Sunday, October 6

சரவணமுத்து சுவாமிகள், வல்லிபுரம்

0

நீர்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவருக்கும் குப்பிழானைச் சேர்ந்த சின்னாச்சிப்பிள்ளை என்பவருக்கும் மகனாக நீர்வேலியில் பிறந்தவர். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆன்மீக நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். தெய்வபக்தி உடையவராகவும், சிவனடியார்களுடன் தொடர்புடையவராகவும், கோயில் வழிபாடு, புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல் என்னும் பழக்கவழக்கங்களை உடையவராகத் திகழ்ந்தார்.  திருநெல்வேலியைச் சேர்ந்த வைரமுத்து என்பவரது மகளான பொன்னம்மாவிற்கு மாற்றான் ஒருவனால் தீயசக்தி வேலைப்பாடுகளால் தீராத நோயை உண்டாக்கினான். இந்நோயினை சரவணமுத்து அவர்கள் விபூதி பூசி மாற்றினார். இதனால் அவர் மீது பக்திகொண்ட தந்தையார் மகளை சரவணமுத்து அவர்களுக்கே திருமணம்  செய்து வைத்தார்.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறைவன் மீது நாட்டமுற்ற சுவாமிகள் ஒருநாள் நடுநிசியில் எழுந்து தனது மனைவிக்கும் பிள்ளைகளிற்கும் திருநீறு பூசிவிட்டுத் தான் சந்நியாசம் போகின்றேன் என்று கூறிப் புறப்பட்டு விட்டார். பின்னர் திருவெற்றியூர் தலத்தில் இறைவனை வணங்கி நின்றார். அங்கேயே நீண்டகாலம் தங்கினார். ஒரு நாள் சிவராத்திரி தினமன்று நாலாம் சாமப் பூசை முடிந்ததும் சாது வடிவில் இறைவன் வந்து தீட்சை கொடுத்து ஆட்கொண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாய்நாட்டிற்கு எழுந்தருளி நேரே செல்வச்சந்நிதி முருகனடியை சரண்புகுந்தார். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தனது தாய்வீடான குப்பிழானில் சிறு கொட்டிலமைத்து அம்பிகையை வழிபட்டு வறிய மக்களின் பசியினைப்போக்கி வந்தார். இதற்காக அவர் வீடு வீடாகச் சென்று திருவோட்டில் அரிசி சேகரித்து அவ்வரிசியைக் கொண்டு அன்னதானத் தர்மத்தினைச் செய்து வந்தார். ஊர்மக்களும் இப்பணிக்கு தமது மனம் நிறைந்த பங்களிப்பினை வழங்கினார்கள். அற்புதங்கள் நிறைந்த சுவாமிகள் மக்களது பிணிகளை விபூதி பூசி தீர்த்து வைத்தார். தீராத கண்நோயினை செவ்விளநீர் ஓதிக்கொடுத்து மாற்றினார். இவர் தான் வாழ்ந்த குடிசையின் அருகில் அம்மனை வைத்து பூசித்து வந்தவர். 1938.03.01 ஆம் நாள் சரவணமுத்துச் சுவாமிகள் மகா சமாதியடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!