1916-10-21 ஆம் நாள் நெடுந்தீவில் பிறந்த இவர் கிளிநொச்சியில் ஜெயந்திநகர் என்னுமிடத்தில் வாழ்ந்தவர். வே.கதிரவேலு அவர்கள் சமூக சேவைக்கு மகுடம் சூட்டிய பெருந்தகையாளனாவார். திருத்தொண்டர், பேரன்பர், கர்மயோகி அப்புஜி அவர்கள் கல்வி போதிப்பவராக, நிர்வாகியாக, சமூக சேவையாளனாக மக்களின் துன்பதுயரங் களை நீக்கும் கடவுளின் கருவியாக எம் மத்தியில் வாழ்ந்த உன்னதமான மனிதன். நெடுந்தீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்புஜி அவர்கள் கிளிநொச்சி மண்ணில் செய்த சேவைகள் அளப்பெரியன. இலங்கையின் பல இடங்களிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியவர். 1964 இல் கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கு அருகில் 50 ஏக்கர் நிலத்தினை அரசாங்கத்திடமிருந்து பெற்று காடு திருத்தி 10 ஏக்கர் நிலத்தினை இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காக வழங்கியதோடு, நின்று விடாது 40 ஏக்கர் நிலத்தினை வைத்து கிளிநொச்சியில் குருகுலம் என்ற அமைப்பினை உருவாக்கி 200 இற்கு மேற்பட்ட தாய்தந்தையரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தார். இவர்களது வளர்ச்சிக்கும் வாழ்வின் உயர்ச்சிக்கும் விவசாயம், நெசவு, பன்னம், இயந்திரம் ஓட்டுனர், மரவேலை, மேசன்,பேக்கறி போன்ற பயிற்சிநெறிகளை உருவாக்கி பயிற்சியளித்து தனியொரு மனிதனாக சமூகத்தை வளப்படுத்தினார். காந்தியம் எனப்படும் பாடசாலைகளை பரந்தன், குமரபுரம், பன்னங்கண்டி, புத்துவெட்டுவான் போன்ற பிரதேசங்களில் உருவாக்கி ஆசிரியர்களை பயிற்சியளித்து கல்விப் பணியாற்றினார். இவருடைய இப்பணியில் பயின்று வளர்ந்தவர்கள் இன்று கிளிநொச்சியில் தலைசிறந்த அதிபர்களாகவும், ஆசிரியர் களாகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊற்றுப்புலம் என்னும் கிராமத்தினை காடுதிருத்தி குடியேற்றி உருவாக்கிய பெருந்தகை. காந்தியடிகள் தன்னிலும் பார்க்க வசதியற்ற நிலையில் எத்தனையோ மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தான் எளிமையாக வாழ்ந்தார். காந்தியடிகளுடைய அதே கொள்கையில் அப்புஜி அவர்களும் வாழ்ந்தார். எப்பொழுதும் உந்துருளியில் சென்றுதான் தனது சேவையினையாற்று வார். மேற்சட்டை அணியாத காந்தியவாதியாக இம்மண்ணில் நடமாடிய சேவையின் சிகரம் வே.கதிரவேலு 1987-10-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.