Thursday, July 25

கலாபூஷணம் கிறகறி பிலிப் பேர்மினஸ்

0

அறிமுகம்

ஒரு கலைஞனின் நான்கு தசாப்த கால நாடக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் தனதாக்கி ஒரு நடிகளாக, நெறியாளனாக, ஆடை அலங்காரக் கலைஞனாக, நாடகப் பட்டறையில் களப்பயிற்சியினை நெறிப்படுத்தும் ஆசானாக ஒப்பனையாளராக, நாடகக் கலைஞர்கள் அனைவரும் நன்கறிந்த ஒரு கலைஞனாக, நாடறிந்த, உலகறிந்த கலைஞனாக வலம் வந்த பேர்மினஸ் அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஐம்பது வருடங்களாகத் தான் ஈடுபட்ட கலை உலகை நேசித்ததுமட்டுமல்ல அவருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஏனைய நாடக விற்பனர்;கள், அனைவரையும் கலையால் ஒன்றிணைத்தவர். கலைக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலலை கொஞ்சும் எழில்மிகு நகராம் குருநகரில் கூத்தும் பாட்டும் கலையும் நர்த்தனமிட்ட மண்ணில் வாழ்ந்து வந்த நீக்கிலாஸ் கிறகரி, அக்கினேஸ் தம்பதியரின் மூத்த புதல்வனாக திரு.ஜி.பி.பேர்மினஸ் அவர்கள் 1939ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தைந்தாம் நாள் பிறந்தார்.  உடன் பிறந்த சகோதர்கள் எண்மராவர்.

தனது ஆரம்பக் கல்வியிலிருந்து 12ஆம் தரம் வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லுரியில் கற்றார். இப்பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்தவேளையில் பாடசாலை யின் கல்வி தவிர்ந்த ஏனைய புறச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தினார். பாடசாலை நாடகத் தயாரிப்புகளில் தன்னை ஈடுபடுத்திப் பலநாடகங்களை நடித்துள்ளார்.  “சிறைச்சாலைகாவலர்’ என்னும் அரச உத்தியோகத்தில் இணைந்து கொண்ட பேர்மினஸ் அவர்கள் யாழ்ப்பாணம், மாத்தறை, வெலிக்கடை, யாழ்கோட்டை ஆகிய இடங்களில் சிறைச்சாலைக் காவலராகவும், யாழ்ப்பாணம் கோப்பாய் திறந்தவெளிச் சிறைச்சாலையில் களஞ்சியப் பொறுப்பாளராகவும் கண்ணியத்துடன் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

1967ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த அஞ்சலா என்னும் மங்கையை கைப்பிடித்து மணவாழ்வில் நுழைந்தார்;. மணவாழ்க்கையில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர் தனது பிள்ளைச் செல்வங்களையும் கல்வியில் மட்டுமல்ல இல்லற வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழும் வகையில் ஒரு தந்தையின் கடமையினை செவ்வனே நிறைவேற்றி மகிழ்ந்தார்.

நாடகக் கலைஞனாக பேர்மினஸ்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களில் பாடசாலையில் தயாரிக்கப்பட்ட நாடகங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நாடகக் கலையில் தன் திருப்புமுனையினை ஏற்படுத்தினார். 1956ஆம் ஆண்டில் பாடசாலையில் மேடையேற்றிய “ஒரு புகையிரத நிலையம்’ என்னும் நாடகத்தின் மூலம் நாடக உலகிற்குள் காலடியெடுத்து வைத்தார்;. அதைத் தொடர்ந்து அருட்தந்தை லோங் அடிகளாரின் ஆங்கிலப் பிரதியைத் தமிழ் ஆக்கம் செய்து புனித பத்திரிசியார்; கல்லூரியில் மேடையேற்றப்பட்ட இயேசுவின் திருப்பாடுகளின் காட்சியில் 1957இல் இடதுபுறக் கள்வனாகவும் 1958இல் பரபாஸ் ஆகவும் 1959இல் தலைமைக் குரு கைப்பாஸ் ஆகவும் திறம்பட நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றார்;.

1960ஆம் ஆண்டில் அருட்தந்தை நீ.மரியசேவியர் அடிகளார் கொண்;டு வந்த இத்தாலிய மொழித் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதில் பிரதான பாத்திரமாகிய குருவானவரின் பாத்திரத்திற்கு இவர் பின்னணிக்குரல் கொடுத்தார். கல்லூரி ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் கிடைத்த உந்துதலும் உற்சாகமுமானது இவரை நாடகத்துறையில் மென்மேலும் கால்பதிக்க வைத்தது.

