Saturday, June 22

பணித்திருந்தகை வேதநாயகன், நாகலிங்கம் 

0

சிறப்பான தமிழ்க்கல்விப் பாரம்பரியம் நிலவிய அளவையூரில்; ஒரு நல்விவசாயியின-தமிழ் இலக்கண மரபின் பண்டிதரான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின்  மூன்றாவது புதல்வனாக 1960-05-27 ஆம் நாள் பிறந்தார்.   மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதரான அவருக்குப் பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த கரிசனை இருந்தது.  அக்காலத்தில் அளவெட்டி மத்தியில் இயங்கிய ஒரு சைவப்பாடசாலையாக, 1920ஆம் ஆண்டில் உயர்திரு செல்லப்பா நாகலிங்கம் அவர்களால் ஸ்தாபிக்கப்பெற்ற சதானந்த வித்தியாலயம் விளங்கியது.

அளவெட்டி சதானந்த வித்தியாசாலையில் கல்விப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டிருந்த அதிபர் திரு நாகநாதன் அவர்களிடம் தன்மகனின் ஆரம்பக்கல்விப் பொறுப்பை பண்டிதர் ஒப்படைத்தார்.  வகுப்பு ஒன்று தொடக்கம் வகுப்பு மூன்று வரை மூன்றாண்டுகள் வரை வேதநாயகன் இவ்வித்தியாலயத்தில் கற்றார்.  அதன் பின்னர் வகுப்பு நான்கு முதல் எட்டுவரையிலான கற்றலுக்கு யாழ் அருணோதயாக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.  சைவமும் ஆங்கிலமும் கற்பிக்கும் வித்தியாசாலையாகத் தோற்றம் பெற்ற இப்பாடசாலையிலும் பல்வேறு பாடங்களைக் கற்பித்தலின் பொருட்டு திறமைசாலிகளான பல ஆசிரியர்கள் இருந்தார்கள்.  ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், இசை மற்றும் தமிழ்ப் பாடங்களில் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற்றவர்களின் கற்பித்தலில் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்து வந்தன.  இயல்பாகவே கல்வியில் ஊக்கம்மிக்கவராக இருந்த வேதநாயகனுக்குத் தந்தையாருடைய வழிகாட்டுதல் மேலும் ஊக்கப்படுத்தலைச் செய்தது.  மேலும் அவருக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விப்பணி காரணமாகவும் வேதநாயகன் நன் மாணாக்கன் என்ற நிலையை மட்டுமல்லாது திறமைமிகு மாணாக்கன் என்ற நிலையையும் கொண்டவரானார்.  இந்த நிலைகளினால் “நவோதயா” புலமைப்பரிசில் பரீட்சையில் வேதநாயகன் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அருணோதயாக் கல்லூரியில் தனக்குக் கற்பித்த ஆசிரியர்களாக விளங்கும் பரநிருபசிங்கம் ஆசிரியர், அருளம்பலம் ஆசிரியர், விக்கினேஸ்வரி ஆசிரியை, சந்தியாப்பிள்ளை ஆசிரியர் தந்தையார் பண்டிதர் நாகலிங்கம், அருட்கவி விநாசித்தம்பி ஆசிரியர், திருமதி கதிர்காமசேகரம் ஆசிரியை (பெரிய) திலகவதி ஆசிரியை மங்களேஸ்வரி ரீச்சர், நாகமணி சேர், தம்பித்துரை ஆசிரியர் முதலானோரை என்றும் மறக்கமுடியாதவர்களெனக் குறிப்பிடுகின்றார்.

அக்காலத்தில் விஞ்ஞானப்பிரிவுப் பாடங்கள், கலைப்பிரிவு பாடங்கள் என்ற வகைப்படுத்தலில் இடம்பெற்ற கற்பித்தலில் வகுப்பு எட்டில் (JSC) யின் பெறுபேறுகளின் அடிப்படையில் SSC பரீட்சைக்கு விஞ்ஞான பாடங்களில் கற்கத் தேர்வானார்.  இதனால் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் வகுப்பு 9 தொடக்கம் உயர்தர வகுப்புகள் வரை (வகுப்புகள் 11, 12) கல்வி கற்கச் சென்றார்.

