அறிமுகம்
கொக்குவில் மேற்கில் வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் வர்த்தகத்தின் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்தவர். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற ஒளவை யாரின் கொன்றைவேந்தன் வரிகளுக்கேற்ப திரவியம் தேடி பிறரை வாழவைத்தவர். தந்தையாரது வணிகத்தினை மாமனாரது துணையோடு நடத்தி படிப்படியாக முன்னேற்றம் கண்டவர். கொக்குவில் என்றில்லாமல் கல்வியின் தேவை எங்குள்ளதோ அங்கு தனது சேவையினை வழங்கி யவர். மனைவி. ஐந்து பிள்ளைகள் என அழகான குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர் பாரிவள்ளலின் அடியினைப் பின்பற்றியவராக அனைவரையும் அரவணைத்து சமூக சேவையினை வழங்கிய கொக்குவில் பெற்றெடுத்த புரவலராம் மாணிக்கம் சுப்பிரமணியம் வணிகத்தின் ஆளுமை மிக்க ஒருவராக திகழ்ந்தவர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நடுமணியாகத் திகழும் கொக்குவில் மேற்குப் பதியதனில்; இல்லறத்தில் இனிதாய் வாழ்ந்திட்ட பிரபல வர்த்தகர் மாணிக்கம் பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வனாய் 1940-01-28 ஆம் நாளில் சுப்பிரமணியம் அவர்கள் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கொக்குவில் மேற்கு ஊ.ஊ.வு.ஆ.ளு பாடசாலையில் நான்காம் தரம் வரை கற்றார். பின்னர் இடைநிலைக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்றார். மிக இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தமையினால் பொறுப்புகளின் சுமையினால் தந்தையின் வழியில் மாமனாரின் உதவியுடனும் அயராத உழைப்பினால் படிப்படியாக உழைத்து முன்னேறினார். தனக்குத் தடைப்பட்ட உயர்கல்வியை தனது சகோதரர்களுக்கு வழங்கி அவர்களை சமூகத்தின் முன்னோக்கிய நிலைக்கு உயர்த்தினார். 1971 ஆம் ஆண்டு கொக்குவில் முதலி கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் இரத்தினம்மா தம்பதியரின் மூத்த மகளான மாலதி என்னும் மங்கையை கரம் பற்றியதனால் இல்லறத்தின் நல்லறமாக ஐந்து புத்திரர்களைப் பெற்று மகிழ்ந்தது மட்டுமல்லாமல் அவர்கள் அனைவரையும் கல்வியிலும் தொழில் ரீதியாகவும் முன்னேற்றப்பாதையில் வழிகாட்டி தந்தை மகற்காற்றும் பணியை நிறைவேற்றினார்.
தனது உள்ளார்ந்த ஆற்றலை நன்குணர்ந்து அதனை விருத்தி செய்து முன்னோக்கி; சென்றவர் தான் மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள். இத்திறமையின் காரணமாவே அவரால் வர்த்தகத் துறையில் வெற்றிபெற முடிந்தது. மிகுந்த புத்திக்கூர்மையும் வாழ்க்கைத் தத்துவங்களை நன்குணர்ந் தவராகவும் இருந்தார். இதன் காரணமாக நிதி முகாமைத்துவத்தில் சிறந்து விளங்கியதுடன் தன்னை நிதிரீதியாக ஸ்திரப்படுத்தி பிறருக்கு உதவும் எண்ணத்தினை வளர்த்துக் கொண்டார். அவர் செய்யும் உதவிகளில் முக்கியமாக கல்விச்சேவை முதலிடம் பெற்றிருந்தது. “பாத்திரம் அறிந்து பிச்சைபோடு” என்பதற்கிணங்க தனது நலத்திட்டங் களையும் உதவிகளையும் வழங்குகின்ற பொழுது சரியான இடத்திற்குப் போய்ச்சேருகின்றதா என்பதில் கவனம் செலுத்தினார். தேவை இருக்கின்ற இடத்திற்குத் தனது உதவிகைளை அள்ளி வழங்கினார். இதனால் அவர் ஒரு பரோபகாரி எனவும் வள்ளல் எனவும் மக்களால் போற்றப்பட்டார்.
