1910.11.21 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கில் பிறந்தவர். சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணிவரும் ஓவியர்களில் கங்காதரனவர்கள் குறிப்பிடத்தக்கவர். திருவுருவங்களை கண்ணாடியில் வரைவதில் பெயர்பெற்ற இவர் பரம்பரை பரம்பரையாக தமது குடும்பங்கள் ஆலயம் சார்ந்த சித்திர வேலைகளைச் செய்து வந்ததாகவும் தனது பேரனான சுப்பராயர் திரைச்சீலைகள் வரைவதில் வல்லவர் என்றும் அவரிடமிருந்து ஆரம்ப அறிவினைப் பெற்றதாகவும் பின்னர் எஸ்.ஆர்.கனகசபை அவர்களிடம் பரமேஸ்வராக்கல்லூரியில் ஆரம்பகாலப் பயிற்சியைப் பெற்றதா கவும் ஓவிய உத்தி முறையில் தேர்ச்சி பெறுவதற்கு எஸ்.ஆர். கேயின் போதனைகள் மிகவும் உதவியதெனக் குறிப்பிட்டுள்ளார்.
மரபுவழி ஓவியரான இவர் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் கைப்பணிப் போதனாசிரியராகப் பணியாற்றிய வேளையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பதவியிலிருந்து நீங்கி தொழில்முறைக் கலைஞராக வாழ்ந்தவர்.
தெய்வத்திருவுருவங்கள் வரைதல், கண்ணாடியில் வரைதல், திரைச் சீலைகள் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தனது சீவனோபாயத் தொழிலாகக்கொண்டு வாழ்ந்தவர். கண்ணாடி ஓவியங்களே இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இறைவனின் திருவுருவங்களை அலங்காரமாகக் காண்பதே மரபு. அந்தவகையில் இவரது கண்ணாடி ஓவியங்களில் உள்ள இறைவனின் திருவுருவங்கள் அலங்காரப் பண்புடையன வாகக் காணப்படுகின்றன. உணர்வோடும்-பார்வையோடும், பார்வையிலும்- படுக்கையிலும் வளர்த் தெடுக்கப்பட்டதே இக்கலை எனக்குறிப்பிடும் இவர் கலை ஆன்மீகத்திற்குரியது. உலகியலிற்குரிய தல்ல. கலாரசனை என்பது பக்திச்சுவையே. ஆன்மீக நிலைப்பட்ட கலை ஆளுமையினால் கலைஞன் மற்றவர்களைத் தன்பால் ஈர்க்கின்றான் எனக்கருதி வாழ்ந்த இவர் மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற சமகாலக் கலைஞர்களில் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1994.05.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்