ஒரு மாணவனின் வாழ்க்கைப் பாதையை பெரிதும் தீர்மானிக்கும் வயதும், வகுப்புகளும் இக்காலப்பகுதியிலேயே அமைகின்றன.  பொறுப்பாகத் தனது கல்விக்கடமைகளை ஆற்றவிளையும் மாணவனுக்குக் குருவாக அமையும் ஆசிரியர் இங்கு காட்டும் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், கற்பித்தல் உதவிகள் சீராக அமையும் போது ஆணிவேராக அமைவன மாணவனுக்கு கிடைக்கும் கல்வியறிவாகும்.

”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு”

என்ற வள்ளுவர் வாக்குப்படி மீண்டும் மீண்டும் கற்பதால் அறிவு பெருகின்றது என்பதை உணர்ந்தது போல்,  மகாஜனக் கல்லூரியில் அவருக்கு அமைந்த ஆசிரிய மணிகள் கல்வித்துறையில் பெரும் தேர்ச்சிகளைக் கொண்டவர்கள்.  கற்பித்தலில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்களான இவர்கள் பின்னாளில் இவர்களிடம் கற்றுச் சமூகத்தில் பெரும் சாதனையாளர் நிலைகளை அடைந்த பலரைப் பழைய மாணவர்களாகப் பெற்றவர்களாக இனங்காணப ;பட்டுள்ளனர்.  வேதநாயகன் அவர்களும் தன்னைப் பூரண மனிதனாக்குவதற்கு உதவும் கல்வியைக் கசடறக் கற்க முனையும் தலைமாணவராகத் திகழ்ந்தார்.  திரு. பொன். கனகசபாபதி (விலங்கியல்) திருமதி சி. அனந்தசயனன் (தாவரவியல்) திரு. மணியம் (பௌதிகவியல்) எனத் தன்னைக் கற்பித்த விஞ்ஞான ஆசிரியர்களின் திறமைகளும் கற்பித்தல் அனுபவங்களும் தன்னை 3டீ 1ளு என்னும் சித்த pநிலைகளைப் பெற்று உயர் தரத்தில் வெற்றி பெற வைத்தன என்று பெருமிதத்தோடு நினைவு கூருகின்றார்;.

இப்பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு தொடக்கம் 1984ஆம் ஆண்டு வரை விஞ்ஞானமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டார். சிறந்த பல அனுபவங்களை பல்கலைக்கழகக் கல்விக்காலம் வழங்கியது. பல்வேறு சமூகங்களின் பிரச்சினைகள் பற்றியும் தீவிரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகவும் இனப் பிரச்சினை சார்ந்த விடயங்களில் கரிசனை பரவலாக அதிகரித்த காலமாகவும் அமைந்திருந்தது.  விஞ்ஞானபீட மாணவர்கள் பொதுவாக மாணவரின் கல்விசார் விடயங்களில் அதிககவனம் செலுத்தி வந்தனர்.  பல நாள்கள் பல்வேறு பதட்டக் காரணங்களால் கல்வி தடைப்பட நேரிட்ட போதிலும் இயல்பாகவே இதுவரை கல்வியில் காட்டிய ஊக்கம் குறைந்துவிடாமல் கவனமெடுத்தார்.  1984 பரீட்சையில் சித்திபெற்றதைத் தொடர்ந்து 1985இல் நடைபெற்ற பொதுப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தைப் பெற்றுக் கல்வி வாழ்வின் உயர்பெறுபேற்றை பட்டமாகப் பெற்றுக்கொண்டார்.  யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப்பிரிவில் இரசாயனவியற் பாடத்தில்  செய்துகாட்டுநராக (Demonstrator)  ஆக 1985 – 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றினார்.

