Tuesday, April 30

தளவாசல்.

0

கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ்.

எழு கலை இலக்கியப் பேரவையினது வெளியீடாக நான்கு இதழ்களை மலர்த்திய ஒரு சஞ்சிகையாகும். ஆர்வமுடைய புதிய படைப்பாளிகளை இணைத்து அவர்களது படைப்புகளையும் வெளிக்கொண்டு வருதல் மற்றும் அவர்களது தேடலினை ஊக்குவித்து அவர்களைக் காத்திரமாக்குதலுடன் படைப்பாளிகளது காத்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இயங்குவதை முதல் நோக்காகக்கொண்டது.

அத்தோடு சமூகப் பெறுமானமுள்ள இளஞ்சந்ததியை திரட்டி செயற்றிறனு டைய சமூக இயக்கமாக களம் அமைத்து பண்பாடு தொடர்பான தொடர் விழிப்பை ஏற்படுத்துவதை துணைநோக்காகக் கொண்டது.  கட்சிசார் அரசியல் மதம்சார் விடயங்களைத் தவிர்த்து இலக்கியத்திற்கூடான காலப்பதிவை தவறின்றிச் செய்தல் என்பதை தமக்கான இயங்குவெளியாக வரித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மூத்த எழுத்தாளர் அமரர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதனை முதன்மை ஆசிரியராகவும் ந.மயூரரூபன், கை.சரவணன் ஆகியோரை இணையாசிரியர் களாகவும் சி.நிசாகரனை வெளியீட்டாளராகவும் கொண்டு ஏப்ரல் – ஜீன்-2016ஆம் ஆண்டு  முதலிதழ் வெளிவந்தது. “எழு கலை இலக்கியப் பேரவை”யினது இலக்குக ளில் ஒன்றான சஞ்சிகை வெளியிடல் என்பதற்கான தொடக்க முயற்சிகள் வன்னித்தளத்தில் முன்னெடுக்கப்பட்டதாயினும் நாட்டுச்சூழல் அதனைச் சாத்தியமாக்க அனுமதிக்கவில்லை.

எந்தவிதமான பொருளாதார அடித்தளமும் இன்றி வெறும் உழைப்பையே மூலதனமாகக்கொண்டு நான்கு இதழ்கள் வெளிவந்தன.

படைப்பாளிகளது ஒருங்குகுவிப்பு மற்றும் வினியோகம் சார் நெருக்கீடுகளால் காலாண்டு எனும் ஒழுங்கு பேணப்படமுடியாத நிலையிலும் 2017 இறுதிக்காலாண்டில் தனது நான்காவது இதழுடன் வருகையை ஒத்திவைத்துள்ளது. 2018இல் பிரதம ஆசிரியது மறைவும் அதிலிருந்து மீண்டு ஐந்தாவது இதழது தயாரிப்புகளை ஏப்ரல் அனர்த்தமும் தொடர்ந்து நோயனர்த்தம் என நீண்டு தற்போது பொருளாதார முடக்கத்தில் வருகையை ஒத்திவைத்திருக்கிறது.

கணிசமான புதியவர்களையும் பிரபலமானவர்களையும் ஒன்றிணைத்து சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனும் வழக்கமான விடயங்களோடு சமூக விமர்சனம் மற்றும் எமது வளங்கள் அவற்றினது காலத்துடனான மாற்றங்கள் அறிவியல் பொருளாதாரத்தினது மறுமுகதரிசனம் என்பவற்றை நான்கு இதழ்களும் கொண்டமைந்திருந்தன.

விசேடமாக ஆளுமைகளை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ஒன்று நேர்காணல்வழியாக அவர்களது அனுபவப் பகிர்வாகவும் இரண்டாவது மறைந்த ஆளுமையொன்றினது சிறுஅறிமுகத்தோடு அவ்வாளுமையினது படைப்பொன்றினது மீள்பிரசுரமாகவும் அமைந்திருந்தது. மீள்வருகைக்கான தேவையைக் கோரிநிற்கும் சஞ்சிகையாக தளவாசல் உள்ளது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!