யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மயிலங்கூடலூர் என்ற இடத்தில் 1927-04-09 ஆம் நாள் பிறந்தவர். 1949 இல் குருநாகலை தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்று ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் 1967 இல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பதவியுயர்வு பெற்றுத் தமிழ்ப் பாடநூற் பகுதித்தலைவராகவும் பதிப்பாசிரியராகவும் கல்வி வெளியீட்டுத்திணைக்களத் தமிழ்ப் பாடநூல் ஆலோசகராகவும் கடமையாற்றியவர்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிராகிருதம் பாளி, சிங்களம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி உடையவர். இலங்கைப் பாடசாலைகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் தமிழ்மொழிப் பாடநூல்கள் தொடர்பாக 1967-1985 காலப்பகுதிகளில் இலக்கிய நூல்களின் வெளியீட்டாளராகக் கடமையாற்றியவர். சிங்களப் பத்திரிகைகளான எத்த, திவயின, சாகித்தியகலா, லங்காதீப ஆகியவற்றிலும், மஞ்சரி, சாவி ஆகிய தென்னிந்தியப் பத்திரிகைகளிலும், திருவள்ளுவரும் சாணக்கியரும், திருக்குறள் மாநாட்டுச்சிறப்பு மலர், வெசாக்மலர் போன்ற சஞ்சிகைகளிலும் கட்டுரைகளைச் எழுதியவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள, பாளி இலக்கியங்களில் தமிழின் செல்வாக்கு , மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், ஆறாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் சிங்களத்தூது இலக் கியங்கள், மொரிசியசில் நடைபெற்ற ஏழாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிலப்பதிகாரமும் ஈழமும் என்பன போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இதனை விட இலங்கை பாசறைத்தரம் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த சேதுபந்தனம் என்ற சிறுகதைத் தொகுப்பு, சிறுவருக்கான கதைகள், தமிழ் சிங்கள வாசக நூல்களையும், வானொலி, தொலைக்காட்சிகளில் சமயப்பேச்சுக் களையும், உரையாடல்களையும், கவியரங்குகளையும், இலக்கியப்பேச்சுக்களையும், இசைச்சித்திரங்களையும் நிகழ்த்தியவர். சிறந்த நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசும், தமிழ்மணி, கொழும்பு தமிழ்ச்சங்கம் 2005 ஆம் ஆண்டில் சங்கச்சான்றோர் விருதும் இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருதும் வழங்கப்பெற்றவர். ஓய்வுபெற்ற பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தமிழ்ப் பாடநூற் பகுதியின் ஆலோசகராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தொழிலாளர் கல்விப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும், கொழும்புப் பல்கலைக் கழக சித்த வைத்தியப் பகுதியில் உயர்தமிழ் இலக்கண விரிவுரையாளராகவும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம், பண்டாரநாயக்க அனைத்துலக கல்வி நிலையம் கொத்தலாவலை பாதுகாப்புக்கழகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் விரிவுரை யாளராகப் பணியாற்றியவர். 1949 இல் பாலபண்டித பரீட்சையில் சித்தியும் 1966 இல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பீ.ஏ சித்தியும் பெற்றவர். 2013-18-02ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.