ஆண்டில் ஐந்து வயதுடைய சிறுவர்களை இணைத்து ஆட்டக்காவடியினை அண்ணாவியம் செய்து சிவசக்தி நடனக்குழு என்னும் குழுவினை உருவாக்கி கொழும்பு, நொச்சியாகம, வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும், தீவுப்பகுதிகளான நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, ஊர்காவற்றுறை போன்ற பகுதி கோயில்களிலும் ஆட்டக்காவடிக் கலையினை அரங்கேற்றி புகழ் பெற்றார். 1978ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கிராமிய நடனக் கலைகளை பாரi;வையிடுவதற்காக யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் காரியாலயத்திற்று வருகை தந்த அப்போதைய மாண்புமிகு கலை, கலாசார மந்திரி ஈ.எல்.குருணே அவர்களின் பாராட்டைப் பெற்றதுடன் மாண்புமிகு இராமலிங்க மந்திரி அவர்களது வேண்டுகோளிற்கமைவாக கொழும்பு சென்று ஆட்டக்காவடிக் கலையினை அரங்கேற்றினார்.
1972ஆம் ஆண்டில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் ஆட்டக்காவடிக்கலையினை மட்டுமல்லாது சிவநடனம், செம்பு நடனம், கோலாட்டம், கும்மி, உறிநடனம், கப்பல் நடனம் எனப் பல நடனங்களை அரங்கேற்றினார். அப்போது கோயிலில் தவில் நாதஸ்வர வித்துவான் களாக வருகை தந்திருந்த என்.கே.பத்மநாதன், என்.ஆர்.கோவிந்தசாமி, எம்.ஆர்.சின்னராசர், கைதடி பழனிமலை, எஸ்.பி.பாலசுப்பிர மணியம் அனைவரும் இந்நடனங்களைப் பார்த்து ரசித்ததுமட்டுமல்லாது பொன்னாடையுடன் மலர்மாலை போர்த்தி நடனக் கலைஞர் என்னும் விருதினை வழங்கிவைத்தனர். இதனால் உத்வேகமடைந்த மயில்வாகனம் அவர்கள் ஆட்டக்காவடிக்கலையினை தனது மூச்சாகக்கொடு செயற்படலானார்.
இவருடைய அயராத கலைச் செயற்பாட்டின் காரணமாக இலங்கை முழுவதுமாக அறியப்பட கலைஞராக முகிழ்த்தெழுந்தார். இத்தகைய வளர்ச்சி அவரை கலையுலகில் உன்னதமான கலைஞனாக திகழ வைத்தது. பலநிஞவனங்களும் அரச நிறுவனங்கள், பொது அமைப்புகள் என பலராலும் பாராட்டப்பட்டு விருதுகள் வழங்கி கலைவளர்த்த ஆசானைப் போற்றினார்கள். அந்த வகையில் ஊர்காவற்றுறை கலை, கலாசார சபையினர் கலைஞான வித்தகர் என்னும் விருதினையும், கலைஞானத்தொண்டன், காரைநகர் கலை, கலாசார சபை கலைஞான சமபி என்னும் விருதினையும், சிறந்த கூட்டுறவாளர் விருதினையும், காரைநகர் பிரதேச கலாசாரப் பேரைவயால் கலைஞானச்சுடர் என்னும் விருதினையும், கலைச்சூடாமணி, கரையூர் ஆடல் அரசு போன்ற விருதுகளை தனது ஆட்டக்காவடிக் கலைமட்டுமன்றி பல்வேறு நடனக்கலைகளின் அண்ணாவியார் என்ற அடையாளத்தினை நிலைநிறுத்தி வழங்கி கௌரவிக்கப்பட்ட இக்கலைஞர் 2023.03.10ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