நாடகஅரங்கக் கல்லூரியில்  கல்லூரியில் இணைந்து, திரு.தாசீசியஸ், திரு. குழந்தை ம.சன்முகலிங்கம், திரு.சி.மௌனகுரு, திரு.நா.சுந்தரலிங்கம் போன்ற நாடக ஆளுமைகளிடம் பயிற்சி பெற்றுப் பல நாடகங்களில் நடித்தும் தன்னைக் கைதேர்ந்த கலைஞனாக வளர்த்துக் கொண்டார். இத்தகைய பயிற்சிகளினாலும் தனது அனுபவத்தினாலும் நாடக அறிவினை வளர்த்துக்கொண்டு 25ற்கும் மேற்பட்ட நாடகங்களை நெறிப்படித்தியுள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வியாக்கியானிக்கும் கலைஞனாக தன்னை வெளிப்படுத்தினார். நாடகத்தின் பிறகலைச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தினார். குறிப்பாக நடிகர்களுக்கான வேடஉடை விதானிப்பாளனாக பணியாற்றியுள்ளார்.

நூடக அரங்கின் ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்தவராக பேர்மினஸ் அவர்கள் இருக்கவில்லை. அவர் நடிப்பு, நெறியாளுகை, நாடகவாக்கம், அரங்கமுகாமைத்துவம், காட்சி விதானிப்பு, வேடஉடை ஒப்பனை, ஒளியமைப்பு, முகாமைத்துவம், நிர்வாக ஒழுங்கமைப்பு, அனைத்திலும் ஒன்றுபட்ட ஒழுங்காட்சி, நாடக அரங்கப் பயிற்சி எனப் பலவற்றிலும் விருப்பும் பயில்வும் தேர்ச்சியும் பெற்றிருந்தவர். எத்துறைசார் பணியையும் ஆர்வத்தோடும் விருப்போடும் செயற்படுத்தி வந்தவர். தலைமைக்குப் பணிகின்ற பண்பும் கொடுத்த பொறுப்பினை முற்றுமுழுதான பொறுப்புணர்வோடு ஏற்று முற்றுமுழுதான திருப்தியைத் தரும் வகையில் நிறைவேற்றும் தூய பற்றுறுதியும் செய்நேர்த்தியும் நேர்மையும் பொறுமையும் சுயதிருப்தியும் வாய்க்கப்பெற்றவர். ஆதாரமூலங்களை ஆவணப்படுத்தும் பண்பு இவரது குருதியில் கலந்திருந்தது. நுடந்தேறிய பலவற்றின் ஆதாரச் சான்றுகளை இவரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்பது பலரும் அறிந்தஉண்மை.

60களின் முற்பகுதியில் தான் பிறந்த ஊரில் நாடக மன்றம் அமைத்து நாடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர். இதனால் சலிப்படைந்த பெற்றோர் இவருக்கு உத்தியோகம் கிடைத்தால் அதனை சாட்டாக வைத்து இவருடைய கலை ஆர்வத்திற்கு தடை போடலாம் என எண்ணினர். 60களின் நடுப்பகுதியில் சிறைச்சாலை காவலராக நியமனம் பெற்றார். பெற்றோரின் சிந்தனைக்கு மாறாக இவரது கலை ஆர்வம் இருந்தது. இவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் பணியாற்றியவேளை சிறைக் கைதிகளை வைத்து நாடகம் ஒன்றினை தயாரித்து அரங்கேற்றி தன் கலை ஆர்வத்தினை தடைபோட முடியாது என்ற செய்தியை வெளிப்படுத்தினார். தனது கடமையை வெறுமனே பாராது சிறைச்சாலைக் கைதிகளோடு நாடக மனிதனாக ஊடாட ஆரம்பித்தார். சிறை வாழ்க்கை வெளிவாழ்க்கை என்னும் முரண் நிலையிலிருந்த கைதிகளை கலை மனிதராகப் பார்த்தார். கம்பிகளுக்குள் சிக்குண்டு மௌனமாகிவிட்ட கைதிகளின் வாழ்க்கை, அவர்களின் மௌன ஓலம், அவர்களின் உள்ளக்குமுறல் போன்றவற்றால் திகைப்படைந்த பேர்மினஸ் அவர்கள் கைதிகளின் வாழ்க்கைக்காக களமமைத்துக் கொடுத்தார். வெளியில் வாழும் மனிதர்கள் சிறைப்பட்ட மனிதர்களின் வெளிப்பாட்டைச் சந்திக்க துணிகரமான முயற்சி ஒன்றை மேற்கொண்டார். ‘சீர் திருந்திய கைதிகள்’ என கைதிககள் நடித்த சமூக நாடகமொன்றை 1977-03-31 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மண்டபம் நிரம்பிய பார்ப்போர் முன்னிலையில் நிகழ்த்தினார். சமூக மாற்றத்திற்கான அரங்காக, சமூகசீர் திருத்த அரங்காக அரங்கினை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது மனங்கொள்ளவேண்டிய விடயமாகும்.

