Sunday, November 1

சுவாமி முருகேசனார் (பேப்பர் சுவாமி) காரைநகர்.

0

ஈழவள நாட்டின் யாழ்ப்பாணத்து மேற்கே சைவநெறியும் செழுந்தமிழும் சேர்ந்த சிறப்புக்குரிய காரைநகரிலே வீரபாகு வேலுப்பிள்ளை முருகேசு என்னும் இயற் பெயர் கொண்ட சுவாமிகள் 1932-04-16ஆம் நாள் மகநட்சத்திரமும் ஏகாதசி புண்ணிய திதியும் கூடிய வேளையில் வந்துதித்தார்.
சிறுவயது முதல் ஞானநாட்டம் கொண்ட சுவாமிகள் தமது சுகபோக வாழ்விலிருந்தும், இல் வாழ்க்கையில் இருந்தும், உலக வாழ்வில் இருந்தும் தம்மை விடுவித்து ஞான வாழ்வு வாழத்தொடங்கினார். பல மொழிகளில் எழுதவும் பேசவும் ஆற்றல் கொண்ட சுவாமிகள் ஆரம்ப காலங்களில் இங்கிலாந்து தேசத்திற்கான நாளேடுகளில் நிருபராகவும் கட்டுரையாளராகவும் பணியாற்றினார். இதனால் பல இந்திய மற்றும் உலகத் தலைவர்களின் தொடர்புகள் அவருக்கு கிடைக்கப்பெற்றது. இதனால் அவரின் முருகேசு என்ற இயற்பெயர் மறைந்து பேப்பர் சுவாமி என்னும் திருநாமம் பெற்றார்.
ஆரம்ப காலங்களில் கோவளம் வெளிச்சவீட்டிற்கருகில் தபோவனம் அமைத்து திருவீழிமழலை மரத்தின் கீழ் வீற்றிருந்து தியானம், நிஷ்டை கூடியிருந்தார். பின்னர் பல சீடர்கள் அவரை குருவாகப் போற்றி அவர் ஆச்சிரமத்திலேயே தங்கலாயினர். பின் சிறிது காலம் கோவளம் நட்டுப்பாணியில் கடலோரமருகே சுவாமிகள் ஓலையால் ஆன ஆச்சிரமம் அமைத்து சீடர்களுடன்; யாகம், பூசைகள் புரிந்து வாழ்ந்து வந்தார். அவ்வேளை இந்திய இலங்கை பல உயர் அதிகாரிகள் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்கு அவரின் தரிசனம் பெறுவதற்கு வந்து சென்றார்கள்.
சுவாமிகளின் ஞானச் சிறப்பு
தன்னை நாடிவருகின்ற பக்குவமுள்ளவர்களின் நோய் பிணியை போக்கினார். தொழில் பாதிப்பு மற்றும் பல குறைகளை போக்கியருளினார். இவரின் குருவருளினால் இவரின் சீடர்கள் சிறந்த அனுபூதிமான்களாகவும், பேராசிரியர்களாகவும் விளங்கியுள்ளார்கள். இன்றும் பல்வேறு உயர் பதவிகளை இவரின் சீடர்கள் வகிக்கின்றனர்.
சுவாமிகளின் சோதிடக் கலைஞானமும் கைவரப் பெற்றவர்.
மகாத்மா காந்தி அடிகளின் இறுதி முடிவு பற்றி முன்கூட்டியே அவருக்கு தபால் மூலம் செய்தி தெரிவித்திருந்தார். சுவாமிகள் இயல்பாக கவிபாடும் வல்லமை பெற்றிருந்தார். அவரின் பாடல் வரிகள் இறைவனைத்துதிப்பதுடன் எதிர்கால ஆருடங்களை குறிப்பதாக இருந்தமையை அவரின் சீடர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுவாமிகள் நயினை நாகபூஷணி அம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். அவரின் சமாதி ஆச்சிரமத்திற்குப் பின்னுள்ள கடற்கரையில் நின்று பார்த்தால் நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் தெரியும். தனது ஆச்சிரமத்தில் நந்தவனம் அமைத்து இறைபூசை செய்து வந்தமைக்கு ஆதாரமாக பூக்களைப் பறிப்பதற்காக செடிகளை வளர்ப்பதற்கும் நீர்;பாச்சுவதற்கும் தொட்டி கட்டி அல்லி, தாமரை, கருங்குவளை ஆகியவற்றை வளர்த்து வந்த தொட்டிகள் இன்றும் உள்ளன.
சுவாமி அவர்கள் 1976ஆம் ஆண்டு வைகாசிப் பரணி நட்சத்திரத்தில் தமது சீடர்களுக்கு அறிவித்து விட்டு மகா சமாதி எய்தினார். அவரின் சமாதி 2023ஆம் ஆண்டு வரை கிடுகினால் வேயப்பட்ட கொட்டிலாக இருந்து வந்துள்ளது. தற்போது சமாதி மேலே கற்கோயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிகளின் சீடர்களினால் முருகேசன் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. குருவருள் மகிமையால் ஐம்பது வருடங்கள் கடந்தும் அவரின் தெய்வீக ஞானநெறி, கருத்துக்கள் ஆய்வரங்காக 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: அதிபர், ஆய்வாளர்; திரு தி.தவரத்தினம், காரைநகர். இவருக்கு மனமார்ந்த நன்றி.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!