எம்.என்.செல்லத்துரை என தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி மிருதங்கக் கலையில் தடம்பதித்;த இவர் யாழ்ப்பாணம்-கந்தர்மடம் என்ற இடத்தில் 1919.11.17 ஆம் நாள் பிறந்து கள்வியங்காடு என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தவர். கநதர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை யிலும், செங்குந்தா இந்துக் கல்லூரியிலும் கல்விகற்ற காலங்களில் மிருதங்கக் கலைமீது நாட்டங்கொண்டு பயின்று மேலதிக பயிற்சிக்காக தமிழ்நாட்டின் மயிலாப்புர் கலாசாலையில் இணைந்து நான்கு வருடங்கள் பயின்று மயிலாப்பூர் ஆஞ்சநேயரது ஆலயவாசலின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். பின்னர் தனது தாய்நாட்டின் நல்லூர் வீரமாகாளி அம்மன் முன்னிலையிலும் அரங்கேற்றம் நிகழ்த்தினார். தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் 1948 ஆம் ஆண்டில் வெளியான “இராமதாஸ்” என்ற திரைப்படத்திற்கு மிருதங்கம் வாசித்தது மட்டுமல்லாது, அப்படத்திலும் நடித்தவர். 1963 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் லயவின்னியாசம் வாசித்து மிருதங்க இசையினை வானலைகளில் தவழ வைத்தவர். மிருதங்கக் கலையினை வளர்ப்பதற்காக “நந்தி” என்னும் பெயருடைய இசை மன்றத்தினை ஆரம்பித்து 1973 ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மிருதங்க இசை விழாவினை நடத்தி வந்தவர். கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் பகுதிநேர மிருதங்க விரிவுரையாளரா கவும் பணியாற்றிய இவர் கிருபானந்தவாரியார் போன்ற மகாவித்து வான்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்த பெருமையுடைய வர். வட இலங்கை சங்கீத சபையின் உறுப்பினராக 1990 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பணியாற்றியவர். பெண்ணியல் வாதம் பேசப்பட்ட காலத்தில் துணிந்து பெண்களுக்கு மிருதங்கத்தினைப் பயிற்றுவித்து பெண் கலைஞர்களை உருவாக்கிய பெருந்தகையாளன். இவரிடம் மிருதங்கம் கற்று இன்று மிருதங்க ஆசிரியைகளாகப் பணியாற்றி வரும் மிருதங்க ஆசிரியை ஜெயமணிதேவி, மிருதங்க ஆசிரியை திருவேணி, கவிதா, இவருடைய மூத்த புதல்வியான கிருதகௌரி ஆகியவர்களை இத்துறையில் உருவாக்கி அரங்கேற்றமும் செய்து வைத்தவர். இவரிடம் பயின்ற கலைஞர்கள் உலகெங்கும் இயங்கு நிலைக் கலைஞர்களாக சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட பல காலமாக யாழ். மண்ணில் புகழ் நிறைந்த மிருதங்க வித்துவானாகவும் மிருதங்கப் பேராசானாகவும் வாழ்ந்த இவரிடம் பயின்ற மாணவர்களது பட்டியல் நீண்டது. தனது அவைக்காற்றுகைத் திறன் மூலமும் பண்புசார் கற்பித்தல் திறன் மூலமும் மிருதங்கக் கலைக்கு இலங்கையில் புத்தெழுச்சியூட்டியவர். இன்று பிரபல வித்துவான்களாகத் திகழும் யாழ். பல்கலைக் கழக முன்னாள் இசைத்துறை விரிவுரையாளரும் தற்பொழுது லண்டனில் மிருதங்கக் கலையின் புகழ்பரப்பும் அ.ந.சோமஸ்கந்தசர்மா, மிருதங்க வித்துவான் சுதாநந்தா, அமரர் ஆத்மானந்தா ஆகியவர்கள் இவரிடம் மிருதங்கம் கற்ற மாணவர்களாவர். இவரால் எழுதப்பெற்ற “மிருதங்க சஞ்சீவி” என்ற நூல் மிருதங்கக் கலையின் பாடங்களை ஒழுங்கு முறையில் கற்பதற்குரிய அரிய நூலாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இவருடைய கலைச் செயற்பாடுகளுக்காக மாவிட்டபுரம் இந்து இளைஞர் மன்றத்தினரால் தங்கப்பதக்கமும், அளவெட்டி அமரர் விநாசித்தம்பி புலவரவர் களால் மிருதங்கமணி , நல்லை ஆதீன முதல்வரால் கலாநிதி, அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தினரால் இசையரசு, இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் போன்ற விருதுகள் வழங்கிப் பாராட்டப்பெற்றவர். 2007.10.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.