ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொண்ட மணி ஐயர் துறவறம் பூண்டு சமயத்தொண்டு புரிந்து வந்தார். அவர் 1966ஆம் ஆண்டு தொடங்கிய ஆதீனமே நல்லை திருஞனாசம்பந்தர் ஆதீனமாகும். சைவம் வளர கதாப்பிரசங்கம், பஜனை, பண்ணிசை, வகுப்புகளுடன் அன்னதானம் வழங்குதல், சைவசமய நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளித்தல், தீட்சை வழங்குதல் எனப்பல பணிகள் இதன் வழி இன்று வரை தொடர்கின்றன.
யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலிற்கு அருகிலே வாழ்ந்து வந்த செல்லையா ஐயரின் புதல்வனான செல்லையா கனகாம்பாள் தம்பதியரின் அருமைப்புதல்வனாக அவதரித்தவர் சிவசுப்பிரமணிய ஐயர். இவர் சிவப்பணியிலும் பிரசங்கப் பணியிலும் நாவலர் வழியைப்பின்பற்றி சிறந்து விளங்கினார். இதன்வழிப்பேறாக சிங்கப்புர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து பிரசங்கத்தில் ஈடுபட்டு வந்தார். இவ்வாறு இந்தியா சென்றவேளை மதுரை ஆதீனத்தைப் பார்வையிடச் சென்றார். இங்கு அவருக்கு ஞானஉபதேசம் ஏற்பட்டது. இதே போன்று யாழ்ப்பாணத்திலும் ஆதீனம் ஒன்றினை அமைக்க வேண்டும் என எண்ணி நல்லூரானின் திருவருளை நாடி நின்றார். நல்லூரானும் இவருடைய கனவிலெ தோன்றி “எமது அன்பரே! நல்லையம்பதியிலே வினைகள் தொலைய ஓர் ஆதீனம் அமைத்தத் தொண்டாற்றுக” என கட்டளையிட்டார். இதற்கமைவாக மதுரை ஆதீனத்தின் குருமஹா சந்நிதானம் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளிடம் வணங்கிப் பணிந்து துறவறம் புண்டு ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாசார்ய தம்பிரான் சுவாமிகள் என நாமகரணம் சூட்டப்பட்டார். இலங்கை வந்து நல்லூர் கோவில் வீதியிலே “நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்” என்ற பெயரில் திருமதி பாக்கியம் அம்மா அவர்கள் வழங்கிய காணியிலே 1966 ஆவணி மாதம் ஆறாம் நாள் கொட்டில் வடிவிலே ஆரம்பிக்கப்பட்டது.
இவ் ஆதீனத்திலே சைவம் வளர கதாப்பிரசங்கம், பஜனை, தேவாரப் பண்ணிசை வகுப்புகளுடன் அன்னதானம் வழங்குதல், தீட்சை வழங்குதல் என பல பணிகளை செய்து வந்தார். இத்தகைய பணிகளை அவதானித்து வந்த புத்தூர் மழவராயர் நம்பிக்கை நிதியத்தினர் தங்களது காணியிலிருந்து காணி வழங்கி தற்போதைய இடத்திற்கு 1972 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
இவ் ஆதீனத்தில் சைவசமய நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளித்தல், தீட்சை வழங்குதல், நல்லூரான் பெருந்திருவிழாக் காலங்களில் சமய அனுட்டானங்களை நிழ்த்துவதற்கு இடமளித் தல், எனப்பல பணிகள் இதன் வழி இன்று வரை தொடர்கின்றன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரசங்கப் பணி சுவாமிநாத தம்பிரான் பணி மூலம் தொடர்ந்த வண்ணமுள்ளது. சைவத்தின் பெருமைபேணுவதற்கும் சைவத்தின் காவலிடமாகவும் ஈழத்தில் அமைந்திருக்கும் ஒரேயொரு சைவசமய ஆதீனம் இதுவொன்றேயாகும்.
நல்லமுறையில் ஆதீனத்தினூடாக சைவசமயப் பணியினை செயற்படுத்தி வந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாசார்ய தம்பிரான் சுவாமிகள் 1981-04-10ஆம் நாள் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் சீடராய் இருந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் ஆதீனத்தின் இரண்டாவது குருமஹா சந்நிதானமாய் அமர்ந்து ஆதீனத்தினை செவ்வனே செயற்படுத்தி வருகின்றார். இங்கிலாந்தில் அமைந்துள்ள நல்லை ஆதீன திருப்பணி நிதிக்குவினர் அகில இலங்கை இந்து மாமன்றத்தோடு இணைந்து நவீன முறையில் ஆதீனம் அமைக்கப்பெற்றுத்திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. தற்பொது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பங்குபற்றலுடன் ஆதீனம் செவ்வனே பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


