அறிமுகம்
திருநெல்வேலி திர்ஷிகா கலைக்கூட ஸ்தாபகரும் சிற்பக்கலை வல்லுனருமான
அமரர் நடராசா சற்குருநாதனவர்கள் இலங்கை மணித்திருநாட்டின் மணிமுடியாம் யாழ்ப்பாணத்தின் புகழ்பேசும் நகரங்களில் திருநெல்வேலி தனிச்சிறப்பு வாய்ந்தது. கம்மாளர் குலதெய்வம் அன்னை பத்திரகாளி ஊரின் நடுவில் எழில்மிகு கோலம் கொண்டு அருள் சொரியும் பதி. இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசம் எங்கும் தேர்கள், சப்பை ரதங்கள், திருமஞ்சங்கள், கைலாசவாகனங்கள் மற்றும் வாகனங்கள் இறைவனது பல்நிலை உருவச் சிலைகளை தாங்கி வலம் வருகின்றன என்றால் அதற்கு மூலகாரணிக ளாகவும் ஆக்குதல் சிற்பிகளாகவும் விளங்குபவர்களில் திருநெல்வேலி சிற்பிகளுக்கு முதலிடம் உள்ளது. ஆறுமுகம் சிற்பாசிரியார் இவரின் வழித்தோன்றல்களான கலாகேசரி தம்பித்துரை, ஜீவரட்ணம் என உலகப்புகழ் பெற்ற சிற்பாசாரியார்கள் வாழ்ந்த இத்தகைய பெருமை மிகுந்த திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த விஸ்வ குல திலகர் இல்லறமாம் நல்லறத்தில் இணைந்த நடராசா செல்லம்மா தம்பதியருக்கு மகனாக சற்குருநாதன் (குரு) வந்தமைந்தார்.
கல்வியும் கலையும்
இளமைக் காலத்தில் அழகும், துடிப்பும் மிக்கவராக விளங்கிய சற்குருநாதன் பாடசாலைக் கல்வியை திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், செங்குந்தா இந்துக் கல்லூரியிலும், தொடர்ந்தார். எனினும் குலத்தொழிலில் தனது புதல்வனை சிகரம் தொட வைக்க வேண்டும் எனக்கருதிய தந்தையார் நடராசா, அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் முன்னணி சிற்பக்கலைக்கூடமாக விளங்கிய திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாலயத்தில் தனது மகனை இணைத்துக் கொண்டார். சிற்பச்சக்கரவர்த்தி ஆறுமுகம் ஜீவரட்ணம் ஆச்சாரியாரை தனது ஆஸ்தான குருவாக வரித்துக் கொண்ட சற்குருநாதன், ‘குரு’ என அனைவராலும் அழைக்கப்படும் அன்புப் பெயருடன் கலைபயிலத் தொடங்கினார்.
ஆறுமுகம் சிற்பாலயம் எங்கெல்லாம் தேர்களின் நிர்மாணிப்பு பணிகள், மற்றும் சிற்பத்தயாரிப்பு பணிகளை மேற்கொண்டதோ அங்கெல்லாம் சென்று சக பணியாளர்களுடன் இணைந்து ‘குரு’ சிற்பக்கலையைப் பயின்றார். குறிப்பாக சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரட்ணம் ஆச்சாரியார் அவர்களால் திருகோணமலை பத்திரகாளி ஆலயம், வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம், புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், பறாளாய் முருகன் ஆலயம், கண்டி கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் நிர்மாணிக்கப்பட்ட சித்திரத்தேர்களில் சற்குருநாதன் (குரு) இணைந்து பணியாற்றியதுடன் தமது தனிப்பட்ட திறமைகளையும் வெளிப்படுத்தி இருந்தார். மூத்த சிற்பாச்சாரியார் களிடம் உள்ள சிற்பக் கலை நுணுக்கங்களை யும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்த சற்குருநாதன் (குரு) ஆ.ஜீவரட்ணம் ஆச்சாரியாரின் மூத்த சகோதரன் கலாகேசரி ஆ.தம்பித்துரை ஆச்சாரியாரிடமும் சென்று கலைபயின்றார். இந்தக் காலப்பகுதியில் கலாகேசரி நிர்மாணித்த மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலயம், குப்பிளான் பிள்ளையார் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், புலோலி புற்றளைப் பிள்ளையார் ஆலய சித்திரத்தேர்களில் தமது தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு ந.சற்குருநாதனுக்கு கிட்டியது.
