Thursday, May 30

செல்வராசன், மரியதாசன்

0

1933-01-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலாக பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த சில்லாலை ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராசன் எனச் சூடிக்கொண்டார். தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

அங்கதப் பாணியையுடைய இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரும் வரவேற்பபைப் பெற்றன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கிய பெருமையும் அவரைச் சாரும். ‘உப்பு’ என்ற கவிதை, பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றது. சில்லையூராரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகு பெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்) 20 ஆம் நூற்றாண்டின் பெரும் கவிஞராகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் தணியாததாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கிச் சாதனை படைத்தார். ஏராளமான நேயர்கள் வாரந்தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள்.

1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். 1950 இல் பொதுவுடைமைவாதியாக காலடி வைத்த சில்லையூர் செல்வராசன் அதைப் பற்றுறுதியுடன் கடைசி மூச்சுவரை பற்றிக் கொண்டார். பண்டித வர்க்கத்தினரால் இழிசனர் வழக்கு என்று கொச்சைப் படுத்தியவர்களுக்கு எதிராக தன் கவித்திறமையால் சாடி கவிதைகளைப் படைத்தார். இழிசனர் மரபு வாதத்தில் ஊறி நின்று ஓரங்க நாடகத்தைச் செய்துகாட்டி அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தார்.

ஆறுமுகநாவலரைப் பற்றி மேல்  வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார். பண்டித பரம்பரையினரைச் சாடி புதுக்கவிதைப் பரம்பரையைச் செல்வராசன் முன்வைத்தார். யாழ்ப்பாணச் சாதி முறைக்கு எதிராக புதிய வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க அங்கத மொழியில் செல்வராஜன் சங்கநாதத்துடன் கவிதையால் எடுத்தியம்பியுள்ளார். சமுதாய அடக்குமுறைக்கு, அநியாயங்களுக்கு, மூடக்கொள்கைகளுக்கு எதிராக அவற்றை ஒழித்துக்கட்ட கவிதையால் சாடினார்.

ஈழத்துத் திரையுலகில் முக்கியமானவராக மேற்கிளம்பிய செல்வராசன் அவர்கள் தன்னோடு இணைந்து திரைப்படத்தில் நடித்த கமலினி என்பவரை திருமண பந்த்த்தில் இணைத்துக் கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்த நடித்த திரைப்படங்கள் ஈழத்தில் மாபெரும் வெற்றிப் படங்களாக புகழ் சேர்த்தன.  குறிப்பாக அத்தானே அத்தானே பாடல்  ஒரு காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும் சமூக அடக்கு மறைகளுக்கெதிராகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுத்த இம் மாபெரும் கவிஞன் 1995-10-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!