Tuesday, April 15

சுந்தரலிங்கம், செல்லப்பா

0

1895.08.19 ஆம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்தவர். இலங்கைத் தமிழ் அரசியல் தலைமையும், கல்விமானும், சட்டத்தரணியும் ஆவார். யாழ்ப்பாணம் பரியோவாண் கல்லூரி, கொழும்பு புனித யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்ஸ்போரட் பல்கலைக் கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்புப் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைத் தலைவராகவும் பணியாற்றிய இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று இலங்கை அரசாங்க சபைக்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறி;த்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட “இந்தியப் பாகிஸ்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்” நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்டபோது வெளிநடப்புச் செய்தார். 1959 ஆம் ஆண்டில் “ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் 1960 மார்ச் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தா. சிவசிதம்பரம் என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார். 1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார். சுந்தரலிங்கம் 1965 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவதாகவே வந்தார். 1970 தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகத்துடன் போட்டியிட்டுத் தோற்றார். 1985.92.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!