Thursday, May 30

கலாபூஷணம் சிவத்தமிழ்வித்கர் சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் (சிவ.மகாலிங்கம்)

0

அறிமுகம்

இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ சமயத்தின்மீது அபரிமிதமான பற்றோடு வாழ்ந்தவர். பேச்சாற்றல், எழுத்தாற்றல் கொண்ட இவர் திருமுறைகள் மீதும் சைவ சமய தத்துவங்கள் மீதும் ஆழ்ந்த புலமையுடையவராக எம் மத்தியில் திகழ்ந்தவர். கடந்த ஐம்பதாண்டு காலமாக தனது கிராமத்திலும் இலங்கை மட்டுமல்லாது உலக நாடுகளிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி மக்களை நெறிப்படுத் திய பெருந்தகையாளர்.

பார்போற்றும் யாழ்ப்பாணம் பண்பாட்டிலும், கல்வியிலும் ஆன்மீகத்திலும், பாரம்பரியத்திலும் தனித்துவம் பெற்ற பூமியாகமரபார்ந்த மாவட்டமாகத் திகழ்ந்து வருகின்றது. யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்குப் பக்கமாக ஏறக்குறைய பத்துக் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் சைவமும் தமிழும் தழைத்தோங்கி உலகம் போற்றும் உத்தமர்களாம் சரவணமுத்துச் சித்தர,; சைவத்தின் காவலரான காசிவாசி செந்திநாதையர் போன்றோர் அவதரித்த புண்ணிய பூமி குப்பிழான் ஆகும். இங்கு சைவ ஆலயங்களும் தமிழின் சுவாசமும் என்நேரமும் வீசிக்கொண்டிருக்கும்.

இத்தகைய பாரம்பரியத்தில் சைவப் பற்றாளனாய்  பிறந்து சைவத் தொண்டுகளாற்றி நல் ஆசிரியனாய், கலாசாலை விரிவுரையளராகி, ஆசிரியர் கலாசாலையின் உப அதிபராகி, பிரதி அதிபராகி, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடக்கு  மாகாணத்தின் உதவிப் பணிப்பாளாராகி  உயர்பதவிகளை அலங்கரித்த இவர் மாபெரும் சைவ சமயப் பிரசங்கியும் அறிஞருமாவார்.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகரை குலதெய்வமாகக் கொண்டு சைவப் பாரம்பரியத்தில் உதித்த, கிளாக்கர் தொழிலில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடமையே கண்ணாக வாழ்ந்த சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளுக்கு இரண்டாவது புதல்வனாக நான்கு  சகோதரர்களுடனும், இரண்டு சகோதரிகளுடனும் 1949-03-01ஆம் நாள் பிறந்தார்.

இன்றைய குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயமாகிய விக்னேஸ்வரா வித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார். தரம் ஐந்து வகுப்பில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் அதி திறமைச் சித்தி பெற்றதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்பதற்குத் தெரிவாகி தரம் ஆறிலிருந்து அங்கு விடுதியில் தங்கியிருந்து கற்று வந்தார். அப்போதைய பத்தாம் வகுப்புப் பரீட்சையில் கணிதவியல் மற்றும் சைவ சமயப் பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கணிதப்பிரிவில் கற்பதற்காக இணைந்து கொண்டார். 1970ஆம் ஆண்டு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நில அளவையாளர் துறையில் கல்வி கற்று தியத்தலாவ பயிற்சி முகாமில் தொழில் பயிற்சியைப் பெற்றார். இக்காலத்தில் அவருக்கு ஏழுதுவினைஞர், கிராம சேவகர், ஆசிரியர் போன்ற துறைகளில் தொழில் நாடி வந்தன. ஆனால் அவர் தனது ஆழ் மன உணர்வுக்கு மதிப்பளித்து தான் பெரிதும் போற்றி வந்த ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டார். இது பின்னாளில் பல நன் மாணாக்கர்களையும் சொற்பொழிவாளர்களையும் உருவாக்கம் செய்வதில் முக்கியபங்கினை வகித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

