யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் பேராளுமை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் இழப்பின் வெளியில் ஒரு பதிவு
ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய கூத்துமரபின் அண்ணாவிப் பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது மிகப்பெரிய வேதனையை அளித்து நிற்கின்றது. யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் முதுசமாகத் திகழ்ந்த அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா அவர்கள் 28.05.2021 அன்று ஊர் கூட முடியாத இடர்க்காலத்தில் மரணமானார் என்ற செய்தி ஈழத்தின் நாடக உலகத்திற்கு ஒரு அதிர்ச்சியான செய்தியாகும். நீண்ட கால அனுபவங் களுடன், பூந்தான் யோசேப்பு, பக்கிரி சின்னத்துரை.. உள்ளிட்ட மூத்த அண்ணாவிமார்களோடும், பல இளைய அண்ணாவிமார்களோடும் இணைந்து பணியாற்றி தென்மோடிக் கூத்துமரபின் வகைமைக்குச் சான்று பகரக்கூடிய ஒரு சில அண்ணாவிமார்களில் முதன்மையானவ ராகத் திகழ்ந்ததுடன் திருமறைக் கலாமன்றத்தில் ஒரு கூத்துப் பாரம்பரியம் உருவாகவும் வளரவும் காரணமாக இருந்த இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. தன்னுடைய அனுபவங்களை மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற பேரவாவுடன் செயற்பட்ட இவர் இளையவர்கள் பலரை கூத்துமரபில் உள்ளீர்த்து மரபின் நீட்சிக்கு வழிகோலியதுடன், நாடுகடந்து புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்தவர்களுக்கும் பலவகை யில் ஊக்கமாக செயற்பட்டார். கூத்தினை ஆவணமாக்கும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட இவரது இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கலையுலகப் பிரவேசம்
அருளப்பு பேக்மன் ஜெயராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21.10.1945 அன்று பிறந்தவர். அல்லைப்பிட்டியைத் தனது பூர்வீக இடமாகக் கொண்டவர். எனினும் தந்தையாரின் தொழிலின் நிமித்தம் யாழ்ப்பாணம் பறங்கித்தெரு, அவரின் வசிப்பிடமாகியது. எழுபது களுக்குப் பின்னர் வளன்புரம் கொழும்புத்துறையை தனது வாழ்விட மாக்கிக் கொண்டார். கொழும்புத்துறை புனித யோசவ் வித்தியாலயத் தில் கல்வி பயின்ற இவர் இளமையிலேயே சாரீர வளத்துடன் திகழ்ந்தார். இவரது பெரிய தகப்பனார் மரிசீலனும் சிறிய தந்தையார் சூசை மரியானும் நாவாந்துறையில் அண்ணாவிமார் களாகவும் கூத்துக் கலைஞர்களாகவும் திகழ்ந்தவர்கள். அத்தகைய பரம்பரையில் தோன்றிய இவர், சிறந்த சாரீர வளத்தினைக் கொண்டிருந் தார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த, தென்னிந்தியப் பாடகர்களான தியாகராஜ பாகவதர், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன்.. போன்றோர் பாடிய பாடல்களை நண்பர்களுடன் சேர்ந்து உச்சதொனியில் பாடுவதனையும் நகைச்சுவையாக உரையாடி நண்பர்களைச் சிரிக்க வைப்பதனையும் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அங்கிருந்த திருக்குடும்ப சனசமூக நிலைய நிலைய நண்பர்களுடன் இணைந்து ‘ஓசித்தாலி’ என்ற நகைச்சுவை நாடகத்தினை நண்பர்களுடன் இணைந்து மேடையேற்றியும் உள்ளார். அதுமட்டுமன்றி மரணவீடுகளில் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களையும் அண்ணாவிமார்களுடன் இணைந்து பாடி வந்தார். இவரது குரல் வளத்தினைக் கண்ட நாவாந்துறையை சேர்ந்த அண்ணாவியார் வின்சன் டிபோல் அவர்கள் தனது ‘யுவானியார்’ நாட்டுக்கூத்தில் ‘ஏரோடியாள்’ பாத்திரத்தை வழங்கி நடிக்கச் செய்தார். அக்கூத்து அவருக்கு பெரும் புகழைத் தேடிக்கொடுத்தது. அவரது 21 வயதில் அவர் நடித்த அக்கூத்தே அவரது கலையுலகப் பிரவேசமாக மாறியது. இலங்கை தொலைத் தொடர்புத் திணைக்களத்தில் (ரெலிக்கொம்) தொழில் நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவர் ஓய்வு நேரங்களில் கூத்துச்செயற்பாடுகளுடன் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார்.
