Tuesday, November 10

வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) 

0
அறிமுகம்.
ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமை ஓவியர், சிற்பி,  ரமணி யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் தம்பதியருக்கு 1942ஆம் ஆண்டு பிறந்தார். ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர்.  ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலை நாட்டியவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும்  அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின.
முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும்  இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும். 
வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் மிகவும் பிரசித்தமானவை..  அது அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது.  தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து  அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புகளுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின. 
இவர் எஸ்.பொன்னம்பலம், ஓவியர் மாற்கு ஆகியோரிடம் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றுப் பின்னர் விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் 1960 – 64 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பயின்றதோடு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் 5 வருட காலம் பயிற்சி பெற்று, டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர்களான ஸ்ரான்லி அபயசிங்க, கொஸ்தா கருணரட்னா ஆகியோரிடம் 1962-1967 ஆண்டுகாலப் பகுதியில் பயிற்சி  பெற்றவர். தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர், ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பெயர் பெற்ற சிற்பங்கள் பலவற்றைப் படைத்துள்ள இவர், அவற்றின் உருவ நேர்த்திக்காகவும் கூட்டொழுங்கமைவிற்காகவும் பெயர் பெற்றவர். யாழ். பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகப் பணிபுரிந்;த இவர், ஓய்வு பெற்ற ஓவிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆவார். இவர் சிறந்த ஓவியர் மட்டுமல்லர் சிற்பியும் கூட.  உரும்பிராய் சிவகுமாரனின் ஆரம்ப சிலையை வடித்த சிற்பி
பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர். எழுத்தாளர் டானியலின் ‘பஞ்சமர்” நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே.  செங்கை ஆழியானின் ‘போரே நீ  போய்விடு” நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம். ‘தற்காலத்து யாழ்ப்பாணத்து ஓவியர்கள்” என்னும் தனது நூலில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா, ஓவியர் ரமணி பற்றி எழுதிய குறிப்பு ஓவியர் ரமணி பற்றிப் பல முக்கிய விபரங்களைப்பதிவு செய்துள்ளது. 
ரமணியின் ஓவியங்களில் ரேகைகளே முதன்மைக்கூறுகள்.  வேகமும், இசையும் இவரது ரேகைகளின் சிறப்பியல்பு. வேறெந்த ஓவிய மரபையும் தன் பாணியாகக்கொள்ளாதவர். தனக்கென்று தன் வழியில் முன்னோடிகளின் சிறப்புக்கூறுகளைத் தன்வயப்படுத்தி வரைபவர். ஓவியத்தின் சிறப்பியல்பு அதன் எளிமையில் தங்கியுள்ளது என்று கருதுபவர். இந்திய ஓவிய  மரபில் இராசபுதனத்து ஓவியங்கள் இவரை மிகவும்  கவர்ந்தவை. ஓவியம் ஒரு கலை என்னும் வகையில் தனித்துவத்தை முதன்மைக் கூறாகக் கொண்டுள்ளது. வர்ணச் சேர்க்கையில் கட்டுப்பாடுகள் தனக்கில்லை என்று கூறுபவர். வர்ணங்களை னுரடடஇ குயளவ  என்று வேறுபடுத்தும் மரபினை இவர் ஏற்றுக்கொள்ளாதவர். பொருத்தமான வர்ணங்களின் சேர்க்கையே ஓவியத்துக்கு இன்றியமையாதது என்பது இவரது நிலைப்பாடு.
மெடிசியானி, வன்கோ, எல்கிரகோ, சல்வடோர் டாலி போன்ற மேனாட்டு ஓவியர்களை தனது விருப்பிற்குரியவர்களாக அரவணைத்து மகிழ்ந்தவர். ரமணியின் ஓவியங்களில் இவர்களின் செல்வாக்குப் படிந்துள்ளது. இந்திய ஓவியர்களில் இவருக்குப் பிடித்தவர்கள் ஆதிமூலம், மருது, அம்ரித்தா சேர்கல்.
ஓவியர் ரமணி  திக்குவல்லைகமாலுடன்  பலாலி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றவர். எழுத்தாளர் டொமினிக் ஜீவா, ஓவியர் ரமணியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அதனால் மல்லிகையில் அட்டைப்படங்களென்றால் அது ரமணியின் அட்டைப்படங்களாகத் தானிருக்க வேண்டுமென்று விரும்பியவர். ஓவியத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்து யாழ்ப்பாணத்து ஓவியர்களில் என்றும் போற்றப்படுகின்ற இவர் 2925-12-29ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!