1975-03-27ஆம் நாள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். குப்பிழானைச் சேர்ந்த திரு சொக்கலிங்கம்தவமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியான சாந்தா அவர்களை மனம்விரும்பிக் கரம் பற்றினார். தனது குலதெய்வமான குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இலட்சிய தம்பதிகளாக இல்லறத்தை நல்லறமாக நடத்தினார்கள். இதன் பயனாக ஐந்து ஆண்பிள்ளைச் செல்வங் களைப் பெற்றார். அவர்களுக்கு இனிய தமிழில் பெயர்சூட்டி மகிழ்ந்த சிவத்தமிழ் வித்தகரவர்கள் அவர்களனைவரையும் கல்வியில் சிறப்பாக முன்னேற்றி சமூகத்தின் உயர் அந்தஸ்த்தில் வாழவைத்தவர். மூத்த புதல்வன்; அரவிந்தன் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் மேற்படிப்பினைக் கற்று குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிலகாலம் பணியாற்றி தாயகம் மீண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு மருத்துவராக கடமையாற்றிவருவதுடன் இரண்டாவது புதல்வன் அறிவழகன் மனநல ஆலோசகராக ஐரோப்பாவில் பணியாற்று கின்றார்மூன்றாவது புதல்வன் அன்பரசன் கைத்தொழில் இயந்திரவியல், வியூகமுகாமைத்துவம் ஆகிய துறைகளில் கலாநிதிப்பட்டம் பெற்று ஐக்கிய அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். நான்காவது மகன் அருளினியன் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சிறப்புச் செய்தியாளராக ஊடகத்துறையி;ல் பயணித்துவருகின்றார். இளைய புதல்வன் அழகரசன் மென்பொருள் கணணிப் பொறியியலாளர் பட்டம்பெற்று Root Code நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகின்றார். தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து முந்தியிருப்பச்செயல் என்று வள்ளுவப் பெருந்தகை கூறினார். அவ்வாக்கினை வேதவாக்காக எடுத்து அவ்வழி பயணித்து எம் சமூகத்திற்கு ஐந்து மாண்புறு சேவையாளர்களை உருவாக்கிய பேறுபெற்றவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டக்கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்ட பொழுது முதல்தொகுதி மாணவனாக தன்னை பதிவு செய்து கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டதன் மூலம் கல்வி கற்பதில் வயதும் காலமும் ஒருபொழுதும் தடையாக இருக்கப்போவதில்லை என நிரூபித்தார். பின்னர் சைவசித்தாந்தத்தில் முதுகலைமாணி (M.A) பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

சைவத்தின் சேவகனாய் சிவத்தமிழ் வித்தகர்.

குப்பிழான் தந்த சேவையின் நாயகன் சிவ மகாலிங்கமவர்கள் சமயம் கடந்து கல்விப்பணியினையும் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் ஆற்றியவர் இவரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பின்வரும் பிரதான இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திப் பார்க்க முடியும்.

01-   கல்விப்பணிகளில் சிவத்தமிழ் வித்தகரின் வகிபாகம்

02-   சமய,ஆன்மீகப்பணிகளில் சிவத்தமிழ் வித்தகரின் வகிபாகம்

என இரண்டு வகைக்குள் இவரது செயற்பாடுகளையும், அறிவுப்பகிர்தலையும், சிந்தனைச் சீண்டலையும் உள்ளடக்கி ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமான தாக அமையும்.

கல்விப்பணிகளில் சிவத்தமிழ் வித்தகரின் வகிபாகம்

ஆசிரிய முத்தாய் சேவை வழங்கிய சிவத்தமிழ் வித்தகர் அவர்கள் தனது ஆசிரியப்பணியினை நல்லமுறையிலே மேற்கொண்ட பெருந்தகையாளர். இவர் ஆசிரியராக, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராக, இக்கல்லூரியின் உப அதிபராக, பிரதி அதிபராகப் பணிபுரிந்தவர். இவ்விரு அடிப்படையிலும் இவருடைய கல்விப்பணியின் வகிபாகம் தொடர்பாக நோக்குதல் பொருத்தமானது.  

