Saturday, May 4

வல்வையின் சிலம்பு ஆசான்,சிலம்புச் சக்கரவர்த்தி நடராஜா சோதிசிவம்

0

வல்வையி;ன் முன்னோடி நாடகக் கலைஞரும், சிலம்புக் கலையின் ஆசானும், சிலம்புச் சக்கரவர்த்தியுமான அமரர் நடராஜா சோதிசிவம் அவர்களின் பெயரிலான “சிலம்பு ஆசான் சோதிசிவம்” அவர்களின்; சாதனைகளை இன்றைய இளங்கலைஞர்களும், கலைத்துறையை நேசிப்பவர்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

வல்வெட்டித்துறை, நெடியகாடு பிரதேசத்தைச் சேர்ந்த நடராசா மகாலட்சுமி தம்பதியினருக்கு 1933ஆம் ஆண்டில் பிறந்த சோதிசிவம் அவர்கள் சிறுவயதில் இருந்தே தந்தையின் வழிநடத்தலுக்கு அமைய சிலம்பு ஆசான் கார்த்திகேசு அவர்களிடம் முறைப்படி சிலம்புக்கலையைப் பயின்று சிலம்புக் கலையின் உயர் தகைமைகளைப் பெற்றுக்கொண்டார். இதனால் அவரது கலைத்திறமையால் கவரப்பட்ட பலர் அவரிடம் சிலம்புக் கலையைப் பயின்று அவர்களும் இன்று சிலம்புக்கலையின் விற்பன்னர்களாக இருக்கின்றனர்.

 இவரது ஆற்றலை அறிந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடத்திய நான்காவது அனைத்துலகத் தமிழாய்ச்சி மகாநாட்டில் சிலம்புக் கலையையும், அதனோடு சார்ந்த ஏனைய கலைகளையும் ஆற்றுகைப் படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்ததால், இவர் தனது குழுவினருடன் சென்று தமிழராய்ச்சி மகாநாட்டுக் கலாசாரப் பவனியின் பொழுது சுமார் நான்கு மைல் தூரம்வரை சிலம்படி, குறவஞ்சிக்கபடி, தட்டுக்கூத்து, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு ஆகிய மயிர்க்கூச்செறியும் கலைவடிவங்களை ஆற்றுகைப்படுத்தியபொழுது, அன்று வெளிநாட்டுத் தமிழ்அறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் அறிஞர்களினதும்,தமிழ்மக்களினதும் பாராட்டைப் பெற்றார்.அவரது ஆற்றுகை களைக் கௌரவிக்கும்வகையில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுனரும், தலைவருமான வணக்கத்திற்குரிய தனிநாயகம்அடிகள் அவர்களால், “சிலம்புச்சக்கரவர்த்தி” என்ற உயர் விருதையும், பட்டத்தையும் சான்றிதழையும் அவர் கைகளினாலேயே வழங்கிக் கௌரவித்தார். அதனை தன் வாழ்நாளில் பெற்ற அதிஉயரிய விருதாக எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்வார்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் பலபிரதேசங்களிலும் இவரது சிலம்பாட்டங்கள் இடம்பெற்றன.

1956ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த புகழ்பெற்ற கம்படி, சிலம்படி வீரரான “சாதிக்” என்பவர், இக்கலைகளில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடியவர்கள் யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் தன்னுடன் போட்டியிட முன்வருமாறு பத்திரிகைகள் மூலம் சவால் விடுத்தார். யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற கம்படி,சிலம்படிக் கலைஞர்கள் எல்லோருமே அச்சத்தில் பின்வாங்கியதால்,  யாழ்ப்பாண மண்ணின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக 28 வயதான மெலிந்த தோற்றமூடைய சோதிசிவம் அவர்கள் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதாகப் பத்திரிகைகள் மூலமே அறிவித்தார். அதற்கமைய அவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி யாழ்ப்பாணம் முஸ்லிம் ஜின்னா மைதானத்தில் நடைபெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். சாதிக் என்றவீரருடன் இரண்டு சுற்றுப்போட்டிகளிலும் போட்டியிட்ட பொழுது எதிராளியின் கம்பை இலாவகமாக தட்டிவிட்டு, அவரது கம்பங்களை வானத்தில் பறக்கவிட்டு இந்தப்போட்டியில் வெற்றிவீரனாக அறிவிக்கப்பட்டார்.அவர் வெற்றி பெற்றதை அறிவித்ததும், அங்கே குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் கரகோச ஒலிகள் வானைப் பிளந்தன. இந்தப் போட்டியை ஒழுங்குசெய்த யாழ்ப்பாணம் வைரமாளிகை ஸ்தாபனத்தினரால் திரு.ந.சோதிசிவம் அவர்களுக்கு, “வெற்றி வேந்தன்” என்னும் பட்டமும், விருதும், பணமுடிப்பும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