இந்நிலையில் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் 1986 செப்ரெம்பரில் வழங்கப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி மகா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான ஆசிரியராக நியமனம் கிடைக்கப்  பெற்றார்.  தந்தை வழியில் ஒரு ஆசிரியராக கல்வி உலகினுள் அடி எடுத்துவைத்தார். ஆளுமைமிக்க ஆசிரியர்கள், கல்விமான்களின் கற்பித்தலின் ஊடாக ஒரு விஞ்ஞானபட்டதாரி ஆசிரியராகி மாணவருலகம் உவந்தேற்கும் விதமாகக் கல்விச் சேவையாற்றினார்.  இப்பாடசாலையில் அக்காலப்பகுதியில் தான் விஞ்ஞானப்பிரிவு உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

பிரயாணச் சிரமங்கள் மிகுந்த அக்காலப்பகுதியில் வீட்டுக்கு விடுமுறையில் வரும்போதெல்லாம் தந்தையார் பண்டிதர் கூறுவாராம் : “நீ அடிக்கடி இங்கு வரத்தேவையில்லை. அங்கு நின்று உனது மாணவர்களுக்குக் கற்பிக்கும் வழியைப்பார். உன்னை நம்பி இருக்கும் அந்த பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புகளை எடு. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் அந்த பிள்ளைகளுக்காக எவ்வித சிரமங்கள் இருந்தாலும் உனது பொறுப்பைக் கைவிட்டுவிடாதே. கல்வி தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. எத்தொழிலிலும் பார்க்க ஆசிரியனின் பொறுப்பும் கடமையும் தனித்துவமானது. இறைவன் உனக்குத் தந்த சந்தர்ப்பத்தை ஒழுங்காகப் பயன்படுத்து. அந்த மாணவர்களின் வாழ்க்கை ஆசிரியர்களான உங்கள் கைகளில் தரப்பட்டுள்ளது. அவர்களை ஆளாக்க வேறு யாரும் வரப்போவதில்லை. எனவே கடமை தான் பிரதானம். நாங்கள் எங்கே போகப்போகிறோம். இங்கு தான் இருப்போம், அவதானம்.”

பின்தங்கிய பிரதேசப் பாடசாலையின் ஆசிரியப்பணி என்பது இலகுவானதல்ல.  மேலும் அப்பாடசாலையில் கற்கும் மாணவர்கள் பலரும் வசதிகள் அற்ற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகப் பெரிதும் இருந்தார்கள்.  ஒரு விளக்கு தான் ஒளிர்வதுடன் நின்றுவிடாமல் மேலும் பல விளக்குகளை ஏற்றி ஒளிரத் துணையாக இருக்கும் தன்மையை நன்குணர்ந்தவரான வேதநாயகன் பாடசாலை நேரத்திலும் பாடசாலை நேரம் முடிந்த பின்னரும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை எடுப்பவராக மிளிர்ந்தார்.  இதனால் அவ்வாண்டுகளில் நல்ல பெறுபேறுகளை வெளிக்கொணர்ந்த பாடசாலையாக மல்லாவி ம.வி விளங்கியது.

தொழில்ரீதியாகத் தம்மை வளப்படுத்தவும் வலுவூட்டவும் உதவும் பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறியைப் பயில யாழ். பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துத் தெரிவாகி இருந்தார்.  1991இல் இக்கற்கை நெறிக்காக மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.  இதற்கிடையில் 1990 நவெம்பர் மாதத்தில் ஆசிரிய சேவையில் இருக்கும் போதே இலங்கை நிருவாகசேவை ஆட்சேர்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பத்தினை மேற்கொண்டு பரீட்சையில் தோற்றியிருந்தார்.  இதன் பெறுபேறுகள் 1991 ஏப்ரல் மாதம் முற்பகுதியில் வெளியாகின.  வேதநாயகன் இப்பரீட்சையில் சித்தி பெற்றிருந்தார்.  ஆசிரியராகத் தொடர்வதா? அரச நிருவாக சேவையில் இணைவதா என்னும் இரு தோணிகள் அவரின் காலடியில் அலையாடிக் கொண்டிருந்தன. குடும்பத்தாரின் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் நிருவாக சேவையில் இணைவதற்கு ஊக்கமளித்தன.

