1928-07-24 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கற்றவர். கல்லூரியில் கற்கும் காலத்தில் உதைபந்தாட்டக் குழுவின் பந்துக் காப்பாளராக அணியில் இடம்பெற்றார். இரண்டாவது உலகமகாயுத்த காலத்தில் தனது பதினேழாவது வயதில் இராணுவத்தில் இணைந்து தியத்தலாவையில் பயிற்சி பெற்று மூன்று வருடங்கள் பணியாற்றினார். மேற்றிராணியாரின் பரிந்துரைக் கமைவாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு உலகமகாயுத்தத்தில் பணியாற்றியமைக்காக மெற்றிக்குலேசன் பரீட்சையின்றி எழுதுவினைஞராக நியமனம் பெற்று காட்டு இலாகாவில் சேவையில் இணைந்தார். பின்னர் இலங்கையில் சேகுவரா கலவரத்தினை அடக்குவதற்காக இலங்கை இராணுவத்தில் இராணுவத் தொண்டராக இணைந்தார். இச்சந்தர்ப்பத்தில் கப்டனாக நியமனம் வழங்கப்பட்டது. 1977 இல் வெலிமடையில் பணியாற்றிக் கொண்டதன் பின்னர் தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் என்னும் அமைப்பினை நிறுவுவதற்கு முன்னின்றுழைத்து அவ்வமைப்பினை நிறுவி அதனூடாக யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டத்தினை வளர்த்தெடுப்பதில் அரும் பணியாற்றிய இவர் 2009-09-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.