மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக் கொண்டு இசை கற்றார். இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றுப் பல சேவைகளையாற்றினார். 1948 இல் வடஇலங்கை சங்கீத சபையின் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பரீட்சைகளில் தோற்றி சித்திபெற்றார். 1953 இல் மாவிட்டபுரத்தில் பிருந்தகானாலயா என்ற இசைப் பாடசாலை ஒன்றினை நிறுவி வாய்ப்பாட்டிசை, வயலின், வீணை ஆகிய கலைத்துறைகளில் மாணவர்களை உருவாக்கி வந்தார். இவர் வயலின், வீணை, வாய்ப்பாட்டிசைக் கலை ஆகிய மூன்றிலும் வல்லவராகத் திகழ்ந்தார். 2001 இல் கானமிருதவர்ஷினி என்ற சங்கீத சாத்திர நூலையும், 2008 இல் கந்தன் கீர்த்தனை என்ற நூலையும் 2011 இல் தெய்வீகக் கீர்த்தனைகள் – பகுதி 1 என்ற நூலையும் இசையுலகிற்கு வழங்கியுள்ளார். இவருடைய இசைக் கலைச் சேவையைப் பாராட்டி கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இசைத்துறையில் வயலின் இசையால் மட்டுமன்றி நாட்டிய நாடகங்களையும் மேடையேற்றிப் புகழ் பெற்ற இவர் 2012.02.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.