எந்தவொரு வேலையைச் செய்தாலும் அதனை படிமம் பிசகாமல் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அமரர் சற்குருநாதனுக்கு கூடிப்பிறந்தது. அதனை அவர் இவ்வுலக வாழ்விற்கு விடைகொடுக்கும் தறுவாய் வரையில் உறுதியுடன் பின்பற்றினார். இவ்வாறான நிலைப் பாட்டை தான் பின்பற்றுவதற்கு தனது தனது குருநாதர்களான சிற்பச்சக்கர வர்த்தி ஆ.ஜீவரட்ணம் ஆச்சாரியார், கலாகேசரி ஆ.தம்பித்துரை ஆச்சாரியார், சிற்பச்சிகரம் செ.கந்தசாமி ஆச்சாரியார் ஆகியோரே காரணம் என அடிக்கடி கூறி வந்தமையும் இங்கு நோக்கத்தக்கது. வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் புரிவது என்ற சிந்தனை எதிர்ப்பட்டதால் சவுதி அரேபியா சென்ற சற்குருநாதன் அவர்கள், அங்கு தனக்கென நல்லதொரு நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டது டன் அந்த நண்பர்வட்டம் அவரது இறுதித் தறுவாய் வரையில் நீடித்தது.
தனது உடன்பிறந்த சகோதரர்கள் மீதும், மைத்துனர்கள் மீதும் அளவுகடந்த அன்பும், பாசமும் காட்டிய சற்குருநாதன் அவர்கள் தனது தந்தைவழி தாய்வழி உறவினர்கள் மீதும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அவர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் தானே முன்னின்று அனைத்தையும் செய்து முடிக்கும் மனப்பாங்கை அவர் கொண்டிருந்தார். இதனால் ‘குரு’ இருந்தால் போதும் எல்லாம் முறைப்படி நடக்கும் என்ற எண்ணத்தை அவர் எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தினார்.
சற்குருநாதன், தனது தாய்மாமனும் அத்துடன் அனைவராலும் ஆசை மாமா என அழைக்கப்பட்ட வருமான திருநெல்வேலி அரச விவசாயப் பண்ணை யின் போதனாசிரியர் அமரர் முருகேசு இரத்தினம் அவர்களின் இரண்டாவது புத்திரி மங்கையற்கரசியை மணம் முடித்தார். இவர்களின் இல்லறத்தின் நற்பேறாய் திர்ஷிகா, சரண்யா, வர்க்கீசன், விதுர்சன் என்னும் நான்கு பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். தமது பிள்ளைகளை நல்லவர்களாகவும், வல்லவர்க ளாகவும், ஏனையோருக்கு முன்னுதாரணமாகவும் வளர்க்க வேண்டும் என்பதில் சற்குருநாதன் அவர்களும் அவர்தம் துணைவியார் மங்கையற்கரசியும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்ததுடன் அதனை வாழ்நாளில் சாதித்தும் காட்டியிருந்தனர்.
தனது மனைவியின் இழப்பை தாங்க முடியாத இவர் தனது செல்வம் அனைத்தும் போய்விட்டதாக கருதி மனத்தாலும் உடலாலும் களைத்துப் போயினார். எனினும் தனது ஆண்பிள்ளைகளின் நல்வாழ்விற்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்து தமது சிற்பப் பணியினைத் தொடர்ந்தார்.
சிற்பச்சக்கரவர்த்தி அமரர் ஆ.ஜீவரட்ணம் ஆச்சாரியாரின் புதல்வன் ஜீ.ஜெயதீஸ் அவர்களுடன் தொழில் நிமித்தம் சுவிஸ்லாந்து சென்ற இவர், பின்னர் பின்லாந்து சென்று ஏறத்தாழ 4 நாள்கள் தமது மூன்று பேரப்பிள்ளைகளுடனும் நல்லபடியே பொழுதைச் செலவிட்டார்.
