யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின் அபிமான அறிவிப்பாளராக ஜொலித்த இவர் இலங்கை வானொலியின் புகழை உலகெங்கும் பரப்பியவர்களில் முக்கியமானவர். இவரது காலத்திலேயே இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக ஒலிபரப்பு சுடர்விடத்தொடங்கியது. தனது இனிய குரலால் மட்டுமன்றி, இனிய இதமான தொகுப்புகளாலும் இசைத்தட்டு களிடையே தனித்துவத்தினை எடுத்துக்காட்டினார். திரைப்படங்களின் பாடல்களையும், வசனங்களையும் ஒலிபரப்பி விளம்பரங்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்தார். பல புதிய நிகழ்ச்சி களான திரும்பிப்பார், ஜோடி மாற்றம், குரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து தரமான முறையில் ஒலிபரப்புக்கலையை முன்னெடுத்துச் சென்று பல தரமான வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமையுடையவர்.