ஆசிரியப் பணியில் சிவத்தமிழ் வித்தகர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக ளில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தனது கிராமத்தில் இலவச வகுப்பு களை நடத்தி ஆசிரியராக தன்னை உருவாக்கிக்கொண்டார். இதன் காரண மாக மனதில் ஆழப்பதிந்திருந்த ஆசிரியர் மகத்துவத்திற்கு வடிவம் கொடுக்க லானார். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் தேடிவந்த போதும் ஆசிரியர் தொழிலை தெரிவு செய்தார். 1972-1973 காலப்பகுதியில் கொழும்புத் துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராக இணைந்து பயிற்சி பெற்று ஆசிரியராக வெளியேறி மலையகம் எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். பின்னர் கேகாலை மகா வித்தியாலயத்தில் சில ஆண்டுகள் கற்பித்தார். இக்காலத் தில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கேகாலை மாவட்ட செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். இம் மாவட்டத் திலுள்ள ஆசிரியர்களின் குரலாக ஒலித்து நல்லபல சேவையினை வழங்கி சிறந்த தொழிற்சங்கவாதியாக மிளிர்ந்தார். மலையகம் முழுவதும் சிவத்தமிழ் வித்தகர் பெயர் அடிபடலாயிற்று. நல்லாசிரியனாய்சிறந்த தொழிற் சங்கவாதியாய் மகிழ்வுடன் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அதாவது 1977ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. மலையகமும் பெரிதாகப் பாதிப்புக்குள்ளாகியது. இதனால் மலையகத்தினைவிட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்தடைந்த சிவத்தமிழ் வித்தகரவர்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் தனது ஆசிரியப் பணியினை பன்னிரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்தார். இங்கு பணியாற்றிய காலத்தில் கல்லூரியின் இந்துமன்றப் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு பல்வேறு இந்துசமயப் பணிகளை மாணவர்கள் மூலம் முன்னெடுத்தார். கல்லூரியின் பவளவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலருக்கும், வருடாவருடம் வெளியிடப்பட்டு வருகின்ற வித்தியா என்னும் கல்லூரியின் இதழுக்கும் ஆசிரியராகச் செயற்பட்டு சிறந்த படைப்பாக்க கர்த்தாவாக விளங்கினார். உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய காலம் தனது பொற்காலமெனவும் அக்காலத்தினை தன்னால் மறக்க முடியாது என அடிக்கடி கூறிக்கொள்ளும் வித்தகரவர்கள் சைவப்பற்றுடன் நல்லொழுக்கமுடைய நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கி பெருமைப்பட்டார்.

தனது கிராமமாகிய குப்பிழானில் தனியார் கல்வி நிலையமொன்றை ஆரம்பித்து கணிதபாடத்தினை திறமையாகக் கற்பித்து அதிகமான மாணவர்கள் கணிதபாடத்தினை விரும்பிக்கற்கும் துறையாக ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவருடைய கற்பித்தல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் வாய்ப் பினைப் பெற்றார். இங்கு தரம் ஆறிலிருந்து தரம் பதினொன்று வரையான வகுப்பு மாணவர்களுக்கு இந்து சமயத்தையும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இந்து நாகரிகத்தையும் கற்பித்து வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்ல}ரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்தேறிய திருமுறை மாநாட்டினை முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர்.

1990 காலப்பகுதியில் பலாலி ஆசிரிய கலாசாலையில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான விரிவுரையாளராக நியமனம் பெற்றார். விரிவுரையாள ராகத் தனது பணியோடு சைவப் பண்பாட்டுடன் கூடிய பேச்சாளர்களை உருவாக்கி கல்விப்போதனையால் உயர்ந்த உத்தமராம் வித்தகரவர்கள் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உப அதிபராகவும் பின்னர் பதில் அதிபராகவும் பதவியுயர்வு பெற்றார். இக்கலாசாலையில் கணித, விஞ்ஞானத் துறைகளில் பயிற்சி பெற வந்த ஆசிரிய மாணவர்களை சைவத்திலும் தமிழிலும் பற்றுக்கொண்டவர்களாக மாற்றினார். இக்காலத்தில் கல்வியியல் துறையில் பட்டப்பின் படிப்பனை மேற்கொண்டு தனது தொழிற் தகைமையை யும் கல்வி அறிவினையும் மேலும் உத்வேகமாக்கினார்.

