Monday, May 27

விநாயகமூர்த்தி,ஐயாத்துரை

0

இயற்கை வனப்பும் தொன்மையும் கொண்ட ஈழவள நாட்டின் வடபால் சைவமும் தமிழ் மணமும் வீசகின்ற எழில்மிகு யாழ்ப்பாணத்திலே கற்பகச் சோலைகளும், கனிகளும், கடல் வந்து தாலாட்டும் எழில்மிகு கரையோரங்களும் கவின்மிகு விளை நிலங்களும் வானுயர் கோபுரமுடைய தெய்வத் திருத்தலங்களும் நிறைந்த வடமராட்சிப் பிரிவிலே சான்றோர் பலரும் வாழ்ந்து சால்பு நெறி நின்று தடம் பதித்துச் சென்ற உடுப்பிட்டிக் கிராமத்திலே ஐயாத்துரை சரஸ்வதி தம்பதியினரின் முத்த மகனாக விநாயகமூர்த்தி 1959-01-26 ஆம் நாள் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியனை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்று உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து உடுப்பிட்டி அமெரிக்கன்மி~ன் கல்லூரியில் சித்திர பாட ஆசிரியராக தன்னை மேம்படுத்தினார்.

இயல்பாகவே சித்திரக் கலையில் நாட்டமும் அதில் பற்றுதலும் இருந்தமையால் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த சித்திரக் கலைஞர் “Artist மணியத்திடம்” முறையாகச் சித்திரம் பயின்று அவரது விருப்பிற்குரிய மாணவன் ஆனார். இக்கால கட்டத்திலேயே யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கு, ராஜா திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான பிரமாண்ட விளம்பர பதாதைகளை (Cutout)  வரைந்தார்.

இவரது கலையார்வம் காரணமாக காங்கேசன்துறை புகைப்படக் கலையகத்தில் புகைப்படக் கலை பயின்று இதில் தேர்ச்சியும் நிபுணத்துவமும் பெற்ற நிலையில் மன்னார் நித்திய சித்திரா புகைப்படக் கலையகத்தில் பணியாற்றி வந்தார். 1985 ஆம் ஆண்டு தனக்கென தனியான புகைப்படக் கலையகத்தினை கண்டி வீதி, கொடிகாமத்தில் A.V.M Studio  என்ற பெயரில் ஆரம்பித்தார்.
1978 ஆம் ஆண்டு கொடிகாமம் கந்தையா தங்கம்மா தம்பதியரின் புதல்வியான கங்காதேவியை திருமணம் செய்தார்.

இவரது தந்தையார் ஒரு வில்லிசைக் கலைஞன். ஹார்மோனிய வித்துவான். வானம்பாடி என்னும் பெயரில் வில்லிசைக்குழுவினை நடத்தி வந்தவர். இவரும் தந்தையாருடன் இணைந்து ஒரே மேடையில் வில்லிசை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இவர்களது வில்லிசை நிகழ்வுகள் அரங்கேறி வந்தன.

சிறுவயது முதலே கலையார்வம் கொண்ட  AVM அவர்கள் பாடசாலை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு பாத்திரமேற்று நடித்து பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தில் ஆற்றுகை செய்யப்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளாக சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், ஏழுபிள்ளை நல்லதங்காள், அருணகிரிநாதர், தியாகி திலீபன் வரலாறு, தென்னையின் பயன்பாடு என்பனவற்றினைக் குறிப்பிடமுடியும்.

சித்திரம், வில்லிசை என்றில்லாமல் நாடகக் கலையிலும் தன்னை தடம் பதித்துக் கொண்டவர். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் சத்தியவானாகவும் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தில் ஆரியப்பூமாலையாகவும் அரிச்சந்திர மயானகாண்டத்தில் விசுவாமித்திரனாகவும் பாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றார்.

ஈழத்துச் சினிமாவிலும் தன் பெயரை நிலை நாட்டினார். குறுந்திரைப்படம், திரைப்படம் என இவரது சாதனைப் பட்டியல் நீண்டு செல்லும். இவர் நடித்து விரைவில் வெளிவரவுள்ள யாழ்தேவி திரைப்படமும், செல்வா திரயரங்கில் வெளியிடப்பட்ட நண்பி குறுந்திரைப் படமும் குறிப்பிடத்தக்கன. கலையுலகில் வரலாறு பதித்த  AVM அவர்கள் 2019-02-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

                                                                   தென் இந்திய நடிகை  பூஜாவுடன்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!