Thursday, May 30

ஓவியர் கலாபூஷணம் சண்முகராசா, சின்னத்துரை

0

சின்னத்துரை இரத்தினம்மா தம்பதியினருக்கு மகனாக 1942.02.19 இல் ஸ்ரான்லிக் கல்லூரி ஒழுங்கை, கச்சேரி கிழக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். பின் பாடசாலை ஒழுங்கை, தாவடி தெற்கு கொக்குவிலில் ஆறுமுகம் யோகம்மா தம்பதியின் மகள் யோகராணியை 1974 இல் திருமணம் செய்து இரு புதல்விகளைப் பெற்றார். தற்போது வெள்ளவத்தை,கொழும்பு என்னும் முகவரியில்  வசித்து வருகிறார்;.

யா/நல்லூர் விக்னேஸ்வரா பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக் ஆரம்பித்து 1951-1961 வரையான காலப்பகுதியில் தனது சிரேஸ்ட தராதரக் கல்வியை யா/பரியோவான் கல்லூரியிலும் கற்று உயர்கல்விக்காக 1964-1969 காலத்தில் கொழும்பு கோட்டன் பிளேசிலுள்ள அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சித்திர டிப்ளோமா பட்டத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். சித்திர பட்டதாரிபட்டத்தையும் பெற்றார். 1972-1973 காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விசேட சித்திர ஆசிரியர் பயிற்சியைப் பெற்ற இவர் 1994 இல் ஆசிரியர் சேவை 1ஆம் வகுப்பிற்கு தரமுயர்த்தப் பட்டதுடன் 2000 ஆம் ஆண்டு கல்விநிர்வாகசேவை III (SLES III)  இற்கும் தரமுயர்த்தப்பட்டார்.

1970-1971 இல் யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் சித்திர ஆசிரியராக நியமனம் பெற்றார். 1972-1973 வரையான காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விசேட சித்திர ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார்.  1974-1981 வரை நு/ஹற்றன் கைலன்ஸ் கல்லூரியில் கடமையாற்றினார். 1982-1988 வரை யா/கனகரத்தினம் மகாவித்தியாலயத் தில் சித்திர ஆசிரியராக கடமையாற்றிய பின் 1989-2002 வரை யா/கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 2001 மற்றும் 2002 இல் யா/கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பிரதி அதிபராகவும் தனது கடமையை செவ்வனே செய்து 19.02.2002 இல் ஓய்வு பெற்றார்.

2000 – 2005 காலப்பகுதியில் யா/பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் பாட மாணவர்களுக்கு வருகைதரு சித்திர விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1976-1997 வரை கல்விப் பொதுசாதாரணதர சித்திரபாட பரீட்சகராகவும், பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றினார். சிலகாலம் பட்டதாரி ஆசிரியர்களின் முன்சேவை பயிற்சிநெறிக்கு சித்திர விரிவுரையாளராகவும், சிலகாலம் தொலைக்கல்வி பயிலுநருக்கு விரிவுரையாளராகவும் இவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் வருடம் தோறும் சித்திரக் கண்காட்சிகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்தி வந்தவர். நு/ஹற்றன் கைலன்ஸ் கல்லூரியில் மலைகளில் காணப்படும் பலவகைப்பட்ட கழிமண்களை கொண்டு மாணவர்களின் சித்திர கண்காட்சியை காட்சிப்படுத்தியமையால் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு சௌமிய தொண்டமானால் பாராட்டப்பட்டார். 2020 இல் சாவகச்சேரி ஹன்ற் காட்சிக் கூடத்தில் கழிவுப் பொருள்களைக் கொண்டு; உருவாக்கப்பட்ட உருவங்களை காட்சிப்படுத்தியதால்  பலராலும் பாராட்டப்பட்டார். 2019 இல் சக்தி தொலைக்காட்சியினரால் இவர் பற்றிய ஒலி ஒளித்தொகுப்பொன்றினை பதிவு செய்து, ஒளிபரப்பி இக் கலைஞனின்  பெருமையினை உலகறியச் செய்தனர். அவரது கலைவண்ண செயற்பாடுகள் சிலவற்றை Youtube இல் KVS Shan Creation என்ற முகவரியினூடாக அனைவரும் பார்வையிட முடியும்.

