Sunday, October 6

மகேஸ்வரன், சிவபாதசுந்தரம் (பேராசிரியர் )

0

1942-03-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை கல்வி பயின்றவர். இவர் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுத்துறைகளிலும் சிறந்து விளங்கியவர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவிலும், கிரிக்கெட் அணியிலும் முக்கிய பங்கு வகித்தவர். சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளராக விளங்கிய அவர் துடுப்பாட்டத்திலும் வல்லவராக விளங்கினார். பேராதனைப் பல்கழைலக்கழகத்தில் விஞ்ஞானமாணியாக சிறப்புத்தரத்தில் பட்டம் பெற்று அப்பல்கலைக் கழகத்தில் இரசாயனவியல் விரிவுரையாளராக இணைந்து பேராசிரியராக உயர்ந்தவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராக அவர் பணியாற்றினார். யாழ் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் இரசாயனவியல் பிரிவை உருவாக்கி அதனை செவ்வனே இயங்கவைத்து பல கற்கை நெறிகளைப் புகுத்தி மாணவர்களை தனது அன்பினாலும் கண்டிப்பாலும் வழிநடத்தினார். விசேட திறமைச் சித்தி அடைந்த மாணவர்களை தனது சிபார்சின் மூலம் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு ஏற்பாடுகளை செய்துதவினார். விஞ்ஞான பீடத்தில் இருமுறை பீடாதிபதியாக இருந்து அதன் வளர்ச்சிக்காக தனது முழுநேரத்தினையும் செலவிட்டார். மேலும் பல்கலைக்கழக மூதவை, பேரவை இரண்டிலும் உறுப்பினராக இருந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தனது அறிவுரைகளை வழங்கி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பேருதவியாக விளங்கினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் கட்டடம் அவரும் அவருடைய துணைவியாரான பேராசிரியை இராஜேஸ்வரியினாலும் கண்காணித்துக் கட்டப்பட்டதாகும். பேராதனையில் சகல வசதிகளுடன் வாழக்கூடிய நிலைமையிருந்தும் யாழ்ப்பாண மண்மீதும் மாணவர்கள் மீதும் இருந்த பற்றுக்காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். 1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் விஞ்ஞானபீடம் அமைக்கப்பட்டபோது பலவித அசௌகரியங்கள் மத்தியில் தமது கல்விப்பணியை ஆரம்பித்தவர்.

வட்டுக்கோட்டையிலிருந்து இராசாயனவியல் பகுதி திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டபொழுது அதனை மிகச் சிறந்தமுறையில் கடடியெழுப்பினார். இன்று இரசாயனவியல்துறை அவருடைய அழியாச் சின்னமாக விளங்குகின்றது. இப் பெரியார் 1998-02-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!