பூந்தான் யோசேப்புவுடன்…
நாவாந்துறையில் யுவானியார் நாட்டுக் கூத்தில் நடித்த அவரது நடிப்புத் திறனையும் குரல் வளத்தினையும் கண்ட, அக்காலத்தில் புகழ்பெற்ற விளங்கிய அண்ணாவியார் பூந்தான் யோசேப்பு இவரை தனது சங்கிலியன் நாட்டுக்கூத்தில் ‘பரநிருபசிங்கன்’ பாத்திரத்தினை நடிப்பதற்கு அழைத்தார். அதில் நடித்த அனுபவமும் கிடைத்த பாராட்டும் இவருக்கு பூந்தான் யோசேப்புவின்பால் மதிப்பைக் கொண்டுவர அவரையே தனது குருவாகக் கொண்டு அவரது ‘யாழ் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தில்’ இணைந்தார். பூந்தான் யோசேப்பு இறக்கும் வரை அவருடைய கூத்துக்களில் நடித்தது மட்டுமன்றி அவர் மேற்கொண்ட கூத்து நெறியாக்கங்களிலும், நிர்வாகப் பணிகளிலும் பக்கபலமாக இருந்தார். ‘யாழ் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தின்’ செயற்திறன் வாய்ந்த இளைஞனாகப் பணியாற்றிய துடன் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அண்ணாவி மார்களான பக்கிரி சின்னத்துரை, சாமிநாதர், குணசிங்கம், பாவுலுப்பிள்ளை, இராசாத் தம்பி, அந்தோனிப்பிள்ளை, சுவாம்பிள்ளை, வின்சன் டிபோல், பெலிக்கான், பொன்னுத்துரை, செல்லையா, அருளப்பு, மனப்பு… போன்ற கூத்தின் ஜாம்பவான்களாக கருதப்பட்ட பல அண்ணாவி மார்களையும் ஒன்றிணைத்து பூந்தான் யோசேப்பு அவர்கள் பல கூத்துக்களைத் தயாரித்தார். இந்த மூத்த அண்ணாவிமார்களை ஒன்றிணைக்கும் பணிக்கு பூந்தான் யோசேப்பு அவர்களுக்கு உதவியதுடன் அவர்களுடன் நடித்த அனுபவங் களையும் தனதாக்கி கொண்டதனால் ஈழத்தின் தென்மோடிக் கூத்துமரபின் நெளிவு சுழிவுக ளையும் அதன் ஆழ நிலைப்பட்ட நெறிகளையும் வகைத் தூய்மையையும் அறிந்தவராக திகழ்ந்தார்.
பிற்பட்ட காலத்தில் நவரச நாட்டுக்கூத்துக் கலாமன்றத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் சில்லாலை, இளவாலை, விளான், பலாலி, நாரந்தனை, கட்டக்காடு, மயிலிட்டி, குடாரப்பு, செம்பியன்பற்று, வெற்றிலைக்கேணி, ஒட்டகப்புலம், அச்சுவேலி… என பல கிராமங்களுக்கும் சென்று கூத்துக்களை பூந்தான் யோசேப்புவுடன் சென்று பயிற்றுவித்தது மட்டுமன்றி அவ்வப்பிரதேசக் கலைஞர்களுடன் நீண்டகாலமாகத் தொடர்புகளையும் பேணிவந்தார். அது மட்டுமன்றி இலங்கை வானொலியில் அக்காலத்தில் கூத்துக்கள் ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பிய காலத்தில் பல கூத்துக்களில் நடித்தது மட்டுமன்றி அவற்றின் ஒலிப்பதிவுக்கும், வீ.ஏ.சிவஞானம், கே.எம். வாசகர், அ.தாசீசியஸ் போன்ற வர்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்.
