Saturday, February 1

குகராஜா, வி.எம்

0

1952.02.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளான் என்ற இடத்தில் பிறந்த இவர் நாடக அரங்கக் கல்லூரியுடன் இணைந்து பல காத்திரமான நாடகப் படைப்புக்களைத் தந்தவர். நாடக ஆசிரியராக, நடிகனாக, தயாரிப்பாளனாக, நெறியாளனாக எனப் பன்முக வகிபாகமுடையவர். மேடை, வீதி, வானொலி நாடகங்களிலும், குறுந்திரைப்படம் தயாரித்தலிலும், அவற்றிற்கான பிரதிகளை எழுதுவதும், நெறிப்படுத்துவதும் இவருடைய ஆழமான செயற்பாடுகளாகும். நவீன நாடக எண்ணக் கருவினடிப்படையில் பல நாடகங்களை அரங்கேற்றியவர். அந்தவகையில் குமணன், படலை திறக்கின்றார்கள், விலை போகாதவர்கள், அவளேன் கலங்குகின்றாள், பொழுதொன்று புலராதோ, புதிய சுவர்கள், பங்காளிகள், மனிதனும் மிருகமும் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். இவற்றில் மனிதனும் மிருகமும், அவளேன் கலங்குகின்றாள் ஆகிய நாடகங்கள் வானொலியில் தொடர் நாடகமாக ஒலிபரப்பப் பட்டமையும் 1980களில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சிச் சேவையில் புதிய சுவர்கள் என்ற நாடகம் ஒளிபரப்பப்பட்டமையும் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக வீதி நாடகத்தினை அறிமுகம் செய்து மக்களின் எதிரி, பாராயோபாரதமே, கசிப்பு ஆகிய வீதி நாடகங்களையும் தயாரித்தளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணுவிலில் அமைந்திருந்த காலிங்ரன் திரை அரங்கினில் மக்கள் கலையரங்கம் என்ற நிறுவனத்தினூடாக நாடகக்களப் பயிற்சிகளையும், நாடக இலக்கிய அறிவுகளையும் நாடக ஆர்வலர்களுக்கு பயிற்சியளித்தவர். சிலந்திவலை, கதையிதுதான், தியாகங்கள் ஆகிய வீடியோ திரைப்படங்களும் இவரால் தயாரிக்கப் பட்டுள்ளன.அத்துடன் கவிதை, பாடல்கள், கதைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கியவர். நாடக அரங்கக் கல்லூரியின் வெளியீடான “அரங்கம்” நாடக சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய வர். மனிதனின் உண்மையான வாழ்வின் இருப்பினை தனது அரங்கினூடாகத் தேடியவர். குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தார்சீசியஸ், பேராசிரியர் சி.மௌனகுரு, கலாநிதிக. சிதம்பரநாதன் ஆகியவர்க ளது நாடகத் தயாரிப்புகளில் நடித்தது மட்டுமல்லாமல் இணைந்து செயற்பட்டவருமாவார். 1987.10.13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!