இவர் ஓவியம, சிற்பம், மரச்செதுக்கு வேலை, கழிக்கப்படும் பொருள்களில் கண்கவர் ஆக்கங்களை செய்தல் ஆகியவற்றோடு புகைப்படக் கலைஞராகவும், பொம்மலாட்டக் கலைஞராகவும் மிளிர்ந்தார். மனையியலில் பலவகை கோலங்கள் அமைத்தல், மரக்கறி வகைகளில் கண்கவர் உருவங்கள் அமைத்தல், கேக் ஜசிங் போடுதல், மாலை கட்டுதல் போன்றவற்றில் திறமையுடன் செயற்படுபவர். இவர் ஒரு சிறந்த சாரணராகவும் விளங்கினார். மரங்களை ஒட்டுதல், பதியமிடல் போன்றவற்றில் திறமையுடையவர். யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையின் சின்னமும் (Logo), உடுவில் கலாசார பேரவையின் சின்னமும் இவரால் வடிவமைக்கப்பட்டது. இவர் 1979 ஆம் ஆண்டு நு/ஹற்றன் கைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி மாண்பு மிகு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் உருவப்படத்தினை தட்டச்சு இயந்திரத்தின் மூலம் வடிவமைத்ததின் பலனாக ஜனாதிபதி தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியது பெருமைக்குரியது. 1984 பேராதனை ஆங்கிலப் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியர்களின் சேவைக்கு முன்பயிற்சி விரிவுரையாளராக கடமையாற்றிய போது அக்கால கல்வி மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்;கள் வருகை தந்த போது அவரைப் பார்த்து ரேகைச்சித்திரமாக வரைந்தமைக்காக அவர் நேரடியாக பாராட்டி கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார்.  அத்துடன் அருட்கவி.சி.விநாசித்தம்பி புலவரினால் உருவாக்கப்படட் நவக்கிரக தோத்திரமாலை புத்தகத்திற்கு ஒன்பது நவக்கிரகப் படங்களை வரைந்து கொடுத்தமை பாராட்டப்படக்கூடிய விடயமாகும். மேலும் நு/ஹற்றன் ஹைலன்ஸ் மகாவித்தியாலய சஞ்சிகையின் அட்டை படம்,யா/கனகரத்தினம் M.M.V  வணிகஜோதி சஞ்சிகையின் அட்டை படம்,  யா/கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கலைமகள் அட்டைப்படம்,யா/கனகரத்தினம் மத்திய ஆசிரியர், வித்தியாலய சஞ்சிகை அட்டைப்படம், மற்றும்  அருட்கவி.சி.விநாசித்தம்பி புலவர் அவர்களின் கந்தபுராண வசன காவிய அட்டைப்படம் என்பன இவரால் வரையப்பட்டவை.

இவர் பெற்றுக் கொண்ட விருதுகள் 

1992 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தழிழ் விழாவில் பிரமஸ்ரீ வீரமணி ஜயரினால்  ;சகலகலா வல்லவன்  என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2004 இல் இந்து கலாசார அமைச்சினால் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றவர்.

2006 ஆம் ஆண்டு அளவெட்டி அருட்கவி வினாசித்தம்பி புலவரின் சிலையை சீமெந்தினால் வடிவமைத்ததிற்காக அளவெட்டி ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தான பரிபாலன சபையினரால், சித்திர தத்துவஞானி, என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பெற்றவர்.

2018 இல் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றவர்.

 2019 இல் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சினால் ;கலைமாமணி  விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றவர்.

 2020 இல் T.P  ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக் கூடத்தால்  கலைஞான வித்தகர்  எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பெற்றவர்.

 புதினப்பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டவை

20.04.2003 இல் தினக்குரல் பத்திரிகையில்  கழிக்கப்படுபவற்றில் கலைநயம்  எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

2004-10-24இல் ”கழிவுப் பொருள்களில் கலைகளின் நர்த்தனம்” என்ற விடயத்தில் பிரசுரிக்கப்பட்டது.

19.04.2004 இல் உதயன் பத்திரிகையில்  கலைத்திறனும் கற்பனை உள்ளமும் கலைஞருக்கு இன்றியமையாதவை   என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

21.07.2017 இல் மெற்றோ புதினப்பத்திரிகையில் கழிவுப் பொருட்களிலான கலைப் பொருட்கள் என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.

5.10.2019 இல் வீரகேசரி பத்திரிகையில் சங்கமம் பகுதியில்  கழிவுப் பொருட்களால் உருவாக்கப்பட்ட கண்கவரும் பொருட்கள் என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!