அறிமுகம்
1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோயலடி இரசிக ரஞ்சன சபாவின் நடுநாயகமாகவும் ஜீவநாடியாகவம் விளங்கிய தம்பு வைத்திலிங்கமவர்கள் தனது தனி முயற்சியினால் இரசிக ரஞ்சன சபாவினை வளர்த்தெடுத்தவர். தனது வாழ்க்கையினை சங்கீதத்திற்கென்றே அர்ப்பணித்து “சங்கீதப்பித்தனாக வாழ்ந்தவர். ஈழத்துப் பழம்பெரும் இசை வித்துவான் அமரர் புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்களிடம் பலகாலம் குருகுல வாசம் செய்து இக்கலையை முறையே மரபு பிறழாது கற்று சங்கீத உலகில் தனக்கென ஒரு இடத்தினை வகுத்துக்கொண்டவர்.சங்கீத சம்பிரதாயம் ஓர் எள்ளவும் பிசகாமல் பேணிப்பாதுகாத்தவர். தம்பண்ணை என அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்டவர். சங்கீத உலகில் இவரைத் தெரியாதவர்கள் எவருமே கிடையாது. கே.வி.தம்பு என எல்லோராலும் அடையளப்படுத்தப்பட்டவர்.
யாழ்ப்பாணம் இரசிக ரஞ்சன சபாவினது முயற்சியாக ஆரம்ப காலங்களில் வண்ணை பெருமாள் கோயிலடி முன்றலில் கோலாகலமாக இசை விழாக்களை நடத்தி வந்தார்.
துர்ரதிஸ்டவசமாக இவ்வாலய முன்றலில் இசை விழாவினை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது வண்ணை அரசடிப் பிள்ளையார் கோயில் அருகாமையில் இடநெருக்கடி ஏற்பட்ட போதும் இசை விழாக்களை நடத்தினார். அவர் சிந்தனையில் உருவானதே யாழ்ப்பாணம் இரசக ரஞ்சன சபாவும் அதன் மண்டபமும் ஆகும்.
ஒழுக்கமான வாழ்க்கையும், இறைபக்தியும், ஏழ்மையும், தன்னடக்கமும் கொண்ட இவர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். நேரத்தை பொன்னாக மதித்து எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கியவர்.இக்கட்டான நிலையில் அவரிடம் யார் உதவி கோரினாலும் அதை அவர் செய்யாமல் விட்டதில்லை. பலருக்குப் பொருளுதவி செய்துள்ள இவர் “பரோபகாரம் இதன் சரீரம்” என்ற மகா வாக்கியத்திற்கு அமைய கொடை வள்ளலாக வாழ்ந்தவர். மிகுந்த குருபக்தியுடைய இவர் தன்குருவினது உருவப்படத்தினை தனது அறையில் மும்மூர்த்திகளின் கீழ் வைத்து பூசித்து வந்தவர்.
அறிஞர் அண்ணா அவர்களது தாரக மந்திரமான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பவற்றினை வாழ்க்கை லட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவர். வருடா வருடம் இசை விழாவினை நடத்துவதோடு மட்டும் நிற்காமல் சிறந்ததொரு நற்கருமத்தையும் சாதித்தார். இரசிக ரஞ்சன சபாவின் கீழ் ஓர் இசைக் கல்லூரியை ஸ்தாபித்து சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு வழிசமைத்தது மட்டுமல்லாமல் 300 மாணவர்களை உள்ளடக்கியிருந்த இவ் இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், நடனம் ஆகிய பாடத்துறைகளை மிகச் சிறந்த விற்பன்னர்களைக் கொண்டு ஆரம்பித்து நடத்திப்பல இசைத்துறை மாணவர்களை உருவாக்கிய பெருமை கொண்டவர்.யாழ்ப்பாணம் இரசிச ரஞ்சன சபா என்ற பெயரில் 1952-02-01 ஆம் நாள் வண்ணை வெங்கடெச வரதரஜப் பெருமாள் கோயில் முன்றலில் ஆரம்பித்து தொடர்ந்து செயற்பட்டு வந்தமையும் இருபத்தைந்து வருடங்கள் கடந்த நிலையில் அதன் வெள்ளி விழாவினை 1976 ஆம் ஆண்டு கொண்டாடிய இரசிக ரஞ்சன சபாவின் ஸ்தாபகர் வைத்திலிங்கம் தம்பு அவர்களது அரும்பெரும் முயற்சியும் சாதனையும் போற்றப்படவேண்டியதொன்றாகும். 1976-04-17 முதல் 1976-04-30 வரை பதின்நான்கு நாள்கள் நடைபெற்ற வெள்ளிவிழாவில் அவரது சங்கீத ஞானத்தையும் சங்கீதத் தொண்டினையும் போற்றுமுகமாக அவருக்கு “கானகலாதரர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1995 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
கானகலாதரர் விருது வழங்கப்பட்டபோது இரசிகரஞ்சனசபாவின் வெள்ளிவிழா மலர்