பேரப்பிள்ளைகளை கண்ணாரக் கண்டு திரும்பிய அமரர் சற்குருநாதன் (குரு) அவர்கள் தமது தொழில் முயற்சியை சிறிதேனும் கைவிடவில்லை. எவராலும் நினைத்துப் பார்க்கவோ அன்றி செய்து முடிக்கவோ முடியாத சிற்ப நுணுக்கங்கள் சற்குருநாதனின் படைப்புகளில் இருக்கும் அவற்றை வார்த்தைகளுக்குள் அடங்கிவிட முடியாது. இதற்கு அவரது வாழ்வின் இறுதிக் காலகட்டத்தில் அமைந்த சிற்பங்கள் சான்று. சிற்பக் கலைத்துறைக்குள் ஆழ்ந்து அகன்று சென்றோருக்கு மட்டுமே இது புரியும். ‘குரு’ எதனை புதிதாக வடிவமைத்தாலும் அவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு ரகம் இறுதியாக அவர் வடிவமைத்த பாம்புகள் பின்னிற்கும் திருவாசி இதற்கு உதாரணம் என்கிறார் அமரர் அமைந்திருந்ததாக சற்குருநாதனின் (குரு) மூத்த சகோதரி திருமதி சு.புவனேஸ்வரி (ஆனந்தி) குறிப்பிட்டுள்ளார்.
தொழில்கள் எங்கெல்லாம் இருக்கின்றது எனத் தேடிச் சென்று தொழில் பெறும் கலைஞர்கள் வசிக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒரு போதும் தொழிலை
தேடிச்செல்லாமல் தொழிலின் நேர்த்தி, சிறப்புக் கருதி தனது சிற்பாலயம் தேடிவரும் தொழில் தருநர்களை மட்டுமே நம்பி தொழில் புரிந்த வரலாறு ‘குரு’ விற்கு மட்டுமே உண்டு. இதுவே அவர் தமது மூத்த மகளான திர்ஷிகாவின் பெயரால் உருவாக்கிய ‘திர்ஷிகா கலைக்கூடத்திற்கு’ உரிய தனிச் சிறப்பாகும்.
தான் எவ்விதம் சிற்பாச்சாரியர்களைத் தேடிச் சென்று தொழில் பயின்றாரோ அதே போல் தன்னைத் தேடி தொழில் பயில வரும் இளைஞர்களை தனது வீட்டில் தங்குமிடம், உணவு வழங்கி தொழில் பயிற்றுவித்த சிறப்பும் ‘குரு’ ஆச்சாரியாருக்கு உண்டு. அது மட்டுமன்றி சிற்பங்களுக்குரிய ‘மால்’ போடுவதில் இவருக்கு நிகர் இவரே. குரு அண்ணர் மால் போட்டுத் தந்தால் அதுவே தமது படைப்புக்களுக்கு பெருமை சேர்க்கும் என திர்ஷிகா கலைக்கூடத்திற்கு வருகை தந்தோர் ஏராளம். தன்னை நாடிவரும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றி அனைத்து நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்த மாமேதை ‘குரு’ ஆச்சாரியார். இதனை மானசீகமாக இவரிடம் கலைபயின்றோர் தெரிவித்து நிற்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியில் ‘கம்மாளர் கவின்கலைக்கல்லூரி’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்ட போது அதில் பிரதான போதனாசிரியரக அமரர் சற்குருநாதன் அவர்கள் பணியாற்றி இருந்தார். வளர்ந்து வரும் பல இளைஞர்கள் அந்தக் கல்லூரியில் இணைந்து சிற்பம் பயின்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.
