இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பணியாற்றிய அறிஞர்களுள் நியாய சிரோமணி, வித்யாசாகரம் பிரம்மஸ்ரீ. கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள, திருச்சி மாவட்டத்தில் 05.05.1925 ஆம் ஆண்டு, பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நியாய சிரோமணி பட்டம் பெற்றவர். காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த மடத்தில், எட்டு ஆண்டு வேதங்களை நன்கு கற்றவர். மிகச்சிறந்த சமஸ்கிருத விற்பன்னர். அம் மொழியிலேயே சரளமாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் உள்ளவர். சமஸ்கிருதம் என்றும் ஜீவனுள்ள மொழி என்பதை நன்கு எடுத்துக் காட்டியவர். இவர் 1952 இல் இலங்கைக்கு வந்து இறுதிக்காலம் வரை யாழ்ப்பாணத் திலேயே தங்கியிருந்து சமயப்பணியிலும் சமஸ்கிருதப் பணியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். 1974 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அரங்கில் வேதபாராயணம் செய்து நிகழ்வை ஆசீர்வதித்த பெருமைக்குரிய வர். இவர் இலங்கையில் அந்தணச் சிறுவர்களைச் சிவாச்சாரியர்களாக்கும் பணியுடன் மட்டும் நின்றுவிடாது, சமஸ்கிருத கல்வி பரம்பலுக்கும் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார். இலண்டன் பல்கலைக்கழக, இலங்கை பல்கலைக்கழக பட்ட, பட்டப்பின் படிப்பு மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் பலருக்கும் சமஸ்கிருதம் கற்பித்துப் புகழ்பெற்றவர். அனைத்து மாணவர்கட்கும் சமஸ்கிருதம் நன்கு கற்பதற்கு, நியாயலகுவ்யாகரணம் என்னும் இலக்கண நூலையும் சமஸ்கிருதப்பயிற்சி நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். பஞ்சதந்திரம்- மித்ரபேதம், ருதுசம்ஹாரம் முதல் இரண்டு ஸர்க்கங்கள் ஆகியவற்றுக்கான தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புகள், விளக்கங்கள் எழுதியுள்ளார். கிரந்தலிபியிலே மாணவருக்கான ஆரம்ப நூலான நவநீத மஞ்சரியையும் நடேசர் ஸ்நபனம், விக்னேஸ்வர மஹோத்சவ பத்ததி முதலிய பத்ததி நூல்களையும் எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் சமஸ்கிருத மொழிக்காகவும், மாணவர்களுக் காகவும், அந்தணப் பெருமக்களுக்காகவும் அயராது உழைத்து 14.08.1998 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.