Tuesday, October 7

பாலமுரளி குணசிங்கம்

0

அறிமுகம்.

யாழ்ப்பாணம் ஈழநல்லூர் தெற்கு என்னும் முகவரியில் குணசிங்கம் மகாலக்சுமி தம்பதிகளின் முத்த புதல்வனாக 1967-04-04ஆம் நாள் பிறந்தவர். வீட்டிலுள்ளோர் மற்றும் நண்பர்கள் இவரது பாலமுரளி என்னும் பெயரை சுருக்கி அன்பாக பாலி என அழைத்து வந்தனர். இப்பெயர் அவரின் அடையாளமாக இன்று வரை நிலைத்து நிற்கின்றது. தனது ஆரம்பக்கல்வியை நல்லூர் தெற்று ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் வரை பயின்றார். அப்போதைய சூழலில் கொழுந்து விட்டெரிந்த கொடிய யுத்தம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கிருந்து கல்வி கற்பதிலும் பார்க்க புலம்பெயர்ந்து உயிருடன் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தமது பிள்ளைகளை மத்திய கிழக்கு மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தனர். இத்தகையதொரு சூழலில் தான் பாலமுரளி என அழைக்கப்படும் பாலி அவர்கள் தனது உயர்கல்வியை தொடர முடியாத சூழலில் 1984ஆம் ஆண்டளவில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.

தனது பாடசாலைக் காலங்களில் இசைத்துறையில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது சொந்த முயற்சியால் ‘டோலக், பொங்கோஸ்’ எனப்படும் இசைக்கருவிகளை இசைத்துப் பழகினார். இவரது கேள்விஞானம் இவரை இன்று ‘ட்றம்;ஸ்’ வாசிக்கும் மாபெரும் கலைஞனாக வளர்த்திருக்கின்றது.

அளவெட்டியைச் சேர்ந்த வடிவேல் சுதனி என்னும் மங்கையை கரம்பற்றி அழகிய ஆண்பிள்ளைச் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் மிகவும் அன்பாகவும் இயல்பாகவும் பழகும் சுபாவமுடையவர். தான் ‘ட்றம்ஸ்’ இசைத்த பாடகர்களோடு மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தையும் பண்பையும் உயரிய கொள்கையாக கடைப்பிடித்து வருகின்றார்.

இசைப்பயணத்தில் பாலமுரளி குணசிங்கம்

1984ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு புலம் பெயர்ந்த இவர் ரொரன்ரோவினை வாழ்விடமாக கொண்டார். ஆரம்பத்தில் கனேடிய மேலைத்தேய இசைக்குழுக் களில் ட்றம்ஸ் வாசிக்கும் கலைஞனாக இருந்த இவருடைய மனதில் ஏன்  தமிழில் இத்தகையதொரு இசைப்பரிமானத்தை ஏற்படுத்த முடியாது என்னும் எண்ண அலைகள் மனதில் தோன்றின. இச்சிந்தனை தமிழ் இசைக்கலையில் மிகச் சிறந்த ட்றம்ஸ் வாத்தியக் கலைஞனாக முகிழ்த்தெழ வைத்தது. 

திருகோணமலையைச் சேர்ந்த கோணேஸ் என்பவருடன் இணைந்து கனடாவில் பான்ட் குழு ஒன்றினை ஆரம்பித்தார். இக்குழுவில் பாலி அவர்கள் ஒக்டோபாட், பொங்கோஸ் ஆகிய இரு வாத்தியங்களையும் இசைத்து வந்தார். கனடாவில் இது ஆரம்பமாக இருந்தாலும் தன்னை இத்துறையில் முழுமையான கலைஞனாக வளர்த்தெடுக்க வேண்டுமென்ற அவரது எண்ணம் படிப்படியாக நிறைவேறியது. ட்றம்ஸ் இசையினை கனடாவில் வாழும் சிறார்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு கற்பிக்க ஆரம்பித்தார். இதற்காக அவர் பல தேடல்களையும் ஆராச்சிகளையும் மேற்கொண்டு பாடங்களுக்கான அறிமுறைக் குறிப்பகளை தேடிக்கற்றார். (NOTE MUSIC) பல ட்றம்ஸ் இசைத்துறை மாணவர்களை உருவாக்கினார்.

