1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும், தமக்கு அண்மையிலுள்ள பாடசாலையில் கற்று பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியினையும் கற்றார். தந்தையாரது தோட்டவேலைகளில் உதவியாகவும் நல்லூரானின் திருவடியில் சரண்புகுந்தவராகவும் தனது இளமைப்பருவ காலத்தில் வாழ்ந்தார். இந்துக் கல்லூரியின் பின்னர் ஆங்கிலக் கல்வியை கேம்பிறிஜ்சீனியர் வரை கற்று 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் சித்தியெய்து இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றுத் தனது ஆசிரியர் சேவையில் ஈடுபடலானார்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சிக்காக இணைந்து கொண்டவேளையில் அங்கு குருகவி வே.மகாலிங்கசிவம் அவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பால பண்டித, பண்டித பரீட்சைகளில்தேறி 1941 ஆம் ஆண்டில் தமிழ்ப் பண்டிதரானார். இப் பரீட்சைகளுக்காக சமய இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அறநூல்களையும் தவத்திரு வடிவேல் சுவாமிகளிடம் கேட்டுத் தெளிவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1941-10-25 ஆம் நாளன்று அன்னம்மா என்பவரைத் தனது வாழ்க்கைத் துணைவியாராக்கிக் கொண்டார். சென்னைப் பல்கலைக்கழக புலமைப்பரிசிலின் உதவியால் 1943-1944 காலத்தில் தமிழ்மொழி பற்றிய ஆய்வினைச் செய்து டீ.ழு.டு பட்டம் பெற்றார். யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியது மட்டுமல்லாமல் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றி கல்வி அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றார். கல்விச் சேவைகளோடு ஆன்மீகப் பணிகளிலும், இலக்கிய, இசை, நாடகத்துறைகளிலும் இவருக்கு ஆற்றல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்கால யாழ்ப்பாணத்து மேடைகளில் இவரது ஆற்றல்கள் பெரிதும் படித்தவரையும், பாமரரையும் கவர்ந்திருந்தது. இவருடைய உரையை மீண்டும் எப்போது கேட்கலாம் என்ற ஆவலைத் துண்டுமளவிற்கு நகைச்சுவையாகவும் மேலைத்தேச இலக்கியங்களிலிருந் தும், இலக்கிய புராணங்களிலிருந்தும் தக்க எடுகோள்களைக் கையாண்டு சொற்பொழிவாற்றுவதில் வல்லவராயிருந்த இவர் 1996-02-16 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.