நடித்த நாடகங்கள்

1956 ஒரு புகையிரத நிலையம்

1956 திருப்பாடுகளின் காட்சி

1963 சிங்கமலைக் கள்வன்

1964 மனிதன் மாறிவிட்டான்

1965 சங்கிலியன்

1965 களங்கம்

1965 உயிரோவியம்

1965 கலைந்த இராகங்கள்

1966 சங்கிலியன்

1966 கூடப்பிறந்தாலும்

1966 இதுவும் சரிதானா

1966 மேடர்

1966 எங்கே நிம்மதி

1971 அன்பில் மலர்;ந்த அமரகாவியம்

1972 இதயத்தில் நீ

1973 பலிக்களம்

1974 கதையும் காவியமும்

1979 கோடை

1980 பொறுத்ததுபோதும்

1980 சங்காரம்

1980 உறவுகள்

1981 புதியதொருவீடு

1986 வெறியாட்டு

1986 தியாகத்திருமணம்

1989 நீஒருபாறை

1992 அசோகா

1992 தர்சனா

1993 சத்தியத்தின் தரிசனங்கள்

1993 ஓளவையார்;

1994 ஒருடேல்

1996 பெண்ணியம் பேசுகிறது

1996 சாகாதமனிதம்

1997 ஜெனோவா

1997 சகுந்தலை

1998 ஜீவப்பிரயத்தனம்

1998 சோழன்மகன்

1999 சமயத்தூது

1999 கல்வாரியாகம்

2000 காவியநாயகன்

2002 ஸ்பாட்டக்கஸ்

2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை திருமறைக் கலாமன்றத்தினால் அரங்கேற்றப்பட்ட திருப்பாடுகளின் காட்சியில் நடிகனாக, உதவியாளனாக, ஒப்பனையாளனக, மேடை முகாமையாளன் என அரங்கில் பல வழிகளிலும் பணியாற்றியுள் ளார்  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழத்து நாடகத்துறையில் 60களுக்குப் பின்னர் நவீன நாடக மரபின் வளர்ச்சியை காணக்கூடியதாக இருக்கும் அதேவேளை அதற்கு முன்னரும் பின்னரும் இயற்பண்புவாத நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டதை காணலாம். திரு பேர்மினஸ் அவர்கள் 1978ற்கு முன்னர் நடித்த நாடகங்கள் இயற்பண்புவாத முறைமையை கொண்டதாக அமைந்தது எனலாம். ‘சிங்கமலைக்கள்வன்’ (1963), ‘மனிதன் மாறிவிட்டான்’ (1964), ‘இதுவும் சரிதானா’, ‘கூடப்பிறந்தாலும்’, ‘உயிரோவியம்’ ‘எங்கேநிம்மதி’ (1966), ‘இதயத்தில்நீ’ (1972),‘தியாகி’, ‘கலைந்தராகங்கள்’ (1978), என்ற நாடகங்கள் விதந்து குறிப்பிடத்தக்கவை யாகும். ஆரம்ப காலங்களில் இயற்பண்புவாத நாடகங்களில் நடித்து வந்த பேர்மினஸ் அவர்கள் நவீன நாடகங்களிலும் தன்னை ஈடுபடுத்தினார்.

