Sunday, November 3

கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார்

0

உரும்பிராய் கலைக்கோயில் பரதகலா நிறுவனத்தின் ஸ்தாபகரான திருமதி பத்மினி செல்வேந்திரகுமார் அவர்கள் தமிழ்க்  கலையுலகம் போற்றும் பரதநாட்டியக் கலைஞராக மதிக்கப்படுபவர். பரதநாட்டிய ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு நிறுனங்களும் இவரது கலைத்திறமையை வியந்து பாராட்டியது மட்டுமல்லாமல் விருதுகளும் வழங்கிக் கௌரவித்துள்ளனர். அனேகமான நடனத்துறை மாணவர்களை உவாக்கியுள்ளார். கலாபூஷணம் பத்மினி அவர்கள் ஓய்வின் பின்னரும் தனது கலைப்பணியை கைவிடாது தொடர்ந்து வருகின்ற இந் நடனக் கலைஞர் தன்னடக்கத்துடன் எம் மத்தியில் வாழ்ந்து வரும் மூத்த கலைஞர் என்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பிரதேசத்தில் நீர்வளமும், நிலவளமும் கொண்டு வெங்காயம், திராட்சை, புகையிலை, உருளைக்கிழங்கு போன்ற பணப்பயிர்களின் மூச்சாய் விளங்கும் உரும்பிராய் மண்ணில் நடராஜா பூவதி தம்பதிகளின் புத்திரியாக 1952-10-17 ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் கற்றுப் பின்னர் உயர் கல்வியினை உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பெற்றவர். உயர் கல்வியினைத் தொடர்ந்து நடனக் கலைமீதிருந்த பெருவிருப்பம் காரணமாக இந்தியா சென்று நடனத் துறையில் கல்வியைத் தொடர்ந்தவர்.

தனது ஒன்பதாவது வயதில் – 1961 ஆம் ஆண்டு ஈழத்துப் பரத நாட்டியக் கலை முன்னோடிகளில் ஒருவரான கலைச்செல்வன் எரம்பு சுப்பையா அவர்களை தனது முதற் குருவாகக் கொண்டு கொக்குவில் கலாபவனம் நிறுவனத்தில் 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் பதரநாட்டிம் பயின்று முதலாவது நிகழ்வினை தனது குருவான கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா அவர்களது நட்டுவாங்கத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடத்தினார். கொக்குவில் கலாபவனத்தில் பயின்ற ஆறுவருட காலத்தினுள் யாழ்ப்பாணம், உசன், வட்டுக்கோட்டை, மன்னார், வவுனியா, நுவரெலியா போன்ற இடங்களில் நடைபெற்ற கலைவிழாக்கள் நிகழ்வுகளில் கலாபவனம் சார்பில் நிகழ்த்தப்பட்ட நடன நிகழ்வுகளில் இவர் பங்கு கொண்டு தனது சிறப்பான நடன ஆற்றலை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றார்.

1967-1982 ஆம் ஆண்டு வரை கலைஞர் வேல்ஆனந்தனிடம் கதகளி நடனத்தைப் பயில்கின்ற வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 1971 ஆம் ஆண்டு தனது உரும்பிராய் இல்லத்தில் “கலைக் கோயில்” என்னும் பரத கலை நிறுவனத்தினை கலைஞர் வேல்ஆனந்தன் அவர்களது உதவியோடு அரம்பித்து மாணவர்களுக்கு பரதக் கலையினை பயிற்றுவித்து வந்தார். ஆரம்ப தினத்திலிருந்து இன்று வரை இடையறாத கலைப்பணியினை செயற்படுத்தி வரும் இந்நிறு வனம் பல்வேறு பரதக் கலைஞர்களையும் பரத ஆளுமையாளர்களையும் உருவாக்கி பெருமையுடன் நிமிர்ந்து நிற்கின்றது. தற்போது இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமாக சுவிஸ் மாநகரில் தனது சகோதரி நிமலினி ஜெயக்குமார் அவர்களது நிர்வாகத்தில் செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பரதநாட்டியக் கலையில் தன்னை ஆளுமை மிக்க படைப்பாளியாக்கும் தேடலில் அவர் 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் கதகளி நடன மேதையான அமரர் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடம் கதகளி நடனத்தில் பெற்ற சிறப்பான பயிற்சியினூடே ஆசிரியர் தராதரப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டார். இக்காலத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகக் குறிப்பிட்டு மகிழும் இவர் இளம் வயதில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக இதனைக்  கருதிப் பெருமை கொள்கின்றார்.