சமய, ஆன்மீகப்பணிகளில் சிவத்தமிழ் வித்தகரின் வகிபாகம்

கல்விப்பணிகளுக்கு அப்பால் வித்தகரவர்கள் சமய, ஆன்மீகப் பணிகளில் அயராது உழைத்தவர். இவருடைய சமய, ஆன்மீகப்பணிகளானது  இந்து சமயத்தின் காவலனாய் உருவகித்தமை, அறநெறி சார் நூல்கள் வெளியீடு செய்தமை, சொற்பொழிவாற்றுதல் என்றவாறு அமைந்திருந்தது. இத்தகைய  பணிகளை எவ்விடத்திலும் தயங்காது முன்னெடுத்தவர்.

இந்து சமயப்பணிகளின் காவலனாக உருவாகிய சிவத்தமிழ் வித்தகர்.

முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சராக இருந்த அமரர் கௌரவ தியாகராசா மகேஸ்வரன் அவர்களது விருப்பினால் 2003ஆம் ஆண்டு சிவத்தமிழ் வித்தகரவர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடமாகாண உதவிப்பணிப்பாளராக நியமனம் வழங்கினார். இதன் பயனாக வித்தகரவர்கள் பல முன்னேற்றகரமான செயற்திட்டங்களை முன்னெடுத்துப் பணயாற்றினார். இக்கௌரவம் இவரது சேவையின் ஆளுமைத்திறனுக்கு கிடைத்த மகத்துவம்; எனக்கூறினால் மிகையாகாது. அனைத்துலக இந்து மாநாடு உள்ளிட்ட பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் சிறப்பாக நடத்தினார். நல்லூர் ஆலயச் சூழலில் சொற்பொழிவுகளையும் சமய நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தியதுடன் தான் ஞானகுருவாக நினைத்து வழிபடும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூசைத்தினத்தினை சிறப்பாகக்கொண்டாடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமைச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று தலைமையகத்தில் பணிபுரிந்து பல்வேறு சமய எழுச்சித் திட்டங்களை முன்னெடுத்த இவர் தனது 57வது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியப்பணியினை மேற்கொண்டார்.

தனது சொந்த ஊரான குப்பிழானில் குலதெய்வமாக வழிபட்டு வருகின்ற குப்பிழான் கற்கரை கற்பக விநாயகரின் திருவருளால் சிறுவனாக இருந்தபொழுதே பல ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்தவர். இவ்வாலயத் தின் ஆலயபரிபாலன சபையின் கீழ் மாணவர்களைக்கொண்ட பிரார்த்தனை சபை என்னும் அமைப்பினை உருவாக்கி அதன் தலைவர், செயலாளர் என்ற பதவிகளை வகித்து ஊரறிந்த இளந்தலைவராக முகிழ்த்தார். இத்தகைய அனுபவமே இவரை ஈழத்தின் மிகச்சிறந்த சமயப் பேச்சாளராக உருவாக்கி யது எனலாம். குழந்தைப் பருவத்தில் பெரிய கதைகாரனாக இருந்தவர் என இவரைப்பற்றி குப்பிழான் கிராமத்து மூத்தோர்கள் நகைச்சுவை ததும்பக் கூறி வருவது மனங்கொள்ளத்தக்கது.

