Sunday, February 16

நடராசா,பொன்னையா (அண்ணா)

0

யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் தாய்வழி வர்த்தகத் தொழிற்றிறனும், தந்தை வழி ஆன்மீக நாட்டமுடையவராக பொன்னையா சின்னம்மா தம்பதியருக்கு இரண்டாவது புத்திரனாக 1937-10-19 ஆம் நாள் பிறந்தவர்.தனது ஆரம்பக்கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் உயர் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பெற்றவர். மேலும் கல்வி பெறுவதற்கு வீட்டின் சூழல் ஒத்துவராமையினால் தொழில்தேடும் முயற்சியில் ஈடுபடலானார். இயல்பாகவே தாய்வழிவந்த வர்த்தகத் தொடர்பு இவரை வர்த்தக வழியில் செல்ல வைத்தது. பல தொழில்களைச் செய்து பார்த்தார் எதுவும் பலனளிக்கவில்லை. மனமுடைந்தவராக அண்ணாமலைப் பரியாரிடம் சென்றார். அவர் இவரது மனக்கவலையை உணர்ந்து மூலிகைகளைப் பயன்படுத்தி பற்பொடி வியாபாரம் செய்யுமாறு வழிகாட்டி ஆசீர்வதித்து அனுப்பினார். அச்சித்தரின் வாக்குப்படி மூலிகைகளைப் பயன்படுத்தி வீட்டில் பற்பொடி தயாரித்து அண்ணாமலைச்சித்தரின் ஆசியுடன் அவரது பெயரிலேயே அண்ணாமலையார் பற்பொடி என வியாபாரத்தினை ஆரம்பித்தார். செவ்வனே நடைபெற்று வந்த வியாபாரத்தின் வருமானம் போதாமையினால் வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தவேளையில் மில்க்வைற் தொழிலதிபரது வழிகாட்டலில் கோப்பி வியாபாரத்தினையும் ஆரம்பித்தார். இவரது வழிகாட்டலில் வீட்டிலிருந்த உபகரணங்களைப் பயன்படுத்தி வீட்டார் எல்லோரும் சேர்ந்து இரவிரவாக கோப்பி வறுத்து அரைத்து பொதி செய்வார்கள். அண்ணாமலை ஆயுள்வேத பற்பொடியைத் தொடர்ந்து அவர் நினைவாக அண்ணா கோப்பி எனப் பெயரிட்டு கோப்பி தயாரிக்கப்பட்டது. பற்பொடியையும், கோப்பியையும் யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி முதலான இடங்களுக்கெல்லாம் சயிக்கிளில் சென்று வியாபாரம் செய்யப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வியாபாரம் காலப்போக்கில் பல்கிப்பெருகி ஆலம் விழுதுபோல் பரவி வேரூன்றி இம் மண்ணில் தானும் உயர்ந்து பல ஏழைக்குடும்பங் களையும் வாழவைத்தார். 1959 இல் வீட்டில் உள்ளவர்கள் உரலில் கோப்பியை இடித்துப் பொதி செய்து சயிக்கிளில் ஊர்ஊராகச்சென்று வியாபாரத்தினை நடத்தினர். படிப்படியாக அண்ணாமலையார் என்றபெயரில் விற்பனையாகிய பற்பொடி, கோப்பி என்பனவற்றை அருளாசி வழங்கி ஆரம்பித்து வைத்த அண்ணாமலைப் பரியாரியாரிடம் பெயர் மறையாதவாறு அண்ணா தொழிலகமாக மாற்றமடைந்தது. துவிச்சக்கர வண்டியில் நடத்தப்பட்ட வியாபாரம் நுலு 675 என்னும் ; பதிவிலக்கமுடைய காரில் அண்ணா  தொழிலக உறப்தத்திகளைச் சுமந்து சென்றது. பின்னர் அண்ணா வானாக மாறி முழு இலங்கையருக்கும் தரமான கோப்பியினையும், மூலிகையிலான பற்பொடியினையும் வழங்கி கைத்தொழில் ஸ்தாபனமாக உயர்ந்து நிற்கின்றது. தற்போது கோப்பி மட்டுமன்றி, அண்ணா வறுத்த அரிசிமா, ஆட்டாமா, கடலைமா, உழுந்தமா, அண்ணா ஊதுபத்தி, அண்ணா நீலம் எனப் பல்வேறு பொருள்களின் உற்பத்தி நிறுவனமாக மிளிர்வதுடன் அண்ணா பண்ணை உற்பத்திகளும் குறிப்பிடத்தக்கன. அண்ணா ஊதுபத்தி உற்பத்திக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இணுவில் மட்டுமன்றி அரியாலை, பண்டத்தரிப்பு, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களில் கிளைகளை அமைத்து வௌ;வேறு தொழில்நுட்பங்களுடன் துர்க்கா பத்தி, கோகுல் பத்தி, மதுரங்கா பத்தி, சாயிசுகந்த பத்தி, ஜெயந்தி பத்தி என விதவிதமான ஊதுபத்திகளை உற்பத்தி செய்து அச்சூழலில் வாழ்ந்த இருபத்தைந்திற்கு உட்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கினார். இணுவில் கிழக்கு மருதனார்மடத்தில் அமைந்துள்ள இவரது விவசாயப் பண்ணையில் கோழிப்பண்ணை, பன்றிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, முயற்பண்ணை, தாராப்பண்ணை என விரிவாக்கம் செய்து தீவன உற்பத்திகளிலும் வெற்றிகண்டார். இவருடைய வாழ்க்கைத்துணைவியார் இராசமலர் அவர்கள் இவருடைய முயற்சிக்கு ஊக்கமும் பக்கபலமுமாக இருந்தவர். இவருடைய இரு புதல்வர்களில் மூத்தவர் திவாகரன் தந்தையாரின் தொழிலகத்தினை நடத்திவருகின்றார். இளையவரான கண்ண தாசன் கொழும்பிலுள்ள அண்ணா இன்டர்நெஸ்னல் நிறுவனத்தினை வழிநடத்தி வருகின்றார். ஆன்மீக நாட்டம் கொண்ட இவர் தன்னுடைய அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் கைத்தொழிலில் சாதனை படைத்துள்ள மாமனிதனாவார். இத்தகைய சாதனையாளர்களது வரலாறு  மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான பாதையாகவும் அமைந்திருக்கும் என்பது குன்றினில் வைத்த விளக்குப்போன்றதாகும். 2015-05-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

                                                                        அண்ணாவின் பெற்றோர்.

ஆத்மஜோதி முத்தையாவுடன்                                                                      ஆநு.வை.நாகராஜன் அவர்களுடன்                                                                            வீரமணிஐயாஅவர்களுடன்                                                                     தாயாருடன்அண்ணாவும்  தம்பியும்.                                                        அண்ணாவின்மூன்றுமாடி கோழிப்பண்ணை                                                                        நாற்றுமேடைப்பண்ணை                                                                                    அலுவலகத்தில்அண்ணா

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!