பதரக் கலையில் மேலும் பாண்டித்தியம் பெறுவதற்காக மீண்டும் இந்தியா சென்று தமிழகம் அடையாறு கே.இலட்சுமணன் அவர்களிடம் பயிலும் வாய்ப்பினைப் பெற்றார். இவரது வழிநடத்தலிலும் பயிற்சியிலும் தன்னை இத்துறையி;ல் புடம்போட்டுப் பட்டைதீட்டிக்கொண்ட பத்மினி அவர்கள் பரதக் கலையில் “டிப்ளோமா” பட்டம் பெற்று நட்டுவாங்கம் செய்யும் திறணின் நுட்பங்களைப் பயின்று சிறந்த நட்டுவாங்கக் கலைஞராக மிளிர்ந்தார். இதன் பின்னர் தாயகம் திரும்பிய நடனக் கலைஞர் பத்மினி அவர்கள் உரும்பிராயில் உள்ள தனது கலைக்கோயில் நிறுவனத்தினை மேலும் வினைத்திறனுடைய நிறுவனமாக செயற்படுத்தி வெற்றி கண்டார். இவ்வாண்டில் யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கழக நடனக் கற்கை மாணவர்களுக்கு கதகளி நடனப் பயிற்சிகளை வழங்கி வந்தார். தொடர்ந்து கலைஞர் வேல்ஆனந்தன் கலைக்குழுவினருடன் இணைந்து பயிற்சிகளைப் பெற்றதுடன் இக்குழுவின ரது நடன ஆற்றுகைகளில் பங்கு கொண்டு பலரதும் பாராட்டைப் பெற்றவர். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் நாட்டியப் பேரொளி எனப் போற்றப்படும் பத்மினி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை கொழும்பு சுகததாச திறந்தவெளி அரங்கில் அவரை வரவேற்கும்முகமாக ஒழுங்கு செய்யப்பட்;டு நிகழ்த்திய நடன ஆற்றுகை நிகழ்வில் “விஸ்வாமித்திரர் மேனகை” என்ற நாட்டிய நாடகத்தில் மேனகையாகப் பாத்திரமேற்றுத் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தினார். இவ்வாற்றுகைக்காக ஈழத்து ஆடற் கலைஞரான பத்மினி அவர்கள் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் பாராட்டைப் பெற்றமை மறக்கமுடியாத நினைவுகளாக இ;ன்றும் மீட்டுப் பார்க்கின்றார்.

நடனபாட ஆசிரியராக 1977-05-25 ஆம் நாள் நியமனம் பெற்ற இவர் தனது முதற் கல்விப்பணியை வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். இவ் வித்தியாலயத்தில் கற்பித்த காலத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளை நிகழ்த்தினார். 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக இணைந்து கொண்ட இவர் முழுமையான ஆசிரியர் பயிற்சியின் பின்னர் 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடன ஆசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகளில் பங்குகொண்ட கொக்குவில் இந்துக்கல்லூரி நடனப் போட்டிகளில் பல்வேறு மட்டங்களிலும் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டமை இப்பாடசாலை மாணவர்களின் கலைநாட்டத்தினையும் ஆசிரியரின் அர்ப்பணிப்பினையும் கலை உலகத்திற்கு எடுத்துக் காட்டியது எனலாம். இத்தகைய செயற்பாடுகளால் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம். உயர்தரப் பரீட்சை களில்  அதிகளவிலான மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களிற்கும், நுண்கலைக் கல்லூரிகளிற்கும் கற்பதற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அயராத உழைப்பும் விடா முயற்சியும் அர்ப்பணிப்பான பணியும் இவரை ஆசிரியர் சேவையிலிருந்து முன்னோக்கிக் கொண்டு சென்றது. யாழ்ப்பாண கல்வி நிர்வாகப்பிரிவின் நடனபாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக 1998 ஆம் ஆண்டு பதவியுயர்வுடன் நியமனம் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தனது அரச கற்பித்தற் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பினைச் சேர்ந்த பாலசிங்கம் செல்வேந்திரகுமார் அவர்களை 1985 ஆம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட பத்மினி அவர்கள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் வழமையான குடும்பப் பொறுப்பினைச் சுமக்கும் சுமையோடு தான் சார்ந்த  கலைத்துறையினைக் கைவிடாது தொடர்ந்து முன்கொண்டு சென்றார். இதற்கு  இவரது வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும் விட்டுக்கொடுப்பும் ஊக்கமும் மிக முக்கியமானதாகும்.