குலதெய்வமாம் கும்பழாவளை விநாயகனின் பாதம்பணிந்து வணங்கி தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். அதன்படி அரச நிருவாக சேவையாளனாக 19-04-1991ல் இணைத்துக் கொள்ளப்பட்டார். இருவார காலத்தில் தேவையான பயிற்சிகள், அறிவூட்டல்கள், தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன. நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் நியமனம் 1991 மே மாதம் இவருக்குக் கிடைத்தது. 1991 மே மாதம் புங்குடுதீவு – குறிகட்டுவானுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றார். அக்காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு, வாகன ஓட்டம் மட்டுப்படுத்தப்பட்டு இயங்கியமை போன்ற காரணங்களால் மக்களின் பிரதான வாகனமாக துவிச்சக்கரவண்டிகளே பயன்படுத்தப் பட்டன. நெடுந்தீவுக்கு படகு மூலம் சென்று பொறுப்புக்களை ஏற்றார். உடனடியாக மக்கள் சந்தித்த துன்பமாக பிரயாண வசதியின்மையையே குறிப்பிடலாம். குமுதினி படகு 1985இல் எதிர்பாராத துர்ச்சம்பவத்துக்கு உட்பட்ட பின்னர் மீண்டும் சேவைக்குரியதாகச் சீரமைக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் மற்றும் கூட்டுறவுச்சங்கப் படகுகளே பயன்பாட்டில் இருந்தன. அவையும் உரிய அனுமதி வழங்கப்பட்டாலேயே சேவையாற்ற முடியும். அடிக்கடி தளம்பல் நிலையில் இருந்ததால் பல்வேறு சிரமங்களை நெடுந்தீவு சந்திக்க நேர்ந்தது. உணவுப் பொருள்களின் இருப்பு, உத்தியோகத்தர்களின் வருகை, மருத்துவ வசதியின்மை, பணிக்கு வரமுடியாமலும் சென்றால் திரும்ப முடியாமலும் பல சிரமங்கள், உள்;ர் உற்பத்திப் பொருள் களை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாமை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இயல்பு வாழ்க்கையில் குழப்ப நிலைகள், விலை வாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்த நிலை, பாவனைப் பொருட்களின் பதுக்கலும்  திடீர்  தட்டுப்பாடும். இவற்றையெல்லாம் எந்தவொரு நிருவாக அலுவலகம் கையாண்டு மக்களுக்கு சாத்தியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமோ அங்கேயும் ஆக்கிரமிப்பான நிலை.

மே மாதத்தில் பணிக்குச் சென்று ஓகஸ்ட் மாதம் வரை நிருவாக ரீதியாக மேற்கொள்ள வேண்டியனவற்றை மேற்கொண்டு ஓரளவு சீர்படுத்த முனைந்தார். ஓகஸ்ட் மாதத்தில் யாழ். கச்சேரியில் நடைபெற்ற அரச அதிபரின் கூட்டத்துக்கு வருகைதந்த பின்னர், செப்ரெம்பர் மாதம் திரும்ப நெடுந்தீவுக்குப் போக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 17-10-1991இல் நடைபெற்ற தீவுப்பகுதி மீட்பு  நடவடிக்கை காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக தீவகம் கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் தரைவழித் தொடர்புகளைக் கொண்டிருந்த ஊர்காவற்றுறை. யுபுயு பிரிவு மக்கள், வேலணை யுபுயு பிரிவு மக்கள், புங்குடுதீவு மக்கள் கால் நடையாகவே யாழ்ப்பாணத்துக்கு கையிற் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை கைவிட்டுப் புறப்பட்டிருந்தனர். ஒருசில வயதானவர்களும் நோயாளிகளும் இடம்பெயர விரும்பாதவர்களுமாகச் சில நூறு மக்கள் மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் தங்கியிருந்தனர். ஆனால் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு மக்களுக்கு இவ்வித இடம்பெயர்வுக் குரிய சந்தர்ப்பம் தீவுகளாக அமைந்த நிலையிலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் ஊர்கள் கொண்டுவரப்பட்டதாலும் அமையவில்லை. அவ்விடங்களிலுள்ள மக்கள் முழுமையாகக் கட்டுப்பாட்டுப் பிரதேச வாசிகளானார்கள்.