நடிப்புச் சிறப்பு
இனிமையான குரல் வளமும் உச்ச சுருதியில் பாடுந்திறனுங்கொண்ட இவர் ‘நாடகக்காரன்’ பாத்திரங்களையே அதிகமாக நடித்தார். தென்மோடிக் கூத்துமரபில் பிரதான பாத்திரங்களை ‘இராச பாத்திரம் (ராஜபாட்), ‘பெண்பாத்திரம்’ (ஸ்திரி பாட்), ‘நாடகக்காரன் பாத்திரம்’ என வரையறுப்பர.; நாடகக்காரன் பாத்திரம் ஏற்பவரின் சாரீர வளம் உச்ச சுருதியில் பாடுந்தன்மையில் அமைய வேண்டுமென்பதுடன் மிகவும் சிக்கலான சோக இராகங்களைப் பாடவல்லவராக இருக்கவேண்டு மென்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்தகைய நாடகக்காரன் பாத்திரங் களையே அதிகம் ஏற்ற இவர் ‘சங்கிலியன், கருங்குயில் குன்றத்துக் கொலை, மரியதாசன், எஸ்தாக்கியார், தேவசகாயம்பிள்ளை, விஜய மனோகரன், ‘மனம்போல் மாங்கல்யம்’… போன்ற பல கூத்துக்களில் பூந்தான் யோசேப்பு அவர்களுடனும் பல மூத்த அண்ணாவி மார்களுடனும் நடித்துப் புகழ்பெற்றார். இவர் நடித்துப் புகழ் பெற்ற பாத்திரங்களாக பரநிருபசிங்கன் (சங்கிலியன்), இரண்டாம் தேவசகாயம் (தேவசகாயம் பிள்ளை), மந்திரி (ஜெனோவா), எஸ்தாக்கி (எஸ்தாக்கியார்), அலங்கார ரூபன் (அலங்கார ரூபன்), ஒலான்டோ (மனம்போல் மாங்கல்யம்), மரியதாஸ் (மரியதாசன்), சஞ்சுவான் (யுவானியார்), தமையன் (மெய்க்காப்போன் தன் கடமை), இராயப்பர் (நீ ஒரு பாறை), யோபு (அனைத்தும் அவரே),சூசை (இடமில்லை) கம்பன் (கம்பன் மகன்), முனிவர் (சோழன் மகன்) போன்றவை குறிப்பிடத் தக்கவை. இவற்றினை விட சில இசை நாடகங்களிலும் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சிகள், நவீன நாடகங்களிலும் நடித்துள்ளார். தான் பெரிய நடிகன் என்ற எந்த தலைக்கனமும் இன்றி எளிமையாகவும் பணிவாகவும் அண்ணாவி மாருக்கு கட்டுப்பட்டு நடிக்கின்ற நடிகனாகவும் இருந்த காரணத்தால் அண்ணாவிமாரிடையே இவருக்கு என்றும் வரவேற்பு இருந்துள்ளது.
நெறியாளனாக
பூந்தான் யோசேப்பு நெறிப்படுத்தும் கூத்துக்களில்,ஆரம்பத்தில் சல்லரி இசைப்பவராகவும், பின்னர் உதவிப்பயிற்றுவிப்பாளனாகவும் பல கூத்துக்களை நெறிப்படுத்தி வந்தவர் பின்னர் பல கிராமங்களிலும் பாடசாலைகளிலும் பல கூத்துக்களை நெறிப்படுத்தினார். மனம்போல் மாங்கல்யம், எஸ்தாக்கியார், தேவசகாயம்பிள்ளை, சங்கிலியன், யூலியசீசர், கருங்குயில் குன்றத்துக்கொலை, மனுநீதிச்சோழன், ஜெனோவா, சோழன் மகன், கம்பன் மகன், விஜயமனோகரன், அனைத்தும் அவரே…போன்ற பல கூத்துக்களை நெறிப்படுத்தினார். சில்லாலை அச்சுவேலி ஒட்டகப்புலம், மயிலிட்டி, போன்ற பல கிராமங்களிலும் கூத்துக்களை நெறிப்படுத்தியது மட்டுமன்றி, பரியோவான் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர்மடம், புனித சாள்ஸ் மகாவித்தியால யம், சென்யேம்ஸ் மகளிர் பாடசாலை.. போன்ற பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு கூத்துக்களை நெறிப்படுத்தி மேடையேற்றி வந்துள்ளார். பிற்பட்ட காலத்தில் திருமறைக் கலாமன்றத்தில் பல கூத்துக்களை நெறிப்படுத்தினார்
திருமறைக் கலாமன்றத்தில்
பூந்தான் யோசேப்பின் இறப்பின் பின்னர் திருமறைக்கலாமன்ற இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகளின் அழைப்பினை ஏற்று 1989 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தில் இணைந்த இவர், ‘நாட்டுக்கூத்துப்பிரிவு’இல் அண்ணாவியார் அ. பாலதாசுடன் இணைந்து கூத்துக்களை நெறிப்படுத்தியதுடன் பல கூத்துக்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தார். நீ ஒரு பாறை, இரத்தக்கடன், அனைத்தும் அவரே, இடமில்லை, கம்பன்மகன், தேவசகாயம்பிள்ளை, செந்தூது, சோழன்மகன்.. போன்ற பல கூத்துக்களில் பிரதான பாத்திரமாக நடித்தது மட்டுமன்றி நெறியாள்கையும் செய்தார்.
