அறிமுகம்
நல்லம்மா வில்லியம்ஸ் 1880ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவர் 120 ஆண்டுகளுக்கு முன்பே தடைகளை உடைத்து இலங்கையின் மேற்கத்திய மருத்துவத்துறை யில் பணியாற்றிய முதல் தமிழ் பெண் மருத்துவரும் பெண்களின் வாக்குரிமைக்காக குரல் கொடுத்த முன்னோடியுமாவார். இன்றைய காலத்தில் பெண்கள் மருத்துவம், அறிவியல், அரசியல் என பல துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு பல சவால்களை எதிர்கொண்ட ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில், மருத்துவத் துறைக்குள் நுழைந்து மருத்துவராகவும் சமூக மாற்றத்துக்காவும் குரல் கொடுத்த இவர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றவராவார். மருத்துவச் சேவையால் மக்களுக்கு உதவி, பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த யாழ்ப்பாணத்தின் வரலாற்று சாதனையாளர் நல்லம்மா முருகேசு வில்லியம்ஸ் மருத்துவ வரலாற்றில் தடம் பதித்த முதல் தமிழ் பெண் ஆவார்.
யாழ்ப்பாணத்தில் தொடங்கிய பயணம்
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்ற இவர், சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். 1899ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவு தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று, இந்தியாவிலும் இலங்கையிலும் பெண் தேர்வாளர்களில் முதலிடம் பெற்றதற்காக கேசப்சந்திரசென் பரிசு பெற்றார். பெண்களின் கல்வி குறித்து சமூகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில், அவரது சாதனை அடுத்த கட்ட உயர்கல்விக்கான பாதையை திறந்தது.
மருத்துவ கல்விக்காக வெளிநாடு சென்றார்
1904ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வியை தொடங்கிய நல்லம்மா, 1909ஆம் ஆண்டு மருத்துவராக தகுதி பெற்றார்.
அதன்பின்னர் பிரித்தானியாவுக்கு சென்று எடின்பரோ பல்கலைக்கழக பெண்களுக்கான மருத்துவக் கல்வி நிலையத்தில் மேலதிக பயிற்சி பெற்றார். அங்கு மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைதுறையுடன் தொடர்புடைய மூன்று தொழில்முறை தகுதிகளை பெற்றார். டப்ளினிலும் நடைமுறை பயிற்சி மேற்கொண்டார்.
1911ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு திரும்பிய அவருக்கு, யாழ்ப்பாணம் இனுவிலில் அமைந்த மெக்லியோட் மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு, இலங்கையில் மேற்கத்தைய மருத்துவத்தை பயின்று நடைமுறைப்படுத்திய முதல் தமிழ் பெண் மருத்துவராக நல்லம்மா வில்லியம்ஸ் வரலாற்றில் இடம்பெற்றார்.
மருத்துவ சேவையை தாண்டிய சமூகப் பணி
நல்லம்மாவின் பணி மருத்துவமனையுடன் நின்றுவிடவில்லை. வறிய மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர் களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதிலும் அவர் அக்கறை செலுத்தினார். அவரது கணவர் சத்தியவாகீஸ்வர ஐயருடன் இணைந்து சமூக முன்னேற்றத்துக்காக பணியாற்றியதுடன், பெண்கள் கல்வி கற்பதற்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் அரசியல் உரிமைகளை பெறுவதற்கும் ஆதரவாக குரல் கொடுத்தார்.
பெண்களின் வாக்குரிமைக்காக எழுந்த குரல்
1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸின் முதல் அமர்வில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நல்லம்மா முன்மொழிந்தார். அக்காலகட்டத்தில் பெண்கள் அரசியலில் பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், அவரது நடவடிக்கை முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது. பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பழமைவாத கருத்துகளுக்கு மத்தியில், அவர்களுக்கும் கல்வி, தொழில் மற்றும் அரசியல் பங்கேற்பில் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் முன்னிறுத்திப்போராடினார்.
கல்வி:
1- யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
2- கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்று கேசப் சந்திர சென் பரிசைப் (Keshub Chandra Sen Prize) பெற்றார்.
3- மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) மருத்துவப் பட்டம் (LMS,1909) பெற்றார்.
4- இங்கிலாந்து எடின்பர்க் பெண்கள் மருத்துவப் பள்ளியில் (Edinburgh School of Medicine for Women) ‘l;upgps; jFjp’ (Triple Qualification, 1911) ‘ட்ரிபிள் தகுதி 1911 பெற்றார் மற்றும் டப்ளின் கூம்ப் மருத்துவமனையிலும் (Coombe Hospital) பயிற்சி பெற்றார்.
மருத்துவப் பணி:
யாழ்ப்பாணம் இனுவில் மெக்லியோட் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார்.
பெண்கள் உரிமை மற்றும் சமூகப் பணி:
1- தொழிற்சங்கங்கள் மற்றும் பெண்ணிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்.
2- 1919-ம் ஆண்டில் பெண்களுக்கான வாக்குரிமை தொடர்பான முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
3- 1927ஆம் ஆண்டில் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தை (றுழஅநn’ள குசயnஉhளைந ருnழைn) இணைந்தே நிறுவினார். இவரது போராட்டங்களின் விளைவாக1931-ல் இலங்கையில் பெண்களுக்குப் பொது வாக்குரிமை வழங்கப்பட்டது.
வரலாற்றில் மறக்கப்படமுடியாத பெயர்
மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழ்ந்ததுடன், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடிய நல்லம்மா வில்லியம்ஸின் வாழ்க்கை, ஒரு தனிநபரின் சாதனை மட்டுமல்ல. தடைகள் நிறைந்த காலத்தில் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்காக போராடிய யாழ்ப்பாணத்துச் சாதனைப் பெண்களின் வரலாறுமாகும்.

இணுவில் மிக்லியோட் வைத்தியசாலையில் 1915

வைத்தியர்களும் தாதியர்களும் 1915