உரும்பிராய் கலைக்கோயில் நிறுவனத்தினூடாக அகில இலங்கை ரீதியில் பல்வேறுவிதமான நடன ஆற்றுகைகளை வழங்கிய இவர் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் தனது நடனக் குழுவினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நாட்டிய நிகழ்வுகளை வழங்கியுள்ளார். இச்சுற்றுப் பயணத்தின்போது லண்டன் BBC தமிழோசை வானொலி நிறுவனம் இவரைப் பிரத்தியேகமாக செவ்விகண்டு பெருமைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் 1980 ஆம் ஆண்ட “கதகளிஆடல்”என்னும் நிகழ்வினை இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்த்தக்கூடிய வகையில் ஒழுங்கு செய்து ஆற்றுகை செய்தமை இவரது கலைப்பிரவாகத்தின் இன்னொரு பரிமாணமாகும்.

இவர் பங்கு கொண்ட நாட்டிய நாடகங்களும் பங்கேற்ற பாத்திரங்களும்.

சீதாபகர்ணம்                                   –    இராமர்

கர்ணன்                                                –    கர்ணன்

விஸ்வாமித்திரர் மேனகை     –    மேனகை

பஸ்மாசூரன் மோகினி              –    மோகினி

பாரிஜாதம்                                         –    கண்ணன்

அருளும் இருளும்                           –    யேசு,ஏரோதியான்

கீதோபதேசம்                                 –    கிருஷ்ணர்

பாஞ்சாலி சபதம்                            –    பாஞ்சாலி

வற்றாப்பளையாள்                      –    கண்ணகி

இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள்.

அகில இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் 1000த்திற்குமேற்பட்ட மாணவர்; பரம்பரையை உருவாக்கியுள்ளார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படும் ஆசிரியர் தரப் பரிட்சையில் சித்தியெய்தி ஆற்றுகை நிகழ்விலும் பங்கு கொண்டு “கலாவித்தகர்” பட்டம் பெற்ற மாணவர்கள் ஏராளம். இவர்களில் குறிப்பாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி புவனேஸ்வரி வேல்நிதி, யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட நடன விரிவுரையாளர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் ஆகிய இருவரும் இத்துறையில் தம்மை இணைத்து ஆசிரியரின் பெயரை நிலைபெறச் செய்து வருகின்றனர். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதர நடன பாடத்திற்குரிய வினாப்பத்திரங்களை தயாரிப்பவராகவும் செயன்முறைப் பரீட்சகராவும் 1979 இலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாகப் பணியாற்றினார். மேலும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம், உயர்தரம், வடஇலங்கை சங்கீத சபையில் பயிலும் மாணவர்களின் வழிகாட்டுதலுக்காக நடன உருப்படிகளைக் கொண்ட “நடன சாகரம்” என்னும் இறுவட்டினை தனது புலமையின் உச்சமாக வெளியிட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் பரத நாட்டிய வருகைதரு விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் பரத நாட்டியத்தினை பயிற்றுவிப்பவராகவும் பரீட்சகராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.  2000 ஆண்டின் பின்னர் ஒன்பது தடவைகள் சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் வட இலங்கை சங்கீத சபை நடத்துகின்ற நடனப் பரீட்சைகளுக்கு பரீட்சகராகச் சென்று கடமை புரிந்தமையும் இங்கு மனங் கொள்ளத்தக்கதாகும்.

இவருக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.

2012 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடனக்கலைக்குரிய அரச உயர்விருதான  “நடனவாரிதி – வாழ்நாள் சாதனையாளர்” விருதும்

2019 ஆம் ஆண்டு கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் “கலைமாமணி” விருதும்

2021 ஆம் ஆண்டு லண்டன் கிறிப்பின் கல்லூரி “ஆச்சார்ய கலாசாகர்” விருதும்

வவுனியா நிருத்திய நிகேதனம் “நாட்டியசுரபி” விருது விருதும்

கலாசார அலுவல்கள் திணைக்களத்;தினால் “கலாபூஷணம்” விருதும்

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் “கலைக்குரிசில்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!