கூத்துக்கள் புதிதாக எழுதப்படவேண்டும் என்ற ஆர்வங்கொண்டிருந்த இவர் இளையோரைக் கொண்டு புதிய கூத்துக்களை எழுதுவிப்பதற்கு ஊக்கமாக இருந்து ம.சாம்பிரதீபனைக் கொண்டு ‘சோழன் மகன்’ கூத்தையும் யோண்சன் ராஜ்குமாரைக் கொண்டு ‘கம்பன் மகன்’ கூத்தினையும், செ.அழகராசாவைக் கொண்டு, ‘வளையாபதி’ கூத்தினையும் எழுதி மேடை யேற்றியது மட்டுமன்றி அவற்றினை நூலாகவும் பதிப்புச் செய்வித்தார். இவற்றினை விடவும் செ. அழகராசா அவர்களைக் கொண்டு நீதி காத்தான் (சிந்து நடைக்கூத்து,) களம் வென்ற காரிகை (இசை நாடகம்) என்பவற்றையும் எழுதுவித்தார். திருமறைக் கலாமன்றத்தின் நாடகப்பயிலக மாணவர்களுக்கு சிந்துநடைக் கூத்தினை அறிமுகம் செய்யும் ஆவலில் நீதி காத்தானை எழுதுவித்து நெறியாள்கை செய்வித்து மேடையேற்றினார். அதுமட்டுமன்றி சில்லாலை, அச்சுவேலி, வெற்றிலைக்கேணி, இளவாலை.. என பல கிராமங்களுக்கும் சென்று கூத்துக்களை நெறிப்படுத்தியது மட்டுமன்றி பல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு கூத்துக்களைப் பயிற்றுவித்து மேடையேற்றினார். திருமறைக் கலாமன்றத்தில் இளையோரை இலக்கு வைத்து கூத்துக்களைப் பயிற்று வித்ததுடன் பல இளைஞர்கள் இன்று கூத்துக்களை நிகழ்த்துவதற்கு காரணமாகவும் திகழ்ந்தார். திருமறைக் கலாமன்றம் நிகழ்த்திய நாட்டுக்கூத்துவிழாக்கள், நாட்டுக்கூத்துப் போட்டிகள், கருத்தரங்குகள், பட்டறைகள் என பலதரப்பட்ட செயற்பாடு களுக்கும் ஒரு குருஸ்திரமாக நின்று வழிகாட்டினார். அது மட்டுமன்றி இளம் அண்ணாவிமார்கள் உருவாக வேண்டும் என்ற பேரவாவில் திருமதி சாந்தி ரவீந்திரன், திரு.யோ.யோண்சன் ராஜ்குமார் போன்றவர்களை அண்ணவிமாராக அவரவர் கிராமங்களில் பட்டமளித்து அவர்களின் தொடர் இயக்கத்திற்கு காரணமாக இருந்தார். அதுமட்டுமன்றி கூத்து மரபிலே புத்தாக்கங்களையும், கூத்துருவ நாடகங்களையும் இளைய சமூகம் உருவாக்க முயன்ற போது அதில் தனக்கு பெரிய அளவில் உடன்பாடு இல்லாத போதும், அவர்களின் படைப்பாக்கத்திற்கு மதிப்பளித்துத் தனது பூரண ஒத்துழைப்பினை நல்கி நின்றார். பழைமை யின்பால் தீவிர ஆதரவாளனாக இருந்தபோதும் புதுமைகளை வரவேற்பவராகவும் செயற் பட்டார்.
