Sunday, November 15

பன்முக ஆளுமை கலைஞர் பா.இரகுவரன்

0
அறிமுகம்
பா.இரகுவரன். மண்ணின் நினைவுகளையும், வடமராட்சியின் கூத்துக் கலையையும் ஆவணப்படுத் தியவர். ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், நாடக நெறியாளர், சமூக ஆய்வாளர், பண்பாட்டு ஆவணப்படுத்துநர் எனப் பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்திய இவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், தான் வாழ்ந்த மண்ணையும், அந்த மண்ணின் வரலாறு மற்றும் கலை மரபுகளையும் அறிந்து, அவற்றைப் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவரானார். பருத்தித்துறையை அண்டிய தும்பளை மண்ணிலிருந்து தொடங்கிய அவரது பயணம், ஒரு கிராமத்தின் எல்லைகளைத் தாண்டி இலக்கியம், நாடகம், நாட்டுக்கூத்து, சமூக வரலாறு, சூழலியல் ஆகிய பல துறைகளுடன் தொடர்புபட்டிருக்கிறது. 
பிறப்பு
பா. இரகுவரன் அவர்கள் 1959 செப்டெம்பர் 12ஆம் திகதி, யாழ்ப்பாணம் இணுவிலில் அமைந்திருந்த மெக்லியோட் மருத்துவமனையில் பிறந்தார். அவரது பெற்றோர் பாலகிருஷ்ணன் (1931–1991), கமலாம்பிகை பாலகிருஷ்ணன் (1938–2009) ஆகியோர். இவர்களது குடும்பப் பூர்வீகத் தொடர்பு பருத்தித்துறை தும்பளை மேற்கிலுள்ள கொம்பலட்டியுடன் இணைந்திருந்தது. சிறுவயதிலேயே கலை நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல், நாடகங்களில் நடித்தல், விளையாட்டுகளில் பங்கேற்றல், புத்தகங்களை வாசித்தல் எனப் பல்வேறு ஆர்வங்கள் அவரிடம் வெளிப்பட்டிருந்தன.
சிறுவயதிலிருந்தே வாசிப்பை நேசித்தவர்
இரகுவரன் அவர்களின் அறிவுத் தேடலுக்கு குடும்பச் சூழலும் உதவியது.. அவரது தந்தையார் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால், இரகுவரனுக்கும் சிறுவயதிலேயே அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்கள் கிடைத்தன.
பின்னர் கல்கி, சிரித்திரன், வீரகேசரி பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளியீடுகளை வாசிக்கத் தொடங்கினார். பருத்தித்துறையில் இருந்த மயில்வாகனம் வாசிகசாலையும், நண்பர் குலசிங்கத்தின் புத்தகக் கடையும் அவரது வாசிப்பு மற்றும் அறிவுத் தேடலுக்கான இடங்களாக அமைந்தன. வாசிப்புப் பழக்கம் என்பது ஒரு மனிதனுக்குத் தகவல்களை மட்டுமே தருவதில்லை. அவன் வாழும் உலகத்தைத் தாண்டிய அனுபவங்களை அறியவும், மனிதர்களின் வாழ்க்கையைப் பல கோணங்களில் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இரகுவரன் அவர்களின் பின்னைய எழுத்துப் பணிகளையும் ஆய்வு முயற்சிகளையும் நோக்கும்போது, சிறுவயதில் தொடங்கிய இந்த வாசிப்புப் பழக்கத்தை வெறும் ஆரம்பக் குறிப்பாகப் புறக்கணிக்க முடியாது. வாசித்ததைத் தாண்டி மேலும் தேட வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் வளர்ந்ததற்கான பின்னணியாக இதைக் கருதலாம்.
பாடசாலைக்; காலம்.. கல்வி, விளையாட்டு, நாடகம்.