பின்னர் லண்டனில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் ஈழநல்லூரைச் சேர்ந்த கீபோட்டிஸ்ற் அரவிந்தன் அவர்களுடன் இணைந்து மெகா ரியூனேர்ஸ் என்னும் இசைக்குழுவொன்றினை உருவாக்கி அதன் முழுமையான ஸ்தாபகர்களாக இருவரும் அமைந்தனர். இவ்விசைக் குழுவினூடாக இருவரும் இருபது வருடங்கள் தொடர்ந்து பயணித்து பல்வேறு இசைச்சாதனைகளை ஏற்படுத்தினர்.

இத்தகைய பயணங்கள் ஏற்படுத்திய அனுபவங்கள் பாலி அவர்களை பல்வேறு இசைச்சிந்தனையாளராக மாற்றியமைத்தது. அந்த வகையில் கனடா ரொரன்ரோ தமிழ் மக்கள் மத்தியில் முதன்முறையாக ரிதம் மசஞ்சேர்ஸ் என்னும் New Digital Technology Band குழுவை என்னிடமிருக்கும் இசச்சிந்தனைiயை ஏனையவர்களுக்கு எடுத்துச்செல்லும் பயண எண்ணக்கருவுடன் உருவாக்கி செயற்படுத்தி வருகின்றார்.

மெகா ரியூனேர்ஸ் மற்றும் ரிதம் மசஞ்சேர்ஸ் என்னும் இரு குழுக்களினதும் ஸ்தாபகர்களாக பாலி மற்றும் அரவிந்தன் ஆகியோர் விளங்குகின்றனர். இவ்விருவர்களினதும் அயராத முயற்சியால் மிகப்பெரிய தரமான வாத்தியக் கலைஞர்களாக மேற்கிளம்பினர். உலகின் எப்பாகத்திலும் சென்று இத்துறையில் முத்திரை பதிக்குமளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டார். கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய சினிமாப்பாடகர்களுக்கான பின்னணிக் கலைஞனாகவும் தரமான பின்னணி இசையினை வழங்கும் தரமான இசைக்குழுவாகவும அங்கீகாரம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வாத்தியக் கலைஞன் தான் வாசிக்கும் வாத்தியக் கருவி தொடர்பில் முழுமையான அறிவினைப் பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் அவன் ஒரு முழுமைபெற்ற வாத்தியக் கலைஞனாகத் திகழ்வான் என்பதில் ஐயமில்லை. இத்தகைய அறிவு என்பது எல்லாக் கலைஞருக்கும் வாய்த்துவிடும் என்றில்லை. ஒருசிலருக்கு மட்டுமே கடவுளால் வழங்கப்பட்ட கொடையாகும்.  அத்தகையயோரில் ஒருவராக பாலி அவர்களும் விளங்குகின்றார். இவர் தான் வாசிக்கும் இலத்திரனியல் சார்ந்த கருவிகளை பழுது பார்த்தல் அதனை சரியாக இயங்க வைத்தல் என்பவற்றுக்கான தொழில்நுட்ட ஆற்றலும் முழுமையான அறிவும் பெற்றதுடன் மேடை ஒருங்கிணைப்பினை மகிச்சிறந்த முறையில் ஒழுங்கமைக்கம் ஆற்றலும் கைவரப்பெற்றவர். 

