Sunday, February 16

நாகலிங்கம், செல்லப்பா

0

1893-10-25 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். செ. பஞ்சலிங்கம் மருத்துவராகவும், செ. அமிர்தலிங்கம் இலங்கை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், செ. தியாகலிங்கம் பிரபலவழக்கறிஞ ராகவும் இருந்தவர்கள். யாழ் பரியோவான் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற நாகலிங்கம் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று 1917 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார்.

இலங்கை வழக்குரைஞர் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாகலிங்கம் 1937 ஆம் ஆண்டு வரை கொழும்பில் சட்ட வல்லுநராகப் பணியாற்றினார். 1938 இல் கொழும்புக்கான மேலதிக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1941 முதல் கண்டி மாவட்ட நீதிபதியாகவும், 1946 இல் பதில் சட்டமா அதிபராகவும் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் மன்னார் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் பதில் சட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று இலங்கை அரசாங்க சபையின் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், அமைச்சரவைப் பதவிக்கு ஒப்பான தகுதியான நீதித்துறைக் குழுமத்திற்கு தலைவராகவும் ஆனார். 1947 இல் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆனார். இப்பதவியை ஏற்ற முதலாவது தமிழர் இவராவார். பல தடவைகள் இவர் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்திருக்கிறார். 1954 ஆம் ஆண்டில் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு நாட்டில் இல்லாதபோது பதில் மகா தேசாதிபதியாகப் பதவியில் இருந்தார். கொழும்பு இந்துக் கல்லூரியை நிறுவிய “இந்து கல்விக் கழகத்தின்” ஆரம்பகால உறுப்பினராகவும் நாகலிங்கம் சேவையாற்றினார். 1958-10-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!