நெடுந்தீவு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கரமத்தை என்ற குறிச்சியில் இவ்வாலயம் காணப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டிற்கு முற்பட்டது எனக் கருதப்படும் இவ்வாலயத்தினை தற்போது புக்காடு என அழைக்கப்படும் பகுதியில் சங்கரியார் என அழைக்கப்படும் சங்கரப்பிள்ளை அவர்களும் அவரது மைத்துனர் கந்த உடையார் மகனுமாகச் சேர்ந்து ஓர் சிறிய ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தார்கள். வாழ்க்கையில் சுபீட்சம் கிடைக்கவில்லையென்ற மனஉடைவில் இருவரும் முரண்பட்டுக் கொண்ட நிலையில் சங்கரப்பிள்ளைவர்கள் தமது மைத்துனரை விட்டுநீங்கி தனியாக வாழ்ந்து வந்த வேளையில் ஒருநாள் தமது பசுக்களை தேடிச்சென்று கொண்டிருந்தவேளையில் மிகவும் பற்றைகள் அடர்ந்து காணப்பட்ட இடத்தின் நடுப்பகுதியில் ஓர் வெளிச்சம் தெரியக் கண்டார். இன்று இவ்வெளிச்சம் தோன்றுவதற்குக் காரணம் என்ன? என யோசித்தவாறு இரவு நித்திரையிலாழ்ந்தார். அவரது கனவில் ஓர் அந்தணச் சிறுவன் தோன்றி தன்னை அந்த இடத்தில் வைத்து வழிபடுமாறும் அதற்கான பலனையும் அடைவாய் என்று கூறி மறைந்தாராம். மடைவைத்த பாலை என அழைக்கப்படும் காணியின் உரிமையாளர்களான ஆறுமுகம் அவர்களது மூதாதையர்களையும் இணைத்து சங்கரப்பிள்ளையார் தமது உறவுக்காரரான சுப்பு உடையார், கறுவல் விதானையார் என்போரையும் இணைத்து சிறிய ஆலயம் அமைத்து வழிபடலானார். நெடுந்தீவில் முதலில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடையது. மாசி மகமன்று தேர் உற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.