ட்றம்ஸ் இசைவாத்தியத்தில் Six Eight Speed Dance Music என்னும் இசையை வாசிப்பதில் எல்லோருக்கும் பாரிய விருப்பமுடையதொன்றாக இருக்கும். ஆனால் அதனை வாசிப்பதில் மிகுந்த திறமையும் ஆற்றலுடையவர் களாலேயே இதனை திறம்பட இசைக்க முடியும். இத்தயை ஆற்றலைப்பெற்ற ட்றம்ஸ் பாலி அவர்கள் விரும்பி வாசிக்கும் இந்த தாளத்தில் விசேட நுணுக்கம் பெற்றவர். இந்திய இசைத்துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் சினிமாப் பாடகர்களுக்கு ட்றம்ஸ் வாசித்து வரும் மூத்த ஈழத்துக் கலைஞன் என்ற பெருமையைப் பெற்றவர்;.

பாலி அவர்களின் ‘ட்றம்ஸ்’ இசையில் பாடியவர்கள்

எம்.எஸ்.விஸ்வநாதன் – பாடலும் இசையமைப்பும்.

ரீ.எம்.சௌந்தரராஜன்   

பி.வி.ஸ்ரீநிவாஸ்

கே.ஜே.ஜேசுதாஸ்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

மனோ

கார்த்திக்

பீ.சுசீலா

ஜிக்கி

எஸ்.ஜானகி

சித்ரா

உன்னிக்கிருஸ்னன்

எஸ்.பி.வி.சரன்

ராகவன்

ராகம்ஸ்

முகேஸ்

அனுராதா ஸ்ரீராம்

மாணிக்க விநாயகம்

ரத்தக் கண்ணீர் புகழ் காந்தா

வைகைப்புயல் வடிவேலு

வி.ஜே.ஜேசுதாஸ்

சுமித்ரா

ஹரிச்சரன்

விஜய் ரீ.வியின் சுப்பர் சிங்கேர்ஸ்

சின்மயி

கல்பனா

மதுபாலகிருஸ்னன் போன்ற இந்தியப் பாடகர்களுக்கும், ஈழத்துப் பாடகர்களான பொப்பிசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன், அமுதன் அண்ணாமலை, நித்தி, வர்ணராம் போன்றோருக்கும் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற ஈழத்துப் பாடகர்களுக்கும் ட்றம்ஸ் வாத்திய இசையின் பின்னணிக் கலைஞனாக தன்னை இணைத்து மெருகூட்டிய கலைஞன்.

தான் ட்றம்ஸ் இசைத்த பின்னணிப் பாடகர்களில் எம்.எஸ்.வி.என எல்லோராலும் கொண்டாடப்படும் இசையுலகின் மேதை விஸ்வநாதன் அவர்களுடைய எங்கே நிம்மதி என்ற பாடலிற்கான ட்றம்ஸ் வாசித்தமையை தன்னால் என்றும் மறக்கமுடியாது எனவும் இத்தகையதொரு சந்தர்ப்பத்தை தனக்கு உருவாக்கிக்கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி இசையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தி முத்திரை பதித்து, தன்னடக் கத்துடனும் நேர்மையுடனும் இசையுலகில் பயணித்து வரும் இக் கலைஞனை கனடாவில் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பழமை வாய்ந்த வானொலியான கீதவாணி வானொலியின் அதிபர் நடா அவர்களால் கனடாவில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வொன்றில் “Drums Western Bali” எனப் பெயர் சூட்டி  கௌரவப்படுத்தினார்.

இசையால் தான் பெறுகின்ற வருமானத்தில் ஒரு பகுதியினை சமூக சேவைகளுக்காகவும், கலைஞர்கள் துன்பத்தில் துடிக்கின்ற வேளைகளில் நிதிப்பங்களிப்பின் மூலம் அவர்களது துன்பத்தினை துடைக்கும் உள்ளம் கொண்டவராகவும் தாயகத்தில் பல்வேறு சமூகப்பணிகளையும் முன்னெடுத்து வரும் பாலி என அழைக்கப்படும் பாலமுரளி குணசிங்கம் அவர்கள் இசையுலகில் மேலும் பல சாதனைகளை ஏற்படுத்தி ஈழத்தமிழருக்கும் தான் பிறந்த மாவட்டமாகிய யாழ்ப்பாணத்திற்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்புரிய வேண்டி வாழ்த்துகின்றோம். 

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!