தும்பளை சிவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், 1972ஆம் ஆண்டு ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி பயின்றார். சிவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்ற காலத்திலேயே நாடகங்களில் பங்கேற்றார். குமணன், சங்கிலியன் போன்ற நாடகங்களில் நடித்தார். 1971ஆம் ஆண்டு சங்கிலியன் நாடகத்தில் காக்கைவன்னியன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனுடன் அவரது விளையாட்டுத் திறமையும் வளர்ந்தது. ஹாட்லிக் கல்லூரியில் அபிரகாம் இல்லத்துடன் தொடர்புடைய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, குறிப்பாக ஓட்டப்பந்தயங் களில் திறமையை வெளிப்படுத்தினார். 1973ஆம் ஆண்டு 13 வயதுக்குட்பட்டோருக்கான 200 மீற்றர் மற்றும் 300 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பெற்றார். கல்வி, விளையாட்டு, கலை எனப் பல்வேறு தளங்களில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், மாணவர் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்ற அவர்; அறிவியல் கற்பித்தலுடன் கலை, இலக்கியம், சமூக ஆய்வு ஆகிய துறைகளிலும் அவர் ஈடுபடுவதற்கான வாழ்க்கைப் பாதை விரிந்தது.
ஆசிரியராகத் பணியை ஆரம்பித்தவர்..
பல்கலைக்கழக அனுமதி கிடைக்காததைத் தொடர்ந்து அவர் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பித்தார். 1984ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தின் மகோனாவில் அமைந்த அல்-ஹசனியா மகா வித்தியாலயத்தில் அரசாங்க விஞ்ஞான ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 1988–1989 காலப்பகுதியில் ஆசிரியர் பயிற்சியையும் பெற்றார். அறிவியல் பாடத்தைப் போதிப்பவராகப் பணியாற்றிய ஒருவர், அதே நேரத்தில் நாடகத்திலும் இலக்கியத்திலும் சமூக ஆய்விலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 
அறிவியல் மனப்பாங்கு என்பது கேள்வி கேட்பது, கவனிப்பது, காரணங்களைத் தேடுவது, கிடைத்த தகவல்களை ஆராய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது. இரகுவரன் அவர்களின் பின்னைய ஆவணப்படுத்தல் முயற்சிகளில் காணப்படும் தேடல் மனப்பாங்குடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1990 ஜனவரி 1ஆம் திகதி அவர் ஹாட்லிக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். ஹாட்லிக்கல்லூரியில் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பித்ததுடன், நாடகமும் அரங்கியலும் தொடர்பான கற்பித்தல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இவ்வாறு அவரது தொழில் வாழ்க்கையும் கலைப்பணியும் ஒன்றோடொன்று இணைந்தன.
‘பாலரகு’ என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள்…
இரகுவரன் அவர்களின் எழுத்துப் பயணம் ‘பாலரகு’ என்ற புனைபெயரைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது. 1970களின் பிற்பகுதியில் தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துடன் தொடர்புடைய இளைஞர்களால் குயிலோசை என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியிடப்பட்டதாக வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையிலிருந்து அறிய முடிகின்றது. இரகுவரனும் அந்த முயற்சியில் ஈடுபாடு காட்டியிருந்தார். சிறுகதைகள் எழுதுவதற்கான ஆர்வத்தை வளர்த்ததில் அந்தக் கையெழுத்துச் சஞ்சிகை பங்கு வகித்தது.
1982ஆம் ஆண்டு சிரித்திரன் நடத்திய பாரதி நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியில், ‘பாலரகு’ என்ற பெயரில் அவர் எழுதிய காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற சிறுகதை இரண்டாம் பரிசைப் பெற்றது. வாழ்க்கை வரலாற்றில் ‘பாலரகு’ என்பது பாலகிருஷ்ணன் இரகுவரன் என்ற பெயருடன் தொடர்புடைய புனைபெயராக விளக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் கிடைத்த பரிசு, அவரது எழுத்துப் பயணத்தில் முக்கியமான தொடக்க அங்கீகாரமாக அமைந்தது. அதன்பின்னர் 1986ஆம் ஆண்டு சிரித்திரன் இதழில் சூரியனும் கறுத்துப் போச்சு என்ற சிறுகதை வெளிவந்தது. அந்தக் கதையின் களமாகத் அவரது வீட்டில் இருந்த பதுங்குகுழி அமைந்தது .1987ஆம் ஆண்டு மல்லிகை இதழில் நிலாக்காலத்து சோகம் என்ற சிறுகதையும் வெளிவந்தது. 1980களிலேயே சிறுகதை எழுத்தில் அடையாளம் பெற்றிருந்தவர் என்பதும், தனது அனுபவங்களையும் வாழ்விடச் சூழலையும் எழுத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் என்பதும் அவரது இலக்கியப் பயணத்தின் முக்கிய அம்சங்களாகும்.