இவரது நன்கொடை மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் விபரங்கள்.
1- கொக்குவில் முதலி கோயில் முருகன் மூலஸ்தான உருவாக்கற் பணி.
2- கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய முன்வாசல் வளைவு அமைத்தமை.
3- கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய தெற்குப்புற மாணிக்கம்-பாக்கியம் கல்யாண மண்டபம் அமைத்தமை.
4- கொக்குவில் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் என்பவற்றுக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்புக்கும், முன்பள்ளி நிலையத்துக்குமான இரண்டு மாடிகொண்ட கட்டடம் அமைத்தமை.
5 கொக்குவில் மேற்கு உயரப்புலம் குணபாலன் வித்தியாசாலைக்கு விளையாட்டுத் திடலுக்கான காணிக் கொள்வனவு உதவி.
6- சனசமூக நிலையத்திற்கான கணனிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை.
7-கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு வீட்டுடனான காணிக் கொள்வனவும். கணனி நிறுவனமமைத்தமையும்.
8- கொக்குவில் இந்துக் கல்லூரி தென்புறப்பக்கத்தில் மாணிக்கம் – பாக்கியம் ஞாபகார்த்த இருமாடிக் கட்டடம் அமைத்தமையும் அம் மண்டபத்திற்குத் தேவையான தளபாடங்களை வழங்கியமையும்.
9-கொக்குவில் இந்துக்கல்லூரி தென்கிழக்குப் பக்கத்தில் பார்வையாளர் அரங்கு அமைத்தமை.
10-யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாலதி சுப்பிரமணியம் கலையரங்கு அமைத்தமை.
11-யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை 45ஒ25 அடி அளவிலான இரு வகுப்பறையுடைய இருமாடிக் கட்டடம் அமைத்தமை.
12- இணுவில் இந்துக் கல்லூரியில் ஒரு வகுப்பறை அமைத்தமை.
13- கீரிமலையில் அடியவர் தங்குவதற்கான ஒரு அறையினை அமைத்தமை ஆகிய பணிகளை கொக்குவில் மண்ணில் நிறைவேற்றி மகிழ்ந்தார்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இரண்டு மாடிக் கட்டடம், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு மாடிக் கட்டடம்;, கொழும்புத் தமி;ழ்ச் சங்கத்திற்கு 3ஆம் மாடிக் கட்டடம் ஆகிய பணிகளை கொழும்பு மாநகரிலும் அமைத்ததோடல்லாமல் கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாக சபைத் தலைவராகவும் செயற்பட்ட இவர் தனது கொடைகளை கொழும்பு, கொக்குவில் என நின்று விடாது யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் வழங்கினார்.
மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களின் ஈகையை நன்குணர்ந்த சமூகம் அவரைப் போற்றி வாழ்த்தி விருதுகளையம் சூட்டி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “சங்கச்சான்றான்”, ‘ஒப்புரவாளன்’, “சமூகப்புரவலர்”, “வித்தியாதானக்கிர்த்தி”, “புரவலர்திலகம்” போன்ற பட்டங்கள் அவரை அலங்கரித்த மக்கள் கௌரவங்களாகும்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்சொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்” என்பது வள்ளுவருடைய கூற்று. இக்கூற்றிற்கு இலக்கணமாயமைந்தவர் கொடைவள்ளல் சுப்பிரமணியம் அவர்கள். இப்பொய்யா மொழி பொய்த்து விடாது கல்விப்பணி, சமூகப்பணி, சமயப்பணி, என எல்லாப்பணிகளையும் எப்பவோ முடிந்த காரியம்போல் நிறைவேற்றி தன்னடக்கத்துடன் வாழ்ந்த இவ் வள்ளல் சமயத்திற்கும் கல்விக்கும் சனசமூகநிலையங்களின் வளர்ச்சிக்கும் பணியாற்றிய ஈடற்ற கொடையாளியாய், கொக்குவில் மாணிக்கம் கொடுத்த பாக்கியமாய் கிராமமும், நகரமும், உலகமும் பயனுற வாழ்ந்து காட்டிய மாமனிதர் 2016-06-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.