பேர்மினஸ் அவர்கள் அரங்கில் பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தாலும் ‘நடிகன்’ என்னும் அவரது நடிப்பு ஆளுமையாலேயே அதிகம் பேசப்பட்டவர். நடிப்பில் பிரதான பாத்திரம், குணச்சித்திர பாத்திரம், துணைப் பாத்திரம் என பல்வேறு பாத்திரங்களையும் ஏற்று நடித்து நடிப்பின் ஆளுமையாக தன்னை முகிழ்த்தெழ வைத்தார்.  கனதியான குரல் வளத்தினைக் கொண்ட இவருக்கு பலபாத்திரங்களும் தனித்துவ அடையாளத்தினை ஏற்படுத்தின. சினிமாப்பாணி நாடகம், இலக்கிய நாடகம், சமூக நாடகம், மோடிமை நாடகம், கூத்து, வார்த்தைகற்ற நாடகம், சிறுவர் நாடகம் எனப் பல்வகை நாடகங்களிலும் நடித்துள்ள இவர் ஈழத்தின் புகழ்பூத்த நெறியாளர்களிடம் பயிற்சி பெற்றது மட்டுமல்லாது அவர்களது தயாரிப்புகளிலும் நடித்து அரங்கின் தனிச்சிறந்த ஆளுமையாக முகிழ்த்தார். மிக முக்கியமாக கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார், பூந்தான் ஜோசேப், அ.தாசீசியஸ், குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் சி.மௌனகுரு, வீ.எம்.குகராஜா, அ.பாலதாஸ் போன்றவர்களது நாடகங்களிலும் அவர்களது நெறியாளுகையிலும் நடித்தவர்.

திருமறைக் கலாமன்றமும் பேர்மினசும்

இறை விசுவாசமிக்க இவர்; தனது சமயக் கடமைகளை புனிதமாக நிறைவேற்றினார். திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து அருட்திரு மரியசேவியர்; அடிகளாரின் சீடனாக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலான கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்;. அடிகளாருடன் 1963 ஆம் ஆண்டு ஏற்பட்ட உறவு பேர்மினசின் கடைசி மூச்சுவரை தொடர்ந்தது. மரியசேவியர் அடிகளாரவர்கள் உரும்பிராய் பங்குத் தந்தையாக பணியாற்றியபோது இவரால் தயாரிக்கப்பட்ட ‘கல்வாரியில் கடவுள்;’ என்ற திருப்பாடுகளின் காட்சி நாடகத்தில் நடிப்பதற்காக அடிகளாரால் அழைக்கப்பட்ட பேர்மினஸ் அவர்கள் அன்புக்குரிய மாணவனாக கடைசி வரை பயணித்தார். தொடர்ந்து அவரது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் மன்றத்தின் நாடகத் தயாரிப்புகள் மட்டுமன்றி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து விதமான செயற்பாடுகளிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டவர். மன்றத்தின் முக்கிய தயாரிப்பான திருப்பாடுகளின் காட்சி நாடகத்தில் முக்கிய பாத்திரங்களை நடித்ததோடு புறச்செயற்பாடுகளான பொங்கல் விழா, இலக்கிய விழா, அரங்கியற் கண்காட்சி, கூத்துவிழா என அனைத்து நிகழ்வுகளிலும் முன்னிற்பவர். 1996 ஆம் ஆண்டு மன்றத்தின் நாடகப் பொறுப்பாளராக அமரர் பிரான்சிஸ் ஜெனம் அவர்கள் கடமையாற்றிய வேளையில் அவருக்கு உதவியாக பேர்மினஸ் அவர்கள் கடமையாற்றியதும் பின்னர் ஜெனம் அவர்கள் கொழும்பு செல்ல வேண்டியிருந்தமையால் அவரது பொறுப்பு பேர்மினஸ் அவர்களிடம் வந்தது. மன்றத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று கலைப்பயணம் ஆகும். 1973 ஆம் ஆண்டு மரியசேவியர் அடிகளார் திருமறைக் கலாமன்ற கலைஞர்களுடன் தென் இந்தியாவிற்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.  திருச்சி தேவர் அரங்கில் இயேசுவின் திருப்பாடு களடங்கிய பலிக்களம், களங்கம் ஆகிய நாடகங்களை இணைத்து அரங்கேற்றிய நாடகத்தில் பேர்மினஸ் முக்கிய பாத்திரம் நடித்திருந்தார். கலைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவில் பேர்மினசும் ஒருவராக இருந்தார். இதே காலப்ப 1997,1998 காலப்பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கலைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. வடலிக்கூத்தர் என்ற பெயர்தாங்கிய இப்பயணத்தில் பேர்மினஸ் அவர்கள் முக்கிய பங்கினை வகித்திருந்தார். இப்பயணத்தினூடாக இந்தியா, பிரான்ஸ், ஜேர்;மனி, ஹொலண்ட், சுவிஸ்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கலைப்பயணம் சென்றதுமட்டுமல்லாது பல்வேறு சமூகப் பணிகளையும் இதனூடாக ஆற்றினார். திருமறைக் கலாமன்றத்தின் பலதுறைகளுக்கும் பொறுப்பாளராக இருந்து செயற்பட்டுள்ள இவர் குறிப்பாக நாடகக் களப்பயிற்சி, ஆடையமைப்பு, வெளி மாவட்டத் திருமறைக் கலாமன்ற கிளைகளின் கலைத்தொடர்பாளராக செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் தென் பகுதிச் சிங்களக் கலைக்குழுவினருடன் தொடர்புகள் ஏற்பட்டது. குறிப்பாக பேராசிரியர் சரத்சந்திரா, மிராண்டா ஹேமலதா, சோமலதா சுபசிங்க போன்றவர்களுடன் இணைந்து அசோகா, தர்சனா, பலிக்களம் போன்ற மௌன நாடகங்களில் பங்கு கொண்ட வேளைகளில் பெற்ற புதிய அனுபவங்களும் தன்னால் மறக்க முடியாதவை என பெருமிதம் கொண்டவர்.