நாடகமும் அரங்கியலும்.. ஆர்வத்திலிருந்து முறையான கல்விவரை…
இரகுவரன் அவர்களின் வாழ்க்கையில் நாடகம் என்பது சிறுவயது ஆர்வமாகத் தொடங்கி, பின்னர் கற்றல், பயிற்சி, படைப்பாக்கம், மேடையேற்றம் ஆகிய பல நிலைகளைக் கடந்த ஒரு துறையாக வளர்ந்தது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பேராசிரியர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களின் பணிகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சி. மௌனகுரு, கலாநிதி குழந்தை சண்முகலிங்கம், கலாநிதி சிதம்பரநாதன் போன்றவர்களுடனான தொடர்புகள் அவரது நாடக அறிவை வளர்த்தன.. மௌனகுரு, சிதம்பரநாதன், பிரான்சிஸ் ஜெனம் ஆகியோரின் வழிகாட்டுதலில் 1989ஆம் ஆண்டு ஒரு வருட நாடகப் பயிற்சியைப் பெற்றார். இந்த அனுபவங்களின் தொடர்ச்சியாக 1991ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் தொடர்பான பட்டப்படிப்பில் வெளிவாரி மாணவராக இணைந்து, 1996ஆம் ஆண்டு டீயு (ர்ழழெரசள) ளுpநஉயைட in னுசயஅய யனெ வுhநயவசந பட்டத்தைப் பெற்றார்.
வடமராட்சியின் நாடக மரபுகளை மையமாகக் கொண்டு மேலாய்வு மேற்கொள்வதற்கான அனுமதியும் அவருக்குக் கிடைத்தது. நாடகத்தை வெறுமனே மேடையில் நிகழ்த்தப்படும் பொழுதுபோக்காக அவர் அணுகவில்லை. நாடகத்தைப் படிக்கவும், அதன் வடிவங்களை அறியவும், மரபுகளையும் நவீன அரங்கியல் அணுகுமுறைகளையும் புரிந்துகொள்ளவும் அவர் முயன்றார். ஒரு நாடகத்தை எழுதுவது ஒரு செயல். அதை மேடைக்குத் தயாரிப்பது இன்னொரு செயல். நடிகர்களைப் பயிற்றுவிப்பது, காட்சியமைப்பை உருவாக்குவது, பார்வையாளர்களுடன் உரையாடும் வகையில் படைப்பை வடிவமைப்பது ஆகியவை மேலும் பல திறன்களைக் கோருகின்றன. இரகுவரன் அவர்களின் பணிகளில் இந்தப் பல்வேறு நிலைகளும் இணைந்திருந்தன.
ஹாட்லிக் கல்லூரியும் மாணவர் நாடகங்களும்…
1990ஆம் ஆண்டு ஹாட்லிக் கல்லூரிக்குத் திரும்பிய பின்னர், அங்கு நாடகப் பயிற்சி மற்றும் மேடையேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் ஆச்சி சுட்ட வடை என்ற சிறுவர் நாடகத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து மேடையேற்றினார். 1990 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் ஹாட்லிக் கல்லூரியிலும் பிற பாடசாலைகளிலும், புலோலி ஞானசம்பந்தர் கலை மன்றத்திலும் பல்வேறு நாடகங்களைப் பயிற்றுவித்து மேடையேற்றுவதில் பங்காற்றினார்.  குழந்தை சண்முகலிங்கம், மௌனகுரு போன்றோரின் சிறுவர் நாடகங்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.
இரகுவரன் அவர்களின் நாடக முயற்சிகளில் சமூகப் பிரச்சினைகளும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வும் முக்கிய இடம் பெற்றன.. இதன் மூலம் நாடகத்தை ஒரு சமூகக் கல்வி ஊடகமாகப் பயன்படுத்தும் நோக்கமும் அவருடைய பணிகளில் இருந்ததை அறிய முடிகிறது.