இந்நிலையில் முதல் நிர்வாக சேவை நியமனத்தின்போதே தனது பொறுப்புக்களை, கடமைகளை ஆற்றமுடியாத சூழ்நிலைகளைச் சந்தித்தவரான வேதநாயகன் சாவகச்சேரியில் யுனுளு சுந்தரம்பிள்ளையின் பணிமனையுடன் இணைக்கப்பட்டார். சுமார் ஆறு மாத காலங்கள் பலவித கடமைப் பயிற்சிகளுக்கான வாய்ப்பை இங்கு கடமையாற்றும் போது பெற்றுக்கொள்ளமுடிந்தது. அதன்பின், யாழ். கச்சேரியுடன் செயற்பட்ட ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபராக 1993 யூன் மாதம் வரை கடமையாற்றினார். இடப்பெயர்வுக்குள்ளான மக்களின் நிவாரணப்பணிகள், தற்காலிக இடங்களில் அமைந்து செயற்பட ஆரம்பித்த பல்வேறு நிருவாக அலுவலகங்கள், திணைக்கள அலுவலகங்கள், சந்தித்த பல்வேறு சிக்கல்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்படியான கடமைகள் மேலோங்கின. மக்களின் பாதுகாப்பு, இடப்பெயர்வு, பயண அனுமதிகள், பதிவுகள் எனப் பல பணிகளை இடப்பற்றாக்குறை, அலுவலர் பற்றாக்குறை போன்றனவற்றுடனும் காகிதாதி உபகரணங்கள், அலுவலகப் பொருட்கள், எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் தட்டுப்பாட்டுடனும் போராடி நிறைவேற்ற வேண்டியிருந்தது.

1993 ஜூலை மாதத்தில் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பதவிக்கான இடமாற்றம் தரப்பட்டது. மல்லாகத்தில் ஒரு தனியார் வீட்டில் இயங்கிய அலுவலகம் ‘முன்னேறிப் பாய்ச்சல்’ நடவடிக்கையின் போது அங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விவசாயப் பாடசாலை இருக்கும் பகுதியில் மீள அமைக்கப்பட்டது. இறுதியாக 1995ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய இடம்பெயர்வுக் காலத்தில் சாவகச்சேரிப்பகுதிக்கு அலுவலகத்தை நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கும் சாவகச்சேரியில் தங்கியிருந்து வரணி வலயத்துக்குரிய உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்ற நேரிட்டது. ஆக நியமன காலந்தொடக்கம் எந்தவொரு பகுதிக்கும் முழுமையாக இயங்கமுடியாத வகையில் பணியிட மாற்றத்தை சந்தித்தவராக அமைகின்றமையைக் காணமுடிகின்றது.

அக்காலத்தில் நிலவிய சாதகமற்ற நிர்வாகச் சூழ்நிலைகள், தொடர்ந்து நிலவிய அமைதியற்ற தும் பதட்டம் நிறைந்ததுமான வெளிச் சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு அலுவலகங் களிலும் இவ்வாறான நிலைமைகளை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சந்தித்தனர் என்பது மறக்க முடியாத, மறுக்கமுடியாத உண்மையாகும். இவற்றுள்ளும் தமக்கெனத் தரப்பட்ட பணிகளைச் சிரமம் பாராது, நேர காலம் பற்றிச் சிந்திக்காது, சமூக நலனைக் கருத்திற் கொண்டு அர்ப்பணிப் புடன் பணியாற்றியவர்களாகப் பலரைக் குறிப்பிட முடியும். குடும்ப, சொந்த நலன்களைக் கருத்திற்கொண்டு ஒருவித ‘சமநிலை’யைக் கடைப்பிடித்து பிரச்சினையின்றிப் பணியாற்றிய வர்களாகவும்   பலரை  இனங்காண  முடிகின்றது. அதே சமயம் நேரகாலம் பாராது, தமது சிரமங்களைப் பொருட்படுத்தாது, குடும்பச் சூழ்நிலைகளை முன்னிறுத்தாது, பொதுமக்களின் சொந்த வாழ்க்கைக்கான சுகநலன் முதற் தொட்டு பல பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியவர்களாக அமைந்த உயர் நிருவாக சேவையாளர களையும் இனங்காண முடிகின்றது.