கூத்தினை ஆவணமாக்குதல்
தென்மோடிக் கூத்துமரபின் அடிநாதமாக இருக்கின்ற இசைமரபினை பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற இக்கட்டுரை ஆசிரியரின் எண்ணத்தினை விரும்பி ஏற்று ஐந்து வருடங்கள் பாரிய முயற்சி செய்து, இக்கட்டுரை ஆசிரியருடன் இணைந்து பணியாற்றி 158 பாடல் மெட்டுக்களையும் ஒலிப்பதிவு செய்து, அதன் இராக தாளங்களை இசைத்துறை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் அவர்களின் உதவியுடன் இற்றைப்படுத்தி யாழ்ப்பாணத் ‘தென்மோடிக் கூத்துமரபின் இசைமெட்டு;கள்’ என்ற இசை இறுவட்டின் மூலமும் அதற்கான நூல்த் தொகுப்பின் மூலமாகவும் மிகப்பெரிய ஆவணமாக்கினார். அதுபோலவே கிறிஸ்தவ மரபுவழி ஒப்பாரிப் பாடல்கள் பாடப்படுகின்ற பாரம்பரியம் அற்றும் போகும் சூழலில் அதனை ஆவணமாக்கும் நோக்குகோடு திருமறைக்கலாமன்ற இயக்குநர் மரியசேவியர் அடிகளின் ஆலோசனையுடன் அவற்றினை ஒலிப்பதிவுசெய்து ‘வியாகுல இசைத் தருக்கள்’ என்ற பெயரில் திருமறைக் கiலாமன்றத்திற்கூடாக இறுவட்டாக வெளியீடு செய்தார். பல கூத்து நூல்களை திருமறைக் கலாமன்றம் பதிப்புச் செய்வதற்கும் இவரது ஊக்கமே காரணமாக இருந்தது.
1997,1998 காலப்பகுதியில் திருமறைக் கலாமன்றம் ‘வடலிக்கூத்தர் கலைப்பயணம்’ என்ற பெயரில் மேற்கொண்ட ஐரோப்பிய கலைப் பயணத்தில் இணைந்து சென்று பிரான்ஸ் லண்டன், யேர்மனி, சுவிற்சிலாந்து, ஹொலன்ட் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் மரபு வழி நாடகங்களை நிகழ்த்திப் புகழீட்டி மீண்டார். இவரது நெறியாள்கையில் உருவாகிய ஜெனோவா, சோழன்மகன் ஆகிய கூத்துக்கள் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றன. அக்கூத்துக்களில் மட்டுமன்றி சகுந்தலை இசைநாடகம், ஜீவபிரயத்தனம் நவீன நாடகம் என்பவற்றிலும் நடித்தார்.
பாராட்டுக்கள் விருதுகள்
இவரது கலைப்பணிக்காக ஈழத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் பலரால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப் பட்டார். முன்னாள் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் இவருக்கு இசைக்குயில் என்ற விருதினை வழங்கினார். யாழ் பிரதேசச் செயலகம் ‘யாழ்ரத்னா’ விருதினையும் திருமறைக் கலாமன்றம் இவருக்கு ‘கலைஞான பூரணன்’ என்ற விருதினை வழங்கி கௌரவித்தது. இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் ‘கலாபூஷண’ விருதையும் வடமாகாண பண்பாட்டுத் திணைக்களம் ‘ஆளுநர் விருதினையும்’, வழங்கி கொளரவப்படுத்தினார்கள். விருதுகளால் கௌரவம் பெற்றவர் கள் மத்தியில் இவரால் விருதுகள் கௌரவம் பெற்றன என்றே கூறலாம். கலையிலும் பண்பாட்டி லும் பற்றுக்கொண்ட அர்ப்பணிப்புடன் இறக்கும் வரை இடையறாது செயற்பட்டுவந்த, தம்மை சமூகத்திற்கு கையளித்த பெரும் விருட்சங் களை ஈழமண் இழந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. அதுவும் இந்த இடர்கால ஊரடங்கில் அவர்களது இழப்புகளும் பேசப்படாமல் போவது மிகுந்த வேதனையை அளிக்கின்றது.
நன்றி கட்டுரையாளர் திரு யோ.யோண்சன் ராஜ்குமார்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