வடமராட்சியின் நாட்டுக்கூத்துக் கலையைத் தேடியவர்…
இரகுவரன் அவர்களின் பணிகளில் தனித்துவமாகக் கவனிக்க வேண்டிய துறை வடமராட்சியின் கூத்துக் கலை. ஈழத்தமிழர் பண்பாட்டில் நாட்டுக்கூத்து என்பது வெறும் மேடை நிகழ்ச்சி அல்ல. அது இசை, பாடல், ஆடல், நடிப்பு, உடை, ஒப்பனை, சமூக நினைவு, வழிபாட்டு மரபு போன்ற பல கூறுகளுடன் தொடர்புடையது. கிராமங்களின் வரலாற்றிலும் மக்களின் பண்பாட்டு வாழ்விலும் கூத்துக்கு முக்கியமான இடமுண்டு.
ஆனால் ஒரு கலை மரபு தலைமுறைகளாகத் தொடர்வதற்கு அதன் கலைஞர்களும் பார்வையாளர்களும் மட்டும் போதாது. அந்த மரபின் வரலாறு, பாடல்கள், நிகழ்த்தும் முறைகள், பாத்திரங்கள், களங்கள், மாற்றங்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்யும் ஆவணப்படுத்தல் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இரகுவரன் அவர்கள் வடமராட்சியின் கூத்துக் கலை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளும், செட்டி வர்த்தகன் என்ற நாட்டுக்கூத்தைத் தயாரித்து மேடையேற்றிய அனுபவமும் அவருடைய நூலாக்க முயற்சிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய விமர்சனத்தை எழுதிய மருத்துவர் எம்.கே. முருகானந்தன், இரகுவரன் அவர்களின் பல்துறைப் பணிகளையும், கூத்துக் கலைக்கான அவரது ஆவணப்படுத்தல் முயற்சியையும் பாராட்டியுள்ளார். செட்டி வர்த்தகன் பற்றிய பதிவு 1994ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத மல்லிகை இதழிலும் இடம்பெற்றுள்ளது..
இங்கு ஒரு முக்கியமான விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மரபுக் கலையை மேடையேற்றுவது அதன் நிகழ்த்தல் மரபைத் தொடர்ந்து வாழச் செய்வதற்கான முயற்சி. அதே நேரத்தில், அந்தக் கலையின் வரலாற்றை ஆராய்ந்து நூலாக்குவது, அதன் அடையாளங்களை எதிர்கால ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பதற்கான முயற்சி. இரகுவரன் அவர்களின் பணிகளில் இந்த இரு அணுகுமுறைகளும் சந்திக்கின்றன.
வெளியிட்ட நூல்கள்
‘கல்லூரி நாடகங்கள்’… வகுப்பறைக்கு வெளியேயான கற்றல்…
2007ஆம் ஆண்டு வெளியான கல்லூரி நாடகங்கள் நூல், இரகுவரன் அவர்களின் நாடகப் பணிகளை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான படைப்புகளில் ஒன்று. இதில் சிட்டுக்குருவிகள், முற்றத்து வேம்பு, அழிதல் காணும் பூவுலகம், குருபீடம், மெல்லத் தமிழினி, கணித மேதை ஆகிய நாடகப் பிரதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலைப் பற்றிய விமர்சனத்தில், நாடகங்கள் மாணவர்களின் குழந்தைப் பருவ அனுபவங்கள், கற்பனை, வாழ்க்கைச் சூழல் மற்றும் சமூகப் புரிதலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. கலை வடிவம் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு நின்றுவிடாமல், அவர்களைச் சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற கருத்தும் அந்த விமர்சனத்தில் வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கருத்து இரகுவரன் அவர்களின் நாடக அணுகுமுறையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மாணவர்களுக்காக நாடகங்களை உருவாக்குவது என்பது அவர்களுக்கு மனப்பாடம் செய்ய வசனங்களைக் கொடுப்பது மட்டுமல்ல. அவர்களுடைய வயதுக்கேற்ற அனுபவங்களையும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கலை வடிவத்தில் வெளிப்படுத்துவதாகவும் இருக்க முடியும்.