1996 ஏப்ரல்  மாதமளவில் மீண்டும் மீளக்குடியமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சிலர் நம்பியதும் பலர் நம்பாததுமான இம் மீளக்குடியமர்த்தல் காலத்தில் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார் வேதநாயகன். பல்வேறு நிவாரணங்கள் வழங்குதல், பல்வேறு அமைப்புகளின் உதவித்திட்டங்கள் எனச் சமூகமட்டத்தில் செயற்படவேண்டிய நிர்ப்பந்தமான பணிகள் நெருக்கடி நிலையை அரச நிருவாகிகளுக்கு கொடுத்த காலமாக அமைந்தது. ஆனாலும் சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய இக்கடமைகளை தமது தற்துணிவான நடவடிக்கைகளினூடாகச் சிறப்பாகக் கையாண்டு சாதித்த அதிகாரிகள் பலரில் வேதநாயகனும் ஒருவரெனக் குறிப்பிடலாம்.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக நடைமுறை ஏற்படுத்தப்பட்டு பிரதேச செயலகங்களாக உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் தரமுயர்த்தப்பட்டுவந்தன. மீட்கப்படாத பிரதேசமாக இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் 1996 வரை பிரதேச செயலக நடைமுறை அமுலாக்கப்படவில்லை. கட்டுப்பாட்டு பிரதேசமாகி மீளக்குடியமர்வு அனுமதிக்கப்பட்டு செயற்பாடுகள் படிப்படியாக நடைமுறையான போது ஒக்ரோபர் 1996ல் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலகம் உருவாக்கப்பட்டு அதன் பிரதேச செயலாளராக வேதநாயகன் நியமனம் பெற்றார். நிருவாகசேவை அதிகாரிகளுக்கு இருந்த பற்றாக்குறை காரணமாகச்  சங்கானை பிரதேச செயலகப் பணிகளையும் பதிற்கடமையாக நிறைவேற்றினார். இவ்வாறே நல்லூர் பிரதேச செயலராகவும் ஒருவருட காலம் பதிற்கடமையாற்றியுள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பதவியில் 2002 டிசெம்பர் 31ஆம் திகதி வரை செயற்பட்டு வந்த வேதநாயகன் அவர்கள், 01.01.2003ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அப்பதவியிலிருந்து 2007.மே.02ஆம்; திகதி முதல் இம்மாவட்ட அரச அதிபராக நியமனம் கிடைக்கப் பெற்றார்.  இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற யுத்த காலமாக அமைந்த இக்காலப்பகுதியில் பதட்டம் நிறைந்த பகுதியில் பொறுப்பான பதவியில் அமரவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

யுத்தமேகம் நகர்ந்து நகர்ந்து பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் 2009 ஜனவரி 20ஆம் திகதியன்று கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகப் பணிகளைத் தர்மபுரத்துக்கு நகர்த்த வேண்டியேற்பட்டது. மேலும் மக்களும் பல்வேறு பகுதிகளுக்குமாக நகர்ந்து கொண்டிருந்த சூழ்நிலைகளில் இறுதியாக வவுனியாவுக்கு அலுவலகம் கொண்டு செல்ல நேரிட்டது.

