1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை தனது உறவினர்களான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த பக்கிரிசாமிப்பிள்ளை, உருத்திராபதி நடராஜா ஆகியோரிடம் முறைப்படி பயிலத்தொடங்கியவர். மேலும் தமிழ்நாட்டின் சிறந்த நாதஸ்வரக் கலைஞர்களான திருச்சறை கிருஸ்ணமூர்த்தி அவர்களைக் குருவாகக் கொண்டு தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் நாதஸ்வரக் கலையைப் பயின்றவர்.
மேலும் தமிழ்நாட்டின் மூத்த சிறந்த தவில், நாதஸ்வர வித்துவான்களை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து பல்வேறு இடங்களிலும் மேளக் கச்சேரிகளை நடத்திய பெருமைக்குரியவர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் ஆதீன வித்துவானாக பல வருடங்கள் பணியாற்றி கலை வளர்த்தவர். மாவைக்கந்தன் ஆலயத்தின் நாதஸ்வரக் கலைப்பாரம்பரியத்தின் நான்காவது தலைமுறையைப்பேணும் வாய்ப்புப் பெற்றவர். இக்கலையின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்குமாக மாவிட்டபுரத்தைத் தளமாகக் கொண்டு “இசைவேளாளர் சங்கம்” என்ற ஒரு சங்கத்தினை நிறுவி அதன் தலைவராகப் பலகாலம் பணியாற்றியவர். இச்சங்கத்தினூடாக “இசையாளன்” என்ற மாதாந்த இசைச் சஞ்சிகை ஒன்றினையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். இவருடைய இத்தகைய பணிகளுக்காக வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை கலைச்சுடர் விருதினையும், கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும் வழங்கிப் பெருமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.