Saturday, April 19

“பாலர் ஞானோதய சபை” – தெல்லிப்பளை

0

(07.02.1946) வெள்ளிக்கிழமை பிரம்மஸ்ரீ மு. சிவகடாட்சரக்குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்றன. திருவாளர்கள் தி. சுந்தரமூர்த்தி, தி. ஆறுமுகசாமி, சே. தியாகராசா, ஸ்ரீ. சிதம்பரப்பிள்ளை, ஆ. கனகசபை முதலாய பெரியார்கள் யாபேரும் ஒன்றுகூடிப் “பாலர் ஞானோதய சபை”, என்னும் நாமத்துடன் இச்சபையை உருவாக்கினார்கள். பிரம்மஸ்ரீ மு. சிவகடாட்சரக்குருக்கள் மாணவர்களுக்கு தேவார திருவாசகங்களைச் சொல்லிக்கொடுத்தார். பதினைந்து மாணவர்களே சமூகம் கொடுத்திருந்தனர். அந்தப் பதினைந்து பேரில் மூவர் பெரிய பதவிகளில் விளங்குகிறார்கள். திருவாளர்கள் த.பூ. முருகையா,( காசி விநாயகர் ஆலய தர்ம கர்த்தா) இ. நித்தியானந்தம், வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரம் ஆகியோராவர். அதன் மேல் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனையும் எந்தையாரின் அங்கப்பிரதட்சணமும் தவறாமல் பூசையின் பின் இடம்பெற்று வந்தன. மகாதனை, மல்லாகம் முதலாய இடங்களில் இருந்து வந்து பங்குகொண்டனர். 50 மாணவர்களுக்கு மேல் கல்வி பயின்றனர். சைவ வினாவிடை, சைவபோதம், திருக்குறள் நாமாவளி முதலாய நூல்கள் சனி, ஞாயிறு முதலாய நாட்களில் கற்பிக்கப்பட்டன. ஆண்டுதோறும், பரீட்சைகள் வைத்துப் பரிசில்கள் வழங்கப்பட்டன. திருவாளர்கள். நம. சிவப்பிரகாசம், செ. சின்னத்துரை ஆகியோர் சபையின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்கள் திரு.ம.சிதம்பரப்பிள்ளை அவர்களின் சேவை அளவிட்டுக் கூறமுடியாது. சபைக்கென மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது. அஞ்ஞான்று வேறு கோவில்களில் கூட்டுப்பிரார்த்தனைகள் இடம்பெறாத காலம் அக்காரணத்தினால் எமது சபையின் பிரார்த்தனைக்குப் பெருமதிப்பு இருந்தது.

1965 இல் இசை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 05 மாணவர்களே சேர்க்கப்பட்டனர். அதையும் எமது தந்தையாரே தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்தார். மிருதங்கமேதை திரு.க. ப. சின்னராசாவே அதன் ஆசிரியர் ஸ்ரீ. சு. வரதராசசர்மா முதன் மாணவர். மிருதங்க வகுப்பில் வை.வேனிலான், செ. இராசா, ச. சிவசுப்பிரமணியம், ம.முருகையா   சி. சக்திதரன் சோ. கார்த்திகைகுமரன் ஆகியோர் இணைந்து கொண்டனர். வயலின் வகுப்பிற்கு பிரம்மஸ்ரீ. ளு. வெங்கடேஸ்வர சர்மாவும் வாய்ப்பாட்டு வகுப்பிற்கு சு. விஸ்வநாதஐயர் – நேசபூபதி நாகராசன் ஆசிரியர்கள் ஆ.முத்துக்குமாரு துணை ஆசிரியர்.

இந்த இசை வகுப்புகளுக்கு அனர்த்த காலம் ஒன்று ஏற்பட்டது. அதனைக் காப்பாற்றிய பெருமை தியாகராஜ ஐயர் –  சுந்தரமூர்த்தி ஐயர் அவர்களையே சாரும். பொருள் வருவாயைக் கருத்திற்கொள்ளாது இசை வகுப்புக்கள் அழிந்து விடாது காப்பாற்றிய பெருமகன் தெல்லிமாநகரிலே அவதரித்த அந்தணதிலகம் தனது பி;ள்ளைகளையும் படிக்க வைத்து பண்புள்ளவராக்கிய பெருமைக்குரியவர். மாணவர் கல்வியுடன் அமையாது ஆலயங்களில் மணியோசை முழங்க வைத்த

மாமனிதர். ஐயா உபாத்தியார் எனவே எல்லாரும் அழைப்பர். அன்னாரின் இரண்டாவது புத்திரன் (சு. வரதராச சர்மா) இசை மேதையாகி இன்று வகுப்புக்களை நடத்துவது நாம் செய்த பாக்கியமே. சபை மாணவன் வை.வேனிலான் இங்கு மிருதங்கம் கற்று ஆசிரிய தரம் சித்தியடைந்து சென்னையில் திருவாரூர் பக்தவற்சலம் அவரகளிடம் பயின்று தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இசை நிகழ்வுகளில் பங்கெடுப்பது பெருமையே. மேலும் முடிவுறாது இருந்த சபை மண்டபத்தை பூரணமாக்கி திறந்துவைத்தவர் சைவபுரவலர் (மில்க்வைற்) கனகராஜா அவர்கள்.அன்னார் என்றும் நினைவு கூரவேண்டியவர்.

இந்த 60 ஆண்டுகளில் சபையின் பேரால் 40 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. “ தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்ற வாக்கிற்கு அமைய இச்சபை பணிபுரிந்து வருகின்றது. இச்சபையிலே சமயக்கல்வி பயின்ற நூற்றுக்கணக்காணோர் பெரிய பதவிகளை வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இசை பயின்ற பல நூற்றுக்கணக்கானோர் இசை ஆசிரியர்களாகத் திகழ்கின்றனர். சபையின் பணிகள் பல பல அவற்றை எல்லாம் விரிவுபடுத்தாது விடுகின்றோம்.

எங்கள் பணிகளுக்கு உதவி செய்யும் உத்தமர்கள் பலர் போற்றப்பட வேண்டியவர்கள். அதிலும், மிக மிக முக்கியமாகத் துர்க்காதேவஸ்தானத்தின் பணிகள் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை அதன் தலைவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி நூறு ஆண்டையும் கடந்து பணி பல புரியக் காசி ஐங்கரன் கருணை புரிவாராக.

பிரம்மஸ்ரீ. சிவகடாட்சரக்குருக்கள் கணேசலிங்க குருக்கள் அவர்களின் கட்டுரை.1990.     

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!