வவுனியா கச்சேரியில் கிளிநொச்சி அலுவலகம் இயங்கிவந்த சூழ்நிலையில் 2009 ஜூலை மாதம் 30ஆந் திகதி வேதநாயகன் இரகசியப் பொலிஸ் விசாரணையாளர்களால் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு பலத்த விசாரணைகள் இடம்பெற்றன. ஆறு மாதங்களின் பின்னர் 2010 ஜனவரியில் விடுவிக்கப்பட்டார். அத்தோடு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இணைக்கப்பட்டு அவ் அலுவலகத்தில் கடமையாற்றி வந்தார். அங்கு தொழில்நுட்பப் பிரிவுப் பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த நிலையில் 2010 ஜூலை 10ஆம் திகதி முல்லைத்தீவு அரச அதிபராகஃமாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொண்டவரான வேதநாயகன் தன்னலங் கருதாது தனது நேர்மை, திறமை, அனைத்தையும் மாவட்டச் செயலகங்களுக்கூடாக நாட்டின் அபிவிருத்திக்கான பணிகளை ஆற்றி வந்துள்ளார். பல இக்கட்டான, உயிராபத்தான சூழ்நிலை களை பலமுறை சந்தித்துள்ளார் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியோர் அறிவார்கள். தன்னம்பிக்கையுடன் இறைநம்பிக்கையும் அவரை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகத் தன் பணிகளை ஆற்றுபவராக வளர்த்துள்ளதெனலாம்.

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சானவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது”

என்னும் வள்ளுவர் வாக்குக்கமையச் செயற்படுபவர் எனக் குறிப்பிடமுடியும்.

ஆறு மாதங்களின் பின், 2011 ஜனவரி முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் பெற்றார். முல்லைத்தீவு, மன்னார் என்பன விருத்தியடைந்து வரும் மாவட்டங்கள். யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள். மேலும் மக்கள் இடம்பெயர்ந்து யாவற்றையும் இழக்கவேண்டிய கட்டாயச் சூழலில் இருந்து மீள்குடியேற்றப்படுபவர்கள். பல்வேறு பகுதிகளிலும் குடியமரத் தடையான பல விடயங்கள் இருந்துவந்தன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து வாழிடச் சூழலை ஏற்படுத்தி உரிய பணிகளை உறுதியாக முன்னெடுத்த இவர் 2010ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்திற்குப் பதவி உயர்வு பெற்றார்.

2000ஆம் ஆண்டில் இவர் பெற்றுக்கொண்ட பொது முகாமைத்துவத்துறையில் டிப்புளோமா சான்றிதழ் (Diploma in Management) 2006ஆம் ஆண்டில் மேற்கொண்ட பொதுநிர்வாகத் துறையில் முதுகலைமாணி (Master in Public Administration) பட்டங்கள் இவரது துறைசார்ந்து ஆளுமையை விருத்தி செய்ததுடன் ஆற்றலும் அனுபவமும் கொண்ட மூத்த அதிகாரி என்ற நிலையை உருவாக்கின.

அத்துடன் சேவைக்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் விளங்குகின்றார். சேவைக்காலப் பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் என இந்தியா, தாய்லாந்து, சீனா, தென்கொரியா, அவுஸ்திரேலிய நாடுகளுக்கு இவர் பயணங்கள் மேற்கொண்டு படிப்புகளை மேற்கொண்டவராவார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிவந்த போது பத்துமாத நிறைவில், அமானராகலை மாவட்த்திற்கு இடம் மாற்றப்பட்டார்.; மொனராகலையில் பதவி ஏற்க புத்தளம் வரை பயணித்துக் கொண்டிருந்த வேளையில், “இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மீள மன்னாருக்குச் சென்று கடமையாற்றுக” என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நவம்பர் வரை மன்னாரில் கடமையாற்றிய நிலையில் மீண்டும் 2011ஆம் ஆண்டு டிசெம்பரில் முல்லைத்தீவு அரச அதிபராகப் பொறுப்பேற்றார்.

