Saturday, October 5

கதிரவேற்பிள்ளை, கு. (வைமன்)

0

உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், சிவகாமி ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். இளமையிலேயே ஆங்கிலத் திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தார். 1841ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். செமினறியில் தனது ஆசிரியராக இருந்த வைமன் என்பவரின் பெயரைத் தனது முதல் பெயராக சேர்த்துக் கொண்டார். இதனால் இவர் வைமன் கு.கதிரவேற்பிள்ளை என அழைக் கப்பட்டார். கல்வியை முடித்துக் கொண்ட கதிரவேற்பிள்ளை 1848 முதல் 1851 வரை வட்டுக் கோட்டை செமினரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1851 ஆகஸ்ட் 1 இலிருந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் 1853 மே 6 அன்று “லிற்ரரி மிரர்” (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1855 ஏப்ரல் 24 அன்று ஆசிரியத் தொழிலில் இருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடலானார். லிற்ரறி மிரர் பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின் திறமையை அறிந்து கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் அவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். சட்டத்துறையில் மேலும் கற்க விரும்பி கொழும்பில் இருந்த தோமசு ட்றஸ்ட் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார். 1858 மே 5 இல் கொழும்பில் சட்டவறிஞராக சத்தியப் பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 1863 பெப்ரவரி 6 அன்று “சிலோன்பேட்ரியாட்” (ஊநலடழn Pயவசழைவஇ தேசாபிமானி) என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்துநாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார். இலங்கை சட்டவாக்கப்பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராக பணியாற்றியவர். இலங்கையின் பிரித்தானிய ஆளுநராக இருந்த சேர் வில்லியம் கிரெகரி இவரை 1872 மே 21 அன்று ஊர்காவற்றுறை நீதிபதியாக நியமித்தார். 1884 ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கதிரவேற்பிள்ளை 1898 நவம்பரில் தனது அரசபணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் நீதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் தமிழ்மொழியில் பேரகராதி ஒன்றினைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் இவருக்கு சொற்குறிப்புகளை வழங்கியுதவியுள்ளார். உடுப்பிட்டி ஆறுமுகம்பிள்ளை, ஊரெழு சு.சரவணமுத்துப்புலவர் ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவியுள்ளனர். கதிரவேற்பிள்ளையால் 1904 ஆம் ஆண்டில் வண்ணார் பண்ணை வி. சபாபதிஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட தமிழ்ச்சொல் அகராதி அகரவரிசை வரையுமே கொண்டிருந்தது. பேரகராதியைத் தொகுத்து முடிப் பதற்கிடையில் அவர் காலமாகிவிட்டார். இவர் “தர்க்கசூடாமணி” என்ற நூலை 1862 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். யாழ்ப்பாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் இவர் 1885 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்றை விலைக்கு வாங்கி குடியேறினார். இவர் வாழ்ந்த வீடு “வைமன் வீடு” எனவும், வீடு அமைந்திருந்த வீதி “வைமன் வீதி” எனவும் பெயர்பெற்றது. இப்பெயர் இன்றும் வழக்கில் உள்ளது. 1904-04-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!