தமது குலதெய்வமாகிய திருநெல்வேலி பத்திரகாளி மீது அளவற்ற பக்தி மிக்கவராக விளங்கிய அமரர் சற்குருநாதன் அவர்கள் ஆலயத்திற்கான கொடிச்சீலை வரையும் மரபைத் தொடர்ந்து தானே மேற்கொண்டு வந்ததுடன், வருடாந்த மகோற்சவ காலங்களில் தினமும் பத்திரகாளி அன்னை வீதிவலம் வரும் வாகனம் எதுவென உணர்ந்து யாகசாலையில் குறிப்பிட்ட வாகனத்தின் வடிவில் கோலம் போட்டு சிறப்புச் சேர்ப்பார். அச்சமயம் அவரது தனித்திறமையை அனைவரும் அறிந்து கொள்வர். அது மட்டுமன்றி தமது தந்தையார் காலம் தொட்டு பின்பற்றி வந்த வருடாந்த திருவிழாவை தானே பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக நடாத்தியும் வந்தார். தனக்குப்பின்னர் திர்ஷிகா கலைக்கூடத்தையும், அதன் சீரிய சிற்பப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வர்க்கீசன், விதுர்சன் ஆகிய தமது இரண்டு மகன்களுக்கும் சிற்பக்கலையைப் பயிற்று வித்தார். தந்தையின் கலை நுணுக்கங்களை பின்பற்றும் வல்லுநர்களாக அவரது பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். எனினும் இன்னும் சில வருடங்கள் தமது தந்தையார் தம்முடன் வாழ்ந்து சுபகாரியங்களை காண்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று அவரது பிள்ளைகள் ஏங்கித் தவிக்கின்றனர். தனது சகோதர வழி பெறாமக்கள் மீதும், தமது மனைவி வழி பெறாமக்கள் மீதும் அளவிறந்த அன்பும், பரிவும் காட்டி வந்த ‘குரு’ ஆச்சாரியார் தமது மூத்த மைத்துனர் அமரர் வண்ணக் கலாநிதி அமரர் கனகராஜா மீது அளவிறந்த பக்தியும், பாசமும் காட்டி வந்தார். தமது சிற்பக் கூடத்தில் தமது மைத்துனரின் உருவப் படத்தை வைத்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தினமும் மலர் வணக்கம் செலுத்தி வந்தார்.
தமது பிள்ளைகளினதும், பேரப்பிள்ளைகளினதும் நன்மைக்காக, ஐயப்பனை நோக்கி கடந்த பல வருடங்களாக விரதம் இருந்து ஐயப்ப பூசைகளை மிகவும் சிறப்பாக நடத்தி வந்த குரு ஆச்சாரியார் ஐயப்ப பஜனை நடத்துவதிலும் வல்லவர். பல தடவைகள் ஐயப்பனைத் தேடி சபரிமலை யாத்திரையும் சென்று வந்ததுடன் ‘குருசாமி’ என அனைவரும் அழைக்கும் பாக்கியத்தையும் பெற்றிருந்தார்.
சிற்பரசன், சிற்பகலாவாருதி, சிற்பகலாஜோதி கலைக்குரிசில் என்ற
கௌரவங்களால் போற்றப்பட்ட அமரர் சற்குருநாதன் அவர்கள் திர்ஷிகா கலைக்கூடம் மூலமாக தமது முழுமையானகலைநுணுக்கங்களையும் பிரயோகித்து திருநெல்வேலி தலங்காவில் பிள்ளையார் ஆலயத் திற்கு எழிலுறு 13 திருமஞ்சத்தையும், வண்ணார் பண்ணை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், இருபாலை விளையாட்ட ரங்க வீதி வீரகாளியம்மை ஆலயம் ஆகியவற்றிற்கு சித்திரத் தேர்களையும், இலங்கையின் அனைத்துப் பகுதியில் உள்ள ஆலயங்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள ஆலயங்களுக்கும் அழகு மிகுந்த கைலாச வாகனம், சப்பைரதம், வாகனங்கள் (எண்ணிலடங்காதவை) மற்றும் பல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எழில்மிகுந்த கடவுளர்களின் சிலைகளையும் தேசிய வீரர்கள், விளையாட்டு வீரர்களின் உருவங்களையும் சிலைகளாக வடிவமைத்திருந்தார். விசேடமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நிறுவப் பட்ட ஆவணக் காப்பகம் இதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாகும். சிற்பத் துறையில் தமக்கென தனிப்பாணியைப் பின்பற்றிய அமரர் சற்குருநாதன் ஆச்சாரியாரின் பணியைப் பாராட்டி பல்வேறு கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. சிற்பகலாவாருதி, சிற்பக்கலைச் செம்மல், சிற்பரசன், கலைக்குரிசில் என்பன அவற்றுள் சிலவாகும். இவ்விதம் சிற்பக்கலைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்த சற்குருநாதன் (குரு) ஆச்சாரியார் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட 2025.10.30 அன்று வழமைபோல் காலையில் எழுந்து கடவுளர்களுக்கு மலர் வணக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்திருந்த வேளையில் மாரடைப்பு காரணமாக பூவுலக வாழ்வை நீத்தார்.