ஆரம்ப காலத்தில் ஆசிரியராகச் சேவையாற்றிய எட்டியாந்தோட்டையில் உள்ள இந்து மக்களின் நலனுக்காக எட்டியாந்தோட்டை இந்து மாமன்றத்தை உருவாக்கி அதன் ஸ்தாபகர் அந்தஸ்த்தைப் பெற்று தலைவராக சில காலம் பணியாற்றினார். மலையகத்தில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வரும் இம்மன்றம் 2014ஆம் ஆண்டு தனது நாற்பதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் ஸ்தாபக தலைவரான சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கமவர்களுக்கு திருவாசகச்செம்மல் என்ற பட்டத்தினை வழங்கி பெருமைப்படுத்தினார்கள். குப்பிழானில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தில் கற்கின்ற மாணவர்களை வெறும் கல்விபெறுபவர்களாக மட்டும் பாராமல் சமயத்திலும் தமிழிலும் பற்றுடையவர்களாக மிளிர்வதற் கான வழித்தடங்களையும்காட்டி வந்தார். அந்தவகையில் குப்பிழான் ஆலயங்கள் தோறும் நடைபெறுகின்ற சிவராத்திரி, திருவிழாக்கள், நவராத்திரி போன்ற சமய விழாக்களில் இவரும் இவரது மாணவர்களும கலந்து சமய வழிபாட்டில் ஈடுபடுவதும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி மாணவர்களை ஆற்றுப்படுத்தி வருவதும் முக்கிய பணிகளாக அமைந்திருந் தன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்களை தனது பொறுப்பில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி நிகழ்விற்கு அழைத்துச் சென்று வழிபாடாற்றினார். பின்னர் ஆண்டுதோறும் இக்கைங்கரியம் தொடர்வதற்கும் வழிவகை செய்தார்.

சொற்பொழிவாழனாக சிவத்தமிழ் வித்தகர்.

ஈழத்தில் சொற்பொழிவின் பிதாமகராக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர் கள் திகழ்கின்றார். அவரின் வழித்தோன்றல்களாக பல சொற்பொழிவாளர் கள் ஈழத்தில் உதயமாயினர். நல்லை ஆதீனக் குருமணி சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். இத்தகையவர்களது அடியினையொற்றியதாக சிவத்தமிழ் வித்தகரவர்களும் இணைகின்றார். இவர் மூத்தோர்களது ஆசீர்வாதத்துடன் தனக்கென்றதான ஒரு பாணியில் ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள் தோறும் சமய அறநெறிக் கருத்துக்களில் சொற்பொழிவாற்றி மனித சமூகத்தின் மேம்பாட்டிற்குழைத்தவர். புராணம், இதிகாசம், காப்பியங்கள், காவியங்கள், பண்டைய தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மக்கள் வாழ்வியல் அறநெறிசார் கருத்துகளை மனித சமூகத்தில் எடுத்துச் சொல்லி ஒழுக்கநெறிமுறை தவறா சமூகத்தின் வழிகாட்டுனராய் மிளிர்ந்தார். அந்தவகையில் திருமுறைகள், திருமந்திரம், திருவாசகம், பகவத்கீதை, மகாபாரதம், கந்தரனுபூதி, கந்தரலங் காரம், வேல் விருத்தம், சித்தர்கள், சைவசித்தாந்த தத்துவம், ஆழ்வார்கள், விநாயக தத்துவம், தேவி மகாத்மியம், பட்டடினத்தார் பாடல்கள், இராமலிங்க சுவாமிகள், குமரகுருபரர் பாடல்கள், திருப்புகழ், திருப்பாவை, திருவெம் பாவை முதலான விடயங்களில் யாழ்ப்பாணத்திலுள்ள அனேகமான கோயில் களில் சொற்பொழிவாற்றினார். இப்பணியானது யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கைத்தீவிலுள்ள இந்து ஆலயங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் சொற்பொழிவாற்றுவதற்கு இறைவன் அருட்கொடை இவருக்குக் கிடைத்தது.