பொறுமை, மனவுறுதி, ஆளுமை, அர்ப்பணிப்பு இவற்றை அணிகலன்களாகக் கொண்டு மற்றவர்களை வசீகரிக்கும் விதமான சிரித்த முகத்தைக் காப்பாகக் கொண்டு அன்பாகப் பழகும் பண்புடையவரான வேதநாயகன் மீண்டும் ஒரு இடமாற்றத்தைப் பெற்றார். முன்னர் ஆறு மாத காலமே கடமையாற்றியிருந்த முல்லைத்தீவு மண் அவரை தன் சேவைத்தளமாகக் கொண்டு பணியாற்ற மீண்டும் அழைத்தது. 2011 டிசம்பரில் முல்லைத்தீவின் அரச அதிபராக ஏற்ற பணியை 2015ஆம் ஆண்டு மார்ச் 24ஆந் திகதி வரை ஆற்றினார். காயப்பட்ட மண்ணுக்கு கருத்தோடு பணிகள் ஆற்றிய வேதநாயகனை சொந்த மண்ணான யாழ்ப்பாண மாவட்டம் அரச அதிபராக வாழ்த்தி வரவேற்ற தினம் 2015 மார்ச் 25ஆந் திகதியாகும்.

பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு மக்கள், பல்வேறு தேவைகள், பல்வேறு அபிவிருத்தி நோக்குகள் என தனது இருபது வருட நிருவாக சேவைக்காலத்தை வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் பூர்த்தி செய்த வேதநாயகனுக்கு அவரது சொந்த மாவட்டத்தின் அரச அதிபர் பணி மேலும் மக்கள் பணியாற்ற வாய்ப்பாக அமைந்தது. “மக்களை நாடிச் சென்று உதவுதல் என்பது எனது கொள்கையாக என்றும் இருந்து வந்துள்ளது” எனக் குறிப்பிடும் வேதநாயகன் இடம்பெயர்ந்த காலத்தில் வெவ்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கியதை அடிக்கடி நினைவுகூருவதைக் கவனிக்கலாம். யுத்த காலத்திலும் இதே போன்ற நிலைமைகள் ஏற்பட்டபோது அரச உதவிகளைக் கேட்டுப்பெற்று வழங்க முடிந்தமையைக் குறிப்பிடுகின்றார்.

உலக உணவுத்திட்ட உதவிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் முதலிய சர்வதேச அமைப்புகளின் உதவிகள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட தானும் தனது அதிகாரிகளும் விசேட கவனம் செலுத்தி வந்தமையையும் குறிப்பிடுகின்றார். பெறுகை, விநியோகம், இருப்பு போன்றனவற்றின் துல்லியமான பதிவுகள் அந்நிறுவன உதவிகள் தொடர்ந்து தடைப்படாமல் கிடைக்க உறுதுணையானவை. சிலவேளைகளில் பல்வேறு காரணிகளால் பொருட்கள் சேதப்பட்டு பயன்படுத்த முடியாது போகும்போது தொடர்ச்சியான இருப்பைப்பேணி மக்களின் பட்டினி நிலையைப் போக்கி, ஆரோக்கிய நிலையைப் பராமரித்து வந்தமை மக்களின் இருப்பைத் தக்கவைப்பதற்கு உதவின.

எவருக்கும் வளைந்து கொடுக்காத மக்கள் பணியாளன்-தன்னை நாடி வருகின்ற சேவைநாடிகளை திருப்தியுடன் திரும்பிச் செல்ல வைக்கும் பணித்திருந்தகை வேதநாயகன் தனது ஓவ்விற்கு முன்னதாக இரு வேறு துன்பங்களைச் சந்தித்தார். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஓர் இடமாற்றம் வழங்கப்பட்டது. அது கடவுளின் கருணையால் தடைப்பட்டுப் போக மீண்டும் 2020 பெப்ருவரி மாதம் இடமாற்றக் கட்டளை வேண்டுமென்றே வழங்கப்பட்டது. இதனால் துன்பமடைந்த வேதநாயகனவர்கள் தனது சேவைக்காலம் நிறைவுறுவதற்கு முன்னதாகவே ஓவ்விற்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினராகவும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களினதும் சமூகமட்ட அமைப்புகளினதும் ஆலோசகராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : கடமை தவறாக் கதிரவன் – வேதா மணி விழா மலர் – 2021

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!