வடமராட்சியில் கூத்துக் கலை…
வடமராட்சியின் நாட்டுக்கூத்து மரபுகளைப் பற்றிய அவரது நூலாக வடமராட்சியில் கூத்துக் கலை குறிப்பிடப்படுகிறது. இதனைப் பற்றிய நூல் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையில், அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் செட்டி வர்த்தகன் கூத்தைத் தயாரித்து மேடையேற்றிய அனுபவங்களும் நூலுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. இத்தகைய ஆய்வின் முக்கியத்துவம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை மரபை அதன் சொந்தச் சூழலில் புரிந்துகொள்ள முயல்வதில்தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான நாடக மரபுகள் இருந்தன என்று கருதிவிட முடியாது. பிரதேசத்துக்கு ஏற்ப கதைத் தேர்வு, பாடல், இசை, ஆடல், பாத்திரங்கள், நிகழ்த்தப்படும் சூழல் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கலாம். 
ஊரும் வாழ்வும்… ஒரு கிராமத்தை ஆவணப்படுத்திய முயற்சி.
இரகுவரன் அவர்களின் எழுத்துப் பணிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டியது 2001ஆம் ஆண்டு வெளியான ஊரும் வாழ்வும்.. தும்பளைக் கிராமம் பற்றிய சமூகவியல் ஆவணம் என்ற நூல். இந்நூல் 132 பக்கங்களைக் கொண்டது. இதன் தலைப்பும் நூல் வகைப்பாடும், தும்பளை கிராமத்தைச் சமூகவியல் நோக்கில் ஆவணப்படுத்தும் முயற்சியாக இது அமைந்திருந்ததை வெளிப்படுத்துகின்றன. தும்பளை கிராமத்தின் வரலாறு, கலாசாரம், கல்வி, கலை ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைத் தேடுவதற்காக இரகுவரன் பல வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தார். அந்தத் தேடலின் விளைவாகவே ஊரும் வாழ்வும் உருவானது.
இந்த முயற்சியின் மதிப்பை உணர, ஒரு கிராமத்தின் வரலாறு எங்கு இருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிதறிய நினைவுகளையும் தகவல்களையும் தேடிச் சேகரித்து நூலாக்குவது எளிதான பணி அல்ல. தகவல்களைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை ஒழுங்குபடுத்தி, வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து, ஒரு நூலாக வெளியிட வேண்டியிருக்கிறது.
பருத்தித்துறையூராம்.. ஊரிலிருந்து பிரதேச வரலாற்றை நோக்கி..
2001ஆம் ஆண்டு ஊரும் வாழ்வும் வெளியான பின்னர், 2012ஆம் ஆண்டு பருத்தித்துறையூராம் என்ற நூலை இரகுவரன் வெளியிட்டார்.
இந்நூல் 306 பக்கங்களைக் கொண்டது. இதன் அளவும் தலைப்பும், பருத்தித்துறைப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட விரிவான ஆவணப்படுத்தல் முயற்சியாக இதனைப் பார்க்க உதவுகின்றன. பருத்தித்துறையின் வரலாறு, வாழ்க்கை முறை, பாடசாலை மரபுகள், விளையாட்டு மரபுகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பிராமண தெரு கமலாம்பிகை சரிதம்.. ஒரு தெருவின் வரலாற்றுக்குள்..
2009ஆம் ஆண்டு வெளியான பிராமண தெரு கமலாம்பிகை சரிதம் என்ற நூலும் அவரது ஆவணப்படுத்தல் பணிகளில் குறிப்பிடத்தக்கது. இந்நூல் 38 பக்கங்களைக் கொண்டது. இதன் உள்ளடக்கப் பட்டியலில் தும்பளை மேற்கு கிராமம், தும்பளை மேற்கு கலட்டி, கமலாம்பிகை சரிதம், பிராமண தெருவுடன் தொடர்புடைய விடயங்கள், சைவக் குடும்பங்கள் தொடர்பான பின்னிணைப்பு உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் தலைப்பும் உள்ளடக்கப் பட்டியலும், ஒரு குறிப்பிட்ட தெருவையும் அதனுடன் தொடர்புடைய குடும்ப மற்றும் சமூக நினைவுகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியைச் சுட்டுகின்றன.