நெறியாள்கை செய்த நாடகங்கள்.

எங்கே நிம்மதி

மனிதன் மாறிவிட்டான்

சங்கிலி

சீர்திருந்திய கைதி

ஒருடேல்

சத்தியத்தின் தரிசனங்கள

சாகாத மனிதம்

மாதொருபாகம்

அசோகா – உதவி நெறியாளுகை

தர்சனா  – உதவி நெறியாளுகை

வழங்கப்பட்டகௌவரங்கள்

2000 திருமறைக்கலாமன்றம் “அரங்கவாரிதி”

2001 யாழ்மாவட்ட மூத்தகலைஞர்; விருது பிரம்மஸ்ரீ வீரமணி ஜயர்,“கலைஞானகேசரி”

2002 யாழ் பிரதேசகலாசாரப்பேரவை,“யாழ்ரத்னா”

2003 இலங்கை கலாசாரஅலுவல்கள் திணைக்களம் “கலாபூஷணம்”

2008 திருமறைக் கலாமன்றம் “கலைஞானபூரணன்”

2009 வடமாகாணபண்;பாட்டலுவல்கள் திணைக்களம் “ஆளுநர்விருது”

2018 யாழ் கலாசாரப்பேரவை “கலைக்குரிசில்”

ஒருநல்ல, நேர்மையான, விசுவாசம்மிக்க, தூய அன்பு நிறைந்த, நட்புக்கு இலக்கணமாக அமைந்த, கலகலப்புமிகுந்த, சக மனிதனை நேசித்த மதித்த, தன்துயர் வெளிக்காட்டாத, தன்குடும்பத்தைக் கண்போல் பேணிப்போற்றி வளர்த்த, நாடகக்கலையை முற்றுமுழுதாக நேசித்து வளர்த்த, நல்ல பண்புகளை தன் ஆளுமைக்குள் அடக்கிக் கொண்ட மனிதனோடு பழகக்கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சிக்குரியது. தசாப்த காலம் நாடக ஆளுமையாகத் திகழ்ந்த பேர்மினஸ் அவர்கள் கணீரென்ற குரலாலும் கம்பீரமான தோற்றத்தாலும் பாத்திரங்களை வசமாக்கி பார்ப்போரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய தலைசிறந்த நாடக ஆளுமையின் மனிதப் பண்பை போற்றுகின்றோம். வணங்குகின்றோம். இத்துணை சிறப்பு வாய்ந்த கலைஞன் 2018-10-09 ஆம் நாள் கலையுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இத்தொகுப்பிற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிய எனது நண்பன் கொ.கரன்சன்(ஜெகன்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

பேர்மினஸ் அவர்களது திருமண வைபவம்

பேர்மினஸ் தனது அழகிய சிறிய குடும்பத்தடன்

ஓராண்டு நிறைவில் வெளியிடப்பட்ட அரங்கவாரிதி நூல்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!