அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் அழகுக்கு அழகு செய்யும் வகையில், ஆலயத்தின் குபேர வாசல் கோபுரத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு”, ஆடிக் கார்த்திகை நன்னாளான 2026 ஆகஸ்ட் 6ஆம் நாள் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது. நல்லூரானின் அலங்கார வளைவுகள் வரிசையில் நல்லூரான் வடக்கு வாசல் வளைவு மூன்றாவதாக அமையப் பெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை மாட்டு வண்டில் மங்கல வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, எம்பெருமானுக்காக அழைத்து வரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கல நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்புக் கண்டது.யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தை யும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையில் கொடுங்கை அமைப்படன் கூடிய நுழைவாயில் அமையப்பெற்று நடுவில் இரண்டு தளங்களைக் கொண்டதும் ஐந்து கலசங்களைக் கொண்டதுமான இராயகோபுரம் அமையப்பெற்றுள்ளது. கட்டடத்தைப் பஞ்சாங்க வேலைப்பாடுகளுடன் கூடிய நான்கு தூண்கள் தாங்கிக் கொள்கின்றன. இராஜகோபுரத்தின் நடுவில் வடக்கு நோக்கி சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வீற்றிருக்க, மறுபக்கத்தில் தெற்கு நோக்கி முத்துக்குமார் வள்ளி தெய்வானை சமேதரராய் வீற்றிருக்கின்றார். சண்முகப்பெருமானுக்கு இரு பக்கமும் குபேரனின் நவ நிதிகளில் மனித வாழ்வு பூரணத்துவம் பெறுவதற்கு வேண்டியச ங்கநிதி, பதுமநிதி ஆகிய இருவரும் அமர்ந்துள்ளமை இவ்வளைவின் பெரும் சிறப்பமிசமாகும்.
சங்க நிதியின் கரங்களில் பொருள் மற்றும் செல்வத்தைக் குறிக்கும் வலம்புரிச் சங்கும், பதுமநிதியின் கரங்களில் கல்வி, அறிவு, ஆன்மிக ஞானத்தை குறிக்க தாமரை மலரினையும் கொண்டுள்ளனர். குபேர சம்பத்துக்களில் இவை இரண்டும் சிறப்பாக அடங்குவதாகக் கொள்வர். மேலும் சண்முகப்பெருமானின் வலது மருங்கில் விநாய கரும் இடது மருங்கில் வைரவப்பெருமானும் இருபுறமும் வேல் ஏந்திய கோடிப் பூதங்களும் அமையப்பெற்றுள்ளன. அதே போன்று முத்துக் குமாரருக்கு வலது மருங்கில்; விநாயகரும் இடது மருங்கில் வைரவரும் அமையப் பெற்று வேல் ஏந்திய கோடிப் பூதங்களும் அமையப் பெற்றுள்ளது.
வளைவின் நடுவில் இரு பக்கமும் கஜலக்சுமியும் கோடிப்பூதங்களும் கந்தசுவாமியாருக்கு மிக இஸ்டமான மயில்கள் எட்டும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மகா நாசியில் லக்சுமியும் சரஸ்வதியும் வீற்றுள்ளனர். தூண்களில் வடக்கு நோக்கிய வேலேந்திய வாயிற் காவலர்களும் தெற்கு நோக்கி நல்லூர் ஆலயத்தை தரிசித்தவாறு காவடி ஏந்திய பக்தர்களும் காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தின் பெருமைக்கு உயிரூட்டும் கந்தபுராண கலாசாரத்தை தன்னுள் உள்வாங்கியுள்ள சமய, சமூக, கலை, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிப்பதாக அமையப்பெற்றுள்ள இவ்வாயிற் கட்டடம் எமது இருப்பையும் தொன்மையையும் உறுதி செய்யும் இன்னொரு அடையாளமாகும். இவ்வளைவின் நிதியீட்டாளர்கள், சிற்பிகள், காரணகர்த்தாக்கள் அனைவருக்கும் எந்தையான முருகப் பெருமானின் அருள்பாலிக்க யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்தின் சார்பில் எந்தை கந்தப் பெருமானை வேண்டுகின்றோம்.
