கண்டல் காடுகள்… கலை மற்றும் வரலாற்றைத் தாண்டிய சூழலியல் அக்கறை.
இரகுவரன் அவர்களின் பணிகளை நாடகம் மற்றும் உள்ளூர் வரலாறு ஆகிய இரு துறைகளுக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. 2017ஆம் ஆண்டு வெளியான கண்டல் காடுகள் என்ற நூல், அவரது ஆர்வம் சூழலியல் துறையையும் தொட்டிருந்ததை எடுத்துக்காட்டுகிறது.
இந்நூல் 122 பக்கங்களைக் கொண்டது. இதில் கண்டல் தாவரங்கள், இலங்கையில் அவற்றின் பரம்பல், கண்டல் சூழல் தொகுதிகள், தாவரங்களின் இயைபாக்கங்கள், உப்பு நீக்கல் செயற்பாடு, கண்டல் காடுகளின் பயன்கள், அவற்றை பாதிக்கும் காரணிகள், அங்கு காணப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற தலைப்புகள் இடம்பெறுகின்றன.
போதை.. தொகுப்புப் பணியிலும் பங்களிப்பு.
1989ஆம் ஆண்டு போதை என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார். அது மருத்துவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாகவும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் மன்றத்தின் ஆதரவுடன் வெளியிடப்பட்டது.
இந்தப் பணி அவரது சொந்தப் படைப்புகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், பிறருடைய அறிவையும் எழுத்துகளையும் தொகுத்து வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்ததைச் சுட்டுகிறது.
இதழ்களில் தொடர்ந்த எழுத்துப் பங்களிப்பு..
நூல்களை வெளியிடுவதுடன் இரகுவரன் அவர்கள் இதழ்களிலும் எழுதியுள்ளார். 2001ஆம் ஆண்டு ஆற்றுகை இதழில் நினைவுகளாகிப்போன கரவெட்டி நற்குணம் என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. 
2008ஆம் ஆண்டு ஜீவநதி இதழின் முதலாம் ஆண்டு நிறைவு மலரில் காலமான காவியம் மதுரைப் பண்டிதர் கலாநிதி க. சச்சிதானந்தன் (1921–2008) என்ற தலைப்பிலான பதிவு அவரது பெயரில் இடம்பெற்றுள்ளது. 
கலைமுகம் இதழிலும் உதிரிகளும் என்ற படைப்பு அவரது பெயருடன் பதிவாகியுள்ளது.
இந்தப் பதிவுகள் அவரது எழுத்து ஆர்வம் ஒரு குறிப்பிட்ட வகை நூலுடன் மட்டும் முடங்கியிருக்கவில்லை என்பதை உணர்த்துகின்றன. சமூக நினைவுகள், ஆளுமைகள், கலை மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களிலும் அவர் பங்களித்துள்ளார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்..
இரகுவரன் அவர்களின் கலை மற்றும் பண்பாட்டுப் பங்களிப்புகளுக்காகப் பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டது. அவற்றில் நாடகச் செம்மல், கலைவாருதி, யாழ் முத்து ஆகிய பட்டங்களும் அடங்குகின்றன. மேலும், 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகு அவருக்கு கலைக்குரிசில் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது..இந்த அங்கீகாரங்கள் அவரது நாடக மற்றும் பண்பாட்டுப் பணிகள் சமூக மட்டத்திலும் நிறுவன மட்டத்திலும் கவனிக்கப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றன. எந்தவொரு விருதையும் ஒரு மனிதரின் முழுப் பணிக்கான இறுதியான அளவுகோலாகக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், நீண்டகாலமாகக் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவரின் பங்களிப்பைச் சமூகமும் நிறுவனங்களும் அடையாளம் கண்டு கௌரவிப்பது முக்கியமானது.
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!