திரு.சோதிசிவம் அவர்கள், ஆங்கிலமொழிமூலம் அன்றைய எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்திபெற்ற போதும், அவர் அரச உத்தியோகத்தில் நாட்டம் செலுத்தாது, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும், இளைஞர்களுக்கு சிலம்புக் கலையைக் கற்றுக்கொடுப்பதிலுமே நாட்;;டத்தைச் செலுத்தியிருந்தார்.இவரிடம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிலம்புக் கலையைக்கற்று அந்தத்துறையில் மிக உயர்ந்த செல்வாக்குடன் இருக்கின் றார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பிரபல சிலம்பாட்ட வீரர்களான எஸ்.பிரபு, எஸ்.சிவலிங்கம், எம்.இரத்தினசோதி, ஆர்.கணேசமூர்த்தி, செல்லக்கிளி மாஸ்ரர் ,கண்ணன் ,ஸ்ரீகாந்தன் உட்படப் பல நூற்றுக் கணக்கானவர்கள் சோதிசிவம் அவர்களிடம் சிலம்புக்கலையைப் பயின்று அதில் பல சாதனைகளைப் படைத்து,தமது சிலம்பு ஆசானுக்குப் பெருமை சேர்த்தனர்.அதனாலேயே “சிலம்பாட்டம்” என்றால், சோதிசிவம் என்று விழிக்கும் அளவுக்குப் பெயர் பெற்றார்.

சிலம்புக்கலையில் மட்டுமல்லாது சோதிசிவம் அவர்கள் நாடகத் துறையிலும் பல சாதனைகளை நிலை நாட்டியவர்.சோதிசிவம் இளைஞனாக இருந்தபொழுது “ஜெயம் புரடக்சன்” என்ற நாடகமன்றத்தின் மூலம் பல நாடகங்களில் நடித்துப் பலஇடங்களில் மேடையேற்றிப் புகழ்பெற்றவர்.அவர் நடித்த நாடகங்களில் “:தேவதாஸ்” என்றநாடகத்தில் தேவதாசாக நடித்து எல்லோருடைய மனங்களிலும் இடம் பிடித்ததுடன் நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்து நாடகக்கலைக்கும் பெருமை சேர்த்தவர்

1991ஆம் ஆண்டு முல்லைத்தீவு,வவுனியா,திருக்கோணமலை போன்ற மாவட்டங் களுக்கெல்லாம் சென்ற சோதிசிவம் அவர்கள் அங்குள்ள இளைஞர்களுக்கு சிலம்பம்,கம்படி,தட்டுக்கூத்து,குறவஞ்சி,மறக்காணம் போன்ற பல வீரவிiளாயட்டுக்களைப் பயிற்றுவித்து அரஙே;கேற்றமும் செய்துவைத்தார். இந்தச் சாதனைகள் மூலம் வடக்குமாகாணமெங்கும்;உள்ள இளைஞர்களிடையே நன்மதிப்பையும்,கௌரவத்தையும் பெற்றுக் கொண்டார். இவ்வரங்கேற்றத்தின் பொழுது, வவுனியாவில் உள்ள KTSDKS என்று விளையாட்டுக் கழகத்தினர் சோதிசிவம் அவர்களுக்கு “சிலம்பரசன்” என்னும் விருது வழங்கிக் கௌரவித்தனர். இவரிடம் சிலம்புக் கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற் மாணவர்கள் இவர்வாழ்ந்த காலத்திலேயே பல மேடைகளில் ஏனைய ஆசான்களின் மாணவர்களுடன் சிலம்பம்,கம்படி போன்ற கலைகளில் மோதிப் பல விருதுகளையும்,சான்றிதழ் களையும் பெற்றுக்கொண்டு தமது ஆசானுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்துக் கலைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகப் பல இளைஞர்களுக்கு இறுதிவரை வழிகாட்டியாகத் திகழ்ந்த சோதிசிவம் அவர்கள் 25ஆம் திகதி, டிசெம்பர் மாதம் 1997ஆம் ஆண்டு அமரத்துவம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் இதுவரை எவருக்குமே நடந்திருக்காத அளவுக்கு அவரது மாணவர்களால் இராஜ மரியாதையுடன் இடம்பெற்றது. ஒரு அற்புதமான அழியாப்புகழ் கொண்ட கலைஞனுக்கு, ஒரு உன்னத மான சிலம்புச் செல்வனுக்கு தமிழினம் வழங்கிய மிகப்பெரும் கௌரவமாக இருந்தது.

நன்றி – கலாபூஷணம் வல்வை .ந.அனந்தராஜ் B.A.(Hons.), M.A                                                                           Dip-In-Education, Dip-In-Journalism,  SLPS, SLEAS

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!