சொற்பொழிவாற்றலுக்கு பரந்த அறிவும் தேடலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும்பொழுது தான் சொற்பொழிவில் பலரது அறக்கருத்துக் களையும் இணைத்து சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். இத்தகைய பண்பினை சிவத்தமிழ் வித்தகரது சொற்பொழிவில் காணமுடியும். பிரசங்கிக் கும் பொழுது பல்வேறு இடங்களுக்கும் சென்று மையக்கருத்தினை மீளவம் வந்தடைந்து விளக்கி நிற்கும் சிறப்பினதாக இவருடைய சொற்பொழிவின் பாணி அமைந்திருக்கின்றது. இவரது பாணியில் வள்ளுவர், திருமூலர், அருணகிரிநாதர், நாயன்மார்கள், நாவலர் என அனைவரும் அவரது உரையில் வந்து போவர். பிரசங்கம் முழுவதும் அறநெறிக் கருத்துக்கள் மேலோங்கி தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட தாக அமைந்திருப்பது இவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்றால் அது மிகையாகாது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வித்தகரவர்கள் ஆசிரியராக, விரிவுரையாளரா கப் பணியாற்றிய காலங்களில் தனது கலைப்பணித் தொடர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இன்று கல்விப்புலத்தில் சிறந்து விளங்குகின்றவர்களான கந்த சத்தியதாசன், சந்திரமௌலீசன் லலீசன், குமரேசன் பாலஷன்முகன் போன்றவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர் களாகவும், சொற்பொழிவாளர் களாகவும், கல்வியியலாளர்களாகவும் திகழ்கின்றமை இவருக்குக் கிடைத்த வெற்றி என்பதுடன் சொற்பொழிவாற் றும் கலை தொடர்ந்து வருவதும் சிறப்பானதாகும். இலங்கை வானொலி, ஓம் தொலைக்காட்சிச் சேவை, டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் சைவ நற்சிந்தனை வழங்கி வந்ததுடன்  ஓம் தொலைக்காட்சியில் திருமந்திரம் என்ற பேசு பொருளில் அmண்ணளவாக 25 தடவைகள் தொடர் சொற் பொழிவாற்றியமையும் அதனை ஓரோப்பிய மண்ணில் வாழம் எமதுறவுகள் விரும்பி பார்த்துப் பயன்பெற்றதும் வித்தகரின் ஆளுமைத்திறன் என்றால் அது மிகையாகாது.

அறநெறி சார் நூல்கள் வெளியீடு செய்தமை,

தான் கற்றுப்பெற்ற அறிவின் பேறாய் சமூகத்தின் பயன்பாட்டிற்காய் சிறந்த நூல்களை ஆக்கித்தந்தவர். பதினொரு நூல்களை உருவாக்கி சைவத்தின் தொன்மையை பாதுகாத்தார்.

திருமுறைச் செல்வம் – 2001

முருகமந்திரம்

சிவஜோதி

ஞானதீபம் – 2003

தவமுனிவனின் தமிழ் மந்திரம்

சமய வாழ்வியல்

சைவசித்தாந்த தத்துவமும் ஈழத்தவரின் பங்களிப்பும்

இந்து நாகரிகம்

தரிசனங்களும் வாழ்வியலும்

சைவசித்தாந்தமும் ஈழத்துச் சைவ சித்தாந்த அறிஞர்களும் – 2013

நற்சிந்தனை மலர் ஆகிய பதினொரு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

 வழங்கப்பட்டுள்ள விருதுகளும் கௌரவங்களும்

கலைஞன் வாழும்போதே பாராட்டப்படவேண்டியவன். கலை கலைக்காகவே என்னும் கோட்பாட்டில் வாழ்ந்த சிவ மகாலிங்கமவர்கள் உலகமறிந்த அருளிசைச் சொற்பொழிவாளர். அவரது ஆன்மீக உரை பலரையும் கவர்ந்ததுபலருக்கும் அறிவுச்சுடர் கொழுத்தியதாகவிருந்தது. இதனால் தான் அவர் மக்களால் ஏற்றப்பட்டார். போற்றப்பட்டார். தனக்கென்ற பாணியினை வகுத்து சொற்பொழிவுக் கலைக்கு புதிய வடிவம் கொடுத்த ஈழத்து சைவ சமய ஆளுமையாகத் திகழும் சிவ மகாலிங்கமவர்களை அரச நிறுவனங்களும் சமய மற்றும் கலை அமைப்புகளும் விருதுகள் மட்டுமன்றி பொன்னாடை போர்த்தி கௌரவித்து அக மகிழ்ந்தனர். குறிப்பாக பின்வரும் விருதுகள் அவரை அலங்கரித்திருந்தாலும் சிவத்தமிழ் வித்தகர் என்னும் விருதே அவருடைய அடையாள   நாமமாக அலங்கரித்து உலகில் நிலைபெற்று நிற்கின்றது.

சிவத்தமிழ் வித்தகர், சமூகத் திலகம், ஞானச்சுடர், திருமுறை மொழியரசு, கலைஞானச்சுடர், ஞான ஏந்தல், திருமந்திர வாரிதி, தமிழாகமச் சுடரொளி, சைவத்தமிழ் அரசு, சிவஞானக் கடல், திருமுறைச் சொல்வள்ளல், செம்பொருட் செல்வர், சிவநெறிக் கடல், சைவத்தமிழ் அரசு, செம்மொழிச் செல்வன், சிவனருட் செல்வன், திருவாசகச் செம்மல், செம்மண் சுடர் போன்றவை சமய சமூக நிறுவனங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக் களத்தினால் 2014ஆம் ஆண்டு உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌவிக்கப்பட்டமையும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சுப்பிரமணியர் திருக்கோயில், இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் கோயிலில் இவர் ஆற்றிய திருமந்திர உரையை செவிமடுத்த பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் ‘சிவத்தமிழ் வித்தகர்’ என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதனை இதனால் இவன் முடிக்கும்என்றாய்ந்து                                                    அதனை அவன் கண்விடல் என்ற குறளுக்கமைய பொறுப்புகளை தக்கவர்களிடம் கையளித்து கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி, எடுத்த காரியங்களில் வெற்றி காணும் தலைமைத்ததுவப் பண்புடையவராக விளங்கிய இவர் சிறந்த ஆசிரியராக மாணவர்களாலும் கல்வி உலகாலும் போற்றப்பட்டார். சிறந்த ஆன்மீகப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் மக்களால் மதிக்கப்பட்டார். இதன் மூலம் சிறந்த ஒழுக்கமுள்ள அறநெறி சார்ந்த சமுதாய உருவாக்கத்தில் தளர்ந்து விடாத ஆளுமையாளனாக மேற்கிளம்பினார்.

இவருடைய வாழ்க்கைத்துணைவியார் திருமதி சாந்தா மாகாலிங்கம் அவர்கள் வித்தகரின் நிழலாக, துணையாக, அவருக்கச் சங்கடங்கள் ஏற்படுகின்ற போது மதியுரைஞராகவும் செயற்பட்டு அவரது வெற்றிகளுக்குப் பாலமாக அமைந்தவர். இன்றும் அவருடைய செயற்பாடுகள் அத்தனையினை யும் ஆவணப்படுத்தி வைத்திருந்து தேவைப்படுவோருக்கு வழங்கி வருகின்றார். உண்மையில் சிவத்தமிழ் வித்தகரவர்களது பல்வேறு புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருப்பதுடன் அவரது ஆக்கப்பணி களையும் ஆவணப்படுத்தியிருப்பது போற்றப்படவேண்டியதொன்றாகும். வாழ்க்கைத் துணையின் பக்கபலமாக பாலமாக நின்றுழைத்தவர். தற்போதும் அவர்சார்ந்த தேடல்களில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பண்பாளரை போற்றுவோம். வணங்குவோம்.

நல்லாசிரியனாய், சைவத்தின் வழிகாட்டியாகவும் தொண்டனாகவும், படைப்பாளியாகவும் திகழ்ந்து எம்மை வழிப்படுத்திய பெருந்தகை சைவசித்தாந்த ஆளுமை சிவ.மகாலிங்கம் ஐயா அவர்களது ஆளுமையினை விதந்து போற்றி யாழ்ப்பாணப் பெட்டகம்நிழலுருக் கலைக்கூடம் தலைவணங்கி நிற்கின்றது.

இக்கட்டுரையினை வரைவதற்குப் பெரிதும் துணைநின்றுதவிய சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங் கமவர்களுடைய வாழ்க்கைத் துணைவியார் திருமதி சாந்தா மகாலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தேவையான தகவல்கள் மற்றும் விடயப்பரப்புகளை ‘சிவத்தமிழ் வித்தகம்’ என்னும் நினைவு மலரிலிருந்து பெறப்பட்டுள்ளது.

 

                                                                 எம்.ஏ.பட்டம்பெறுகின்றார்.

                                    லண்டன் மாநகரம் சென்றபோது வித்தகரின் மாணவர்களால்                                         லண்டனில் வழங்கப்பட்ட வாழ்த்துப் பா

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!