Saturday, April 5

கலைவாணி திருநாவுக்கரசு

0

செல்வி கலைவாணி திருநாவுக்கரசு யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு மனைவி இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளாக 1962.03.06 ஆம் நாள் இம்மண்ணில் வந்துதித்தவர். கலைவாணி தனது ஆரம்பக்கல்வியை நல்லூர் சாதனா பாடசாலையில் பயின்றார். சிறு பராயத்திலேயே இப்பாடசாலையில் கல்வி கற்கும்போது நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இவரின் ஆற்றல் வெளிப்படத்தொடங்கியது. அதையடுத்து யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் பயின்று மேல்நிலைக் கல்விக்காக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் சென்று வர்த்தகவியல் (Commerce) பட்டதாரியானார். பல்கலைக்கழக கல்வி நிறைவேறியதைத் தொடர்ந்து சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகக் கடமையாற் றினார். அதனைத் தொடர்ந்து யாழ் தென்னை, பனை வள அபிவிருத்திச் சங்கத்தில் கணக்காளராகவும் பணியாற்றினார். பத்திரிகைத்துறை மீது இவர் கொண்ட ஆவல் காரணமாக மேற்குறிக்கப்பட்ட கணக்காளர் பதவியைத் துறந்து அக்காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட“ஈழநாதம்” பத்திரிகையில் பயிலுநர் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பத்திரிகைத் துறையிலே நடைபயின்று கொண்டிருந்த இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகப் பரீட்சையில் தெரிவாகி உதவி நூலகர் பதவியேற்றார். இக்காலகட்டத்தில், யாழ். பல்கலைக் கழகத்தின் வேண்டுதலுக்கேற்ப, கொழும்பு பல்கலைக் கழகத்தில் நூலகவியல், முதுகலைமாணி (MLS)  பட்டம் பெற்று, யாழ் பல்கலைக்கழகம் திரும்பினார். அக்கால கட்டத்தில், 1997ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் (Commonwealth Countries)  புலமைப் பரிசு பெற்று, இந்தியாவின் பெங்க;ர் பல்கலைக்கழகத்தில்நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானம் (Library and Information Science) துறையில் கலாநிதி (Ph.d) பட்டம் பெற்றார். அதன்பின்னர் தான் பிறந்த திருநாட்டிற்கே மீளவந்து யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், கல்வி என்னும் திரவியம் அடைய அலைகடல் தாண்டினார். இங்கிலாந்து சென்ற இவர் மேற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில்; (University of North London) பத்திரிகைத்துறை ஊடகவியலாளர்துறையில் கலாநிதி (Phd) பட்டம் பயின்று கொண்டிருந்த சில காலத்தினுள்ளேயே படைத்தவன் அழைப்பினிற்கு செவிசாய்த்